Enable Javscript for better performance
இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் தர்மேஸ்வரர்!- Dinamani

சுடச்சுட

  

  இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் தர்மேஸ்வரர்!

  By DIN  |   Published on : 15th August 2016 07:45 AM  |   அ+அ அ-   |    |  

  5

  பழைமை வாய்ந்த திருக்கோயில்களில் உள்ள மூர்த்தங்களை மகான்களும், சித்த புருஷர்களும் வணங்கியதோடு மட்டுமல்லாமல் யந்திர பிரதிஷ்டையும் செய்துள்ளனர்.  அந்த மந்திரப் பிரயோகம் செய்யப்பட்ட யந்திரங்கள் பெருமளவில் மூர்த்தங்களுக்கு கீழே வைக்கப்பட்டுள்ளதால் ஈர்ப்பு சக்தி மிகுந்து காணப்

  படுகிறது. அவ்வகையில் ஒரு பழைமையான திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

  சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை என்ற இடத்திலிருந்து மதுராந்தகம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் அணைக்கட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் அறம் வளர்த்தீஸ்வரர் என்றும் தர்மேஸ்வரர் என்றும் திருநாமம் தாங்கி அருளுகின்றார்.

  இந்திய தொல்லியல்துறை வெளியிட்டுள்ள 1912 - ஆம் ஆண்டு கல்வெட்டு அறிக்கையில் காணப்பட்ட கல்வெட்டுச் செய்திகளை அறியும்பொழுது இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பினை உணரமுடிகிறது.

  கிழக்கு வாயில் கொண்ட இத் திருக்கோயில் வளாகத்தில் நறுமணம் வீசும் கொன்றை மரம், நாகலிங்க மரம், அத்திமரம் மற்றும் மலர்ச் செடிகள் பசுமையோடு நமது கண்களுக்கு குளிர்ச்சியூட்டி நம்மை வரவேற்கின்றன. திருக்கோயிலின் உள்ளே நுழையும்முன் பலிபீடத்தை வணங்கிச் செல்கிறோம். அதனை அடுத்து, நான்கு தூண்களைக் கொண்ட நந்தி மண்டபம். நந்தியம்பெருமான் அளவில் மிகப் பெரிய வடிவத்தில் நெடிதுயர்ந்து அமர்ந்த கோலத்தில் உள்ளார். நந்தியம்பெருமானின் கழுத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ருத்திராட்சமாலை, சங்கிலி, சலங்கை, மணி போன்ற அணிகலன்கள் அழகூட்டுகின்றன.   

  இதனருகில் சோழர்கால கல்வெட்டு பொறிக்கப்பட்ட கட்டடப்பகுதி காணப்படுகிறது. இத்திருக்கோயில் சோழர்கால கோயிலாக விளங்கி, பிற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கவேண்டும் என ஊகிக்க முடிகிறது.

  கருவறையில் மூலவர் ஸ்ரீ அறம்வளர்த்த ஈஸ்வரர் எனும் ஸ்ரீ தர்மேஸ்வரர் வட்டவடிவ ஆவுடையாருடன் அமையப்பெற்ற சிவலிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கின்றார்.

  ஈஸ்வரன் சந்நிதிக்கு வலப்புறம் அம்பிகை "அறம்வளர்த்த நாயகி', "தர்மவர்த்தினி' என்ற திருநாமங்களைத் தாங்கி, தனது கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும் அடியவர்களின் துயரங்களை போக்கும் தன்மையில் சந்நிதி கொண்டு அருளுகின்றார்.

  அம்பிகை சந்நிதிக்கும் இறைவன் சந்நிதிக்கும் நடுவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக சந்நிதிகொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

  வெளிச்சுற்றில் கோட்டங்களில் தெற்கில் அமர்ந்த நிலையில் ஸ்ரீ மஹா கணபதியும், ஸ்ரீ தட்சணாமூர்த்தியும், மேற்கில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும், வடக்கில் ஸ்ரீ பிரம்மா மற்றும் ஸ்ரீ துர்க்கையும் அமைந்து அருளுகின்றனர். சண்டிகேஸ்வரப் பெருமான் ஒரு சிறிய சந்நிதியில் வீற்றிருந்து அருள்புரிகின்றார். நவக்கிரஹ சந்நிதி தனியே அமைந்துள்ளது. 

  இத்திருக்கோயிலுக்கு சற்று தொலைவில் காவாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது.  வடக்கு நோக்கிய திருக்கோயில். கிராம தேவதையாக எழுந்தருளி அருள்புரியும் காவாத்தம்மன் ஆலயம் கிராம மக்களால் சிறப்பாக வழிபடப்படுகிறது. கோயிலின் கருவறையில் நுழைவாயிலின் வலப்புறம் கணபதியின் பெரிய வடிவம் அமைந்துள்ளது. கருவறையில் வைஷ்ணவி, பிராமி, கெüமாரி, இந்திராணி, வராஹி, மஹேஸ்வரி, சாமுண்டி ஆகிய சப்தமாதர்களும் எழுந்தருளி அருள்புரியும் அற்புதக் கோலத்தைக் காணலாம்.  சப்த கன்னியர்களுக்கு ஒருபுறம் யோக பட்டம் தரித்த வீரபத்திர சிவனையும் கணபதியையும் சேர்த்து வழிபடலாம்.

  இது தர்மபுத்திரர் ஆராதித்த தலமாகும். அதனால் ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீதர்மேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருளுகின்றனர். தர்மராஜா சூதாட்டத்தில் தான் இழந்த செல்வத்தை இவ்வாலய ஈசனை வழிபட்டு அவர் அருள் பெற்று மீட்டதாகத் தெரிகிறது. 

  தர்மத்தைக் காக்கும் தர்மேஸ்வரரை வழிபடுவோரும், இவ்வாலய வளர்ச்சியில் பங்கு கொள்வோரும் வாழ்வில் தாங்கள் இழந்த அனைத்து செல்வங்களையும் மீட்பர் என்பது தெய்வப் பிரஷ்ணத்தின் மூலம் அறிய முடிகிறது.

  திருமணத் தடை நீக்கி அருளும் ஸ்ரீ அறம் வளர்த்த ஈசனையும், ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியையும் கிராம தேவதையாக இருந்து அருள்புரியும் காவாத்தம்மனையும் கண்டு வழிபட்டு நலமடைவோம்.

  தொடர்புக்கு : 97860 58325.

  - எழுச்சூர் க. கிருஷ்ணகுமார்

  kattana sevai