Enable Javscript for better performance
தன்னம்பிக்கை கொடுக்கும் பாராட்டு!- Dinamani

சுடச்சுட

    
    12

    ஒரு பள்ளியில்  12-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே அடிக்கடி பிரச்னைகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டே இருந்தன. இதை எவ்வாறு தீர்த்து வைப்பது என்று குழம்பிய அந்த வகுப்பு ஆசிரியை ஒரு முடிவெடுத்தார். தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார். ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் மாணவர்கள் எழுதி முடித்தவுடன், ஆசிரியை சொல்கிறார் -

    "ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்' என்று. மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு தோன்றியதை

    எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

    வாரக்கடைசி, ஆசிரியை ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள் அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார். மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கத் துவங்கினர்.

    "நான் இவ்வளவு சிறப்பானவனா..! என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா..!' அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குணாதிசயங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் உள்ள தவறான எண்ணங்கள் குறைந்து, அன்பு அதிகரிக்கிறது. வகுப்பறையே சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

     நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம். ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக, அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

    ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை - அநேகமாக  நாம் வெளிப்படையாக பாராட்டத் தவறி விடுகிறோம். கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.

    பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழிகள் 18:24-இல் ""சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்ட வேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு!'' என்றும் மேலும் நீதிமொழிகள் 27:9-இல் ""பரிமளத் தைலமும் சுகந்த தூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த உலகில் அனைத்து உயிர்களுமே, பாராட்டுதலை எதிர்பார்க்கிறது. கிடைத்தால் சந்தோஷப்படுகிறது. யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

    வெளிப்படையான பாராட்டுதல் - அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும். நல்ல குணங்கள் மேலும் மேம்படவும், தோழமை உணர்வு அதிகரிக்கவும். மனிதர்களை மேலும் நல்லவர்களாக உருவாக்கவும் இது உதவும்.

    -ஒய்.டேவிட்ராஜா

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai