Enable Javscript for better performance
ஊக்கம் கொடுத்து ஏக்கம் தீர்க்கும் எல்லையம்மன்!- Dinamani

சுடச்சுட

  
  9

  சோழ மன்னன் ஒருவன் வேட்டைக்காக பரிவாரங்களுடன் கானகத்துக்குச் சென்றான். நெடுந்தூரம் காட்டில் அலைந்தவனுக்கு அடங்காத தாகம் ஏற்பட, நீர்நிலையை தேடிப் பாதுகாவலர்களுடன் சென்றான். அருகில் தண்ணீர் ஏதும் கிடைக்காததால் அனைவரும் மரநிழலில் இளைப்பாறினர். உடன் சென்ற வேட்டை நாய் நீர்நிலையை தேடிச் சென்றது. அப்போதுதான் ஓரிடத்தில் ஊற்று ஒன்று இருப்பதைக் கண்டு பிடித்தது. பின்னர் மன்னனை அழைத்து வர, மன்னன் தாகத்தைத் தீர்க்கும் ஆர்வத்தில் ஊற்றை நெருங்கினான். அச்சமயத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

  குளத்தின் மையத்தில் இருந்து எலுமிச்சம் பழங்கள் வரிசையாக வந்தன. அங்கு ஏதோ அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த மன்னன், தாகத்தைத் தணித்துக்கொண்டு எலுமிச்சம் பழங்களை எடுக்க ஆணையிட்டான். ஊற்றுப் பெருக்கெடுத்த மையப் பகுதியில் வலையை விரித்து இழுத்தனர். அச்சமயத்தில்தான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. வலையில் சிக்கியது ஓர் அம்மன் சிலை! மிகுந்த மகிழ்ச்சி கொண்ட மன்னன், பயபக்தியுடன் அந்தச் சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்தான். ஊற்றின் நடுவே அம்மன் வந்ததால் அவ்வூர் ஊற்றுக்காடு எனப்பட்டு, பின்னாளில் ஊத்துக்காடானது.

  பல ஆண்டுகளுக்குப்பிறகு, மன்னனின் பாதுகாவலர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், தம்மை ஊரின் கிழக்கு எல்லையில் பிரதிஷ்டை செய்யும்படியாக வாக்குச் சொல்லவும் அதன்படி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். ஆனால் அம்மனின் உக்கிரப் பார்வையால் அவ்வூர் பகுதிகள் பற்றி எரிந்தன. அதன்பின்னர் அச்சிலை கருவறையில் நேராக வைக்கப்படாமல் சற்றுத் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் அம்மனை சாந்தப்படுத்தும் பூஜைகளும் நடத்தப்பட்டன.

  கிழக்கு நோக்கிய கருவறையில் அம்மனுக்கு பெரிய சிலை அமைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. அதோடு மன்னன் கண்டெடுத்த பழைய சிறிய சிலையும் அதன் அருகிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள பலிபீடம் மிகவும் வித்தியாசமாக கூம்பு வடிவத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும். இதனால் எல்லையைக்காக்கும் இந்த அம்மனின் கோபத்துக்கு பயந்து தீய சக்திகள் போன்றவை இவ்வூருக்குள் வராது என்கின்றனர் இவ்வூர் மக்கள்.

  ஐந்துநிலை ராஜகோபுரம் கொண்ட இவ்வாலயத்தில் வருடம் முழுவதும் அம்மனுக்கு விழாக்கள் எடுக்கின்றனர். இருப்பினும் ஆடி மாதம் முழுவதும் பொங்கல் வைப்பது, நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது என பக்தர்கள் கூட்டத்தால் ஆலயம் நிரம்பி வழியும். இங்கு அம்மன் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்த சித்திரை மூல நட்சத்திரத்தையொட்டி, ஆண்டுதோறும் 10 நாள் பிரம்மோற்ஸவமும் சிறப்பாக நடைபெறுகின்றது. அச்சமயம் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பைரவன்குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும்.

  பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் விளங்கும் இந்த ஊத்துக்காட்டு எல்லையம்மன் திருமண பாக்கியம், புத்திரப்பேறு, நல்ல தொழில் என பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அருள்தந்து ஊக்கம் கொடுக்கும் மாதரசியாக விளங்குகிறாள். வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் இங்கு தவறாமல் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

  ஊத்துக்காடு திருத்தலம், சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் வாலாஜாபாத்திற்கு போகும் பாதையில் அதற்கு முன்பாக 3. கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  - மோகனாமாறன்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai