Enable Javscript for better performance
ஆடியில் அவதரித்த கருட பகவான்!- Dinamani

சுடச்சுட

    
    8

    ஆடி சுவாதியில் அவதரித்த ஸ்ரீ கருடபகவான் பெருமாளின் வாகனமாகத் திகழ்கிறார். இவர் சில திருத்தலங்களில் வித்தியாசமான கோலத்திலும் அருள்புரிகின்றார். பொதுவாக, பெருமாள் ஆலயங்களில் இருகரம் கூப்பியவாறு அஞ்சலி கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ கருடாழ்வார், சில தலங்களில் அமிர்தகலசம் மற்றும் வெண்சாமரத்தை ஏந்திய கோலத்திலோ அல்லது நாகத்தை ஏந்தியவாறோ காட்சி தருவதைத் தரிசிக்கலாம்.

    ஸ்ரீ ரங்கம் ஆர்யபட்டாள் வாசலில் இருபுறமும் கருடனும் சக்கரத்தாழ்வாரும் துவார பாலகர்களாகக் காட்சி தருகின்றனர். இங்கு சுமார் 3 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தரும் கருடபகவானின் இருகரங்களில் சங்குசக்கரமும் பின் இரு கரங்களிலும் கதாயுதமும் கத்தியும் உள்ளன. மேலும் இவர் கரண்ட மகுடம், சக்கர குண்டலங்கள், பூணூல், இடுப்பில் மேகலை ஆபரணம், கோரைப்பற்கள் மற்றும் இருபுறமும் விரித்த இறக்கைகள் ஆகியவற்றுடன் காட்சி தருவது சிறப்பு. இக்கோயிலின் நான்காவது பிரகாரத்தில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு தனிச் சந்நிதி உண்டு. இங்கு, சுமார் 5 அடி உயர பீடத்தில் 12 அடி உயரத்துடன் அமர்ந்த நிலையில் வடக்கு நோக்கி கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். ஸ்ரீ கருடபகவான்  நான்காவது சுற்றில் உள்ளார். ஐந்தாவது சுற்றில் உள்ள ஸ்ரீ அம்ருத கலச கருடன் சந்நிதி மிகவும் விசேஷமானது. இச்சந்நிதியில் சுமார் இரண்டரை அடி உயரத்துடன் கல் விக்கிரகமாகத் திகழும் ஸ்ரீ கருடபகவான், மண்டியிட்ட நிலையில் நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அவரின் முன் இருகரங்கள் கூப்பிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாக உள்ளன. பின் வலக்கையில் அமிர்த கலசமும் இடக்கையில் படம்விரித்த நாகப்பாம்பும் உள்ளன.

    தஞ்சை மாவட்டம், திருவெள்ளியங்குடி திருத்தலத்தில் உள்ள ஸ்ரீ கோலவல்லி ராமர் ஆலயத்தில் ஸ்ரீ கருடாழ்வார் கைகளில் சங்கு- சக்கரம் ஏந்தி, மேனியில் ஒன்பது பாம்புகளை அணிந்தவராக பாதி எழுந்து, பாதி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். குடந்தை நாச்சியார் கோயிலில் அருள்புரியும் கல்கருடன் மிகவும் புகழ் பெற்றவர். ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில் கருவறையில் ஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் ஆகியோருடன் ஸ்ரீ கருடரையும் தனிச்சந்நிதியில் தரிசிக்கலாம். நெல்லைக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தலத்தில் சிறகுகளை உயரே தூக்கி பறக்கும் நிலையில் ஆடல் பறவையாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ கருடாழ்வார். திருக்கண்ணக்குடி திருத்தலத்தில் ஸ்ரீ கருடாழ்வார் இருகரம் கூப்பியவாறு இல்லாமல் வித்தியாசமாக இருகரங்களையும் கட்டியபடி காட்சி தருகிறார்.

    பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு எதிரேதான் கருடாழ்வார் காட்சி தருவார். ஆனால் திருநெல்வேலி மாவட்டம், தென்திருப்பேரை தலத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் கருடன் இடதுபுறம் ஓரமாக விலகி இருப்பதைக் காணலாம். காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள காவேரிபாக்கம் ஸ்ரீ சுந்தரவரதர் ஆலயத்தில் கருடபகவான், தன் இடது காலை மடித்து ஊன்றி வலது முழங்காலை மடித்து முட்டி தரையில் பட, சிறகுகளை உயரே தூக்கிப் பறக்கத் தயாராக இருக்கும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணமங்கை தலத்தில் கருடாழ்வார் பெரிய திருவுருவில் காட்சி தருகிறார். பாம்பை ஆடையாக உடுத்திக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்கு ஒன்பது கஜம் புடைவையை உடுத்துகிறார்கள். பண்ருட்டியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள திருவதிகை ஸ்ரீ சாரநாராயணப் பெருமாள் கோயிலில் வழக்கத்திற்கு மாறாக சங்கு சக்கரத்துடன் கைகளைக் கட்டியபடி சேவை சாதிக்கிறார்.

    - டி.ஆர். பரிமளரங்கன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai