Enable Javscript for better performance
ஏற்றவனுக்கு ஏற்றம் கொடுப்பது ஏற்றம்- Dinamani

சுடச்சுட

  

  ஏற்பவனை ஏசாது ஏற்றது கொடுத்து ஏற்றம் பெறுவது போற்றத்தக்கது.

  ""நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக செலவிடுங்கள். தவிர, உங்களின் கைகளாலேயே நீங்கள் அழிவை ஆக்கி கொள்ளாதீர்கள். பயனுள்ளவற்றில் செலவிடுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் பரோபகாரிகளை நேசிக்கிறான்'' என்று குர்ஆனின் 2- 195 ஆவது வசனம் கூறுகிறது. இவ்வசனத்தில் அழிவை ஆக்கிக்கொள்ளாதீர்கள் என்பதின் பொருள் ஏழ்மைக்கு அஞ்சி அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதைத் தவிர்த்து கொள்ளுதல் என்று ஹுதைபா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கமளித்து தர்மம் செய்வதிலிருந்து தன்னைத் தடுத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

  ஒருவர் அவரின் மனைவியுடன் அமர்ந்து உணவு உண்டார். வாசலில் ஒருவர் யாசகம் கேட்டார். மனம் இளகிய மனைவி ஒரு ரொட்டியும் ஒரு துண்டு கறியும் வாசலில் நின்றவருக்கு வழங்கினாள். திரும்பிய மனைவியை இரும்பு உலையில் உருகி கொதிப்பது போல் கோபம் கொப்பளிக்க ""சுவைத்து சாப்பிட்ட ரொட்டியையும் கறியையும் வெட்டி பயலுக்குக் கொட்டி விட்டாயே'' என்று ஏசி பேசி தூஷித்து "தூர போ' என்று துரத்தி விவாகரத்து செய்துவிட்டான்.

  காலம் கடந்து விதவையான அவளை ஒருவன் மறுமணம் செய்தான். ஆண்டுகள் அகல ஆனந்தமாய் வாழ்ந்தனர் அவர்கள். இரண்டாம் கணவனுடன் இன்பமாய் உணவு உண்ணும் வேளையில் வாசலில் யாசகனின் பரிதாபக் குரல். அப்பெண் பழையபடியே ஒரு ரொட்டியும் ஒரு துண்டு கறியையும் எடுத்துச் சென்றாள். பிச்சைக்காரனைப் பார்த்து மயக்கமுற்று விழுந்து விட்டாள்.

  ஓடி வந்து மனைவியைத் தூக்கி நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தான் கணவன். மயக்கம் மறைந்து உணர்வு பெற்ற உத்தம மனைவியிடம் மயக்கமுற்றது ஏன் எனக் காரணத்தைக் கேட்டான் கணவன். வாசலில் யாசகம் கேட்டவர் அவளின் முதல் கணவர் என்று பதில் கூறினாள் மனைவி.

  இரண்டாம் கணவன் களிப்புற்று ""அவனை உற்று நோக்கி உன்னிப்பாய் கவனித்து யாரென்று கணித்திடு'' என்று கூறினான். அவள் அவனைப் பார்த்தாள். அவன் கூறினான் முன்னொரு நாள் வாசலில் யாசகம் கேட்டு ரொட்டியும் கறியும் பெற்றவன்'' என்று கூறினான். இருவரும் இன்பமாய் இல்லறத்தில் நல்லறம் பேணி வாழ்ந்ததை கஸஸில் அவ்லியா வபிர்தவ்ஸீல் அஸ்பியா என்ற நூல் கூறுகிறது.

  ஸதகா (தர்மம்) என்பது யாசிப்போரை நிராசையாக்கிவிடாது ஈவது. அவ்வாறு ஈவது செல்வத்தைத் தேய்க்காது பெருக்கும் என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்பவர் அபுஹீரைரா (ரலி) நூல் - மிஸ்காத், முஸ்லிம். இதனை விளக்கும் மிஸ்காத்தில் உள்ள மற்றொரு மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், ""என் கணவர் ஜுபைர் (ரலி) கொடுத்ததைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை. அதனை, நான் தர்மம் செய்யலாமா?''

  என்று கேட்டார்கள். ""அதிகம் தர்மம் செய். முடிச்சுப் போட்டு வைக்காதே! உன்மீதும் அருள் மூடப்பட்டு போகும்'' என்று எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.

  இல்லை என்று சொன்னதால் இருந்த இறைச்சி கல்லான நிகழ்ச்சி. நந்நபி (ஸல்) அவர்கள் வீட்டிலில்லாது வெளியில் சென்ற சமயத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வந்த இறைச்சியை அவர்களின் மனைவி அன்னை உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் பெற்று பத்திரமாக பாத்திரத்தில் மூடி வைத்தார்கள். அப்பொழுது வீட்டு வாசலில் யாசகம் கேட்ட யாசகருக்கு போஷிக்க போதியது எதுவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். விழுமிய நபி (ஸல்) அவர்கள் வீடு திரும்பியதும் உணவு அளித்திட பாத்திரத்தைத் திறந்த உம்மு ஸல்மா (ரலி) உறைந்து நின்றார்கள். பாத்திரத்தில் பத்திரமாக வைத்து மூடிய இறைச்சி இல்லை; வெள்ளை கல் இருந்தது. நடந்ததை நடந்தவாறு நபி (ஸல்) அவர்களிடம் நவின்றார்கள். உம்மு ஸல்மா (ரலி) வாசலில் வந்து கேட்ட யாசகருக்கு வழங்க மறுத்த இறைச்சியை இறைவன் கல்லாக்கி விட்டான் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

  தேவையான நேரத்தில் காலத்தில் தேவையானவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவதே உன்னத தர்மம். ""அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளிப்பவர்களுக்கு அல்லாஹ் அதை இரட்டிப்பாக்கி தருகிறான்'' என்ற எழில்மறை குர்ஆனின் 2-32, 57-11 ஆவது வசனங்கள் வரையறுத்து கூறுகிறபடி கூசாது குறைக்காது இறைவழி செலவு என்னும் தர்மத்தைத் தவறாது வழங்கி அவனியில் நல்வாழ்வு வாழ்ந்து மறுமையிலும் நற்பேற்றினைப் பெறுவோம்.

  - மு.அ. அபுல் அமீன்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai