Enable Javscript for better performance
சேணிலை உணர்வாட்சி! - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்- Dinamani

சுடச்சுட

  
  7

  அறிவியலுக்கு அப்பால் -14

  ஸ்பெயின் நாட்டில் பார்சலோனா நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு 1980- ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் பயத்தினால் முகம் வெளிறிப் போன 81 வயதாகிய செனோரா இஸபெல் காஸாஸ் (Senora Isabel Casas) என்னும் ஒரு பெண்மணி வந்தாள். தனது வீட்டிலிருந்து சில கட்டடங்கள் தள்ளியிருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு நபர், ஆபத்தில் இருப்பதாகத் தமது காதில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதாக அந்தப் பெண்மணி கூறியபோது, காவலர்கள் அவரை எள்ளி நகையாடினர்.

  ஆனாலும், பின்னால் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டு, அதனால் தாங்கள் கடமை தவறிய குற்றத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சத்தில் காவலர்கள் அந்தப் பெண்மணி கூறிய வீட்டிற்குச் சென்றனர். வீடு வெளியே பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டுச் சொந்தக்காரரை இரண்டு நாட்களாகத் தாங்கள் பார்க்கவில்லை என்று பக்கத்துக் குடியிருப்புகளில் இருந்தவர்கள் கூறினார்கள்.

  காவலர்கள் பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே ஒரு நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் அந்த வீட்டுச் சொந்தக்காரர் கைகளும் கால்களும் கட்டப்பட்டு, நினைவற்ற நிலையில் இருந்தார். உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்த அவரைக் காவலர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்ததும், தன்னை இரண்டு பேர் வீட்டிற்குள் புகுந்து தாக்கிவிட்டுப் போன செய்தியை அவர் காவலர்களுக்குத் தெரிவித்தார்.

  தான் நினைவிழந்து போவதற்கு முன்னால் ""நான் ஆபத்தில் இருக்கிறேன், என்னை யாராவது காப்பாற்றுங்கள்'' என்று தான் தொடர்ந்து திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததாகவும், அப்படிச் சொல்லும்போது ஏற்படும் அதிர்வலைகளை வானொலி அலைகளைப்போல் யாராவது பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று தான் நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

  காஸாஸ் என்னும் மூதாட்டி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்த செய்தியைக் கேள்விப் பட்டதும், தான் விடுத்த காற்றலைச் செய்தியை அந்தப் பெண்மணி சரியாகப் படித்து விட்டாள் என்று அந்த நபர் நம்பினார்.

  இப்படி ஒருவர் நினைப்பதை இன்னொருவர் ஐம்புலன்களின் தொடர்பின்றியே அறிந்து கொள்ள முடியுமா, மாற்றார் உள்ளத்தில் இருப்பதை அறிந்துகொள்ளும் சிறப்பாற்றல் உண்மையிலேயே இருக்கிறதா போன்ற கேள்விகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. அப்படி அடுத்தவர்கள் உள்ளத்தில் நினைப்பதை அறியும் சிறப்பாற்றலுக்கு "டெலிபதி' (telepathy) என்னும் பெயரைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளராகிய ஃஎப்.டபிள்யூ.ஹெச்.மையர்ஸ் (F.W.H.Myers) என்பவர், 1882-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

  "டெலிபதி' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு "சேணிலை உணர்வாட்சி' என்னும் இணைச் சொல்லை சென்னைப் பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ஆங்கிலம்- தமிழ்ச் சொல்லகராதி வழங்கியுள்ளது. ஒருவர் நினைப்பதைப் பேச்சின் மூலமோ, எழுத்தின் மூலமோ, செய்கையின் மூலமோ, ஏன் கண்களின் மூலமோ கூட இன்னொருவருக்குத் தெரியப் படுத்திவிட முடியும். ஆனால், வெவ்வேறு இடங்களில் இருக்கும் இருவர், ஒருவரை ஒருவர் பார்க்காமலும், ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமலும், நம் ஐம்புலன்களுக்கு உட்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தாமலும், கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட முடியுமா என்னும் கேள்வி அறிவியலாளர்களுக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறது. பல நேரங்களில் மூடத்தனத்தின் முடைநாற்றத்தைச் சாட வந்த பகுத்தறிவாளர்களே கூட மாற்றார் உளம் அறியும் சிறப்பாற்றல் (டெலிபதி) உண்மையில் சாத்தியம்தான் என்று ஒத்துக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு.

  அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் திரு.உப்டன் பீல் சின்க்ளேர் (Upton Beall Sinclair) ஆவார். புலனாய்வு இதழியலின் மூலம் (Investigative Journalism) அமெரிக்காவைக் கலக்கிய புலிட்ஸர் (Pulitzer) விருது பெற்ற அந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர், தான் சார்ந்த சோஷலிஸக் கட்சியின் கடும் அதிருப்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு காலத்தில் டெலிபதியைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அதற்குக் காரணம் அடுத்தவர் உள்ளத்தைப் படிக்கும் ஆற்றல் பெற்ற ஒருவர், திரு.சின்க்ளேர் அவர்களுக்கே மனைவியாக வாய்த்ததுதான்.

  தி ஜங்கிள் (The Jungle) என்னும் புதினத்தின் மூலம் அமெரிக்காவில் இறைச்சி கட்டும் தொழிலின் அவலங்களை திரு.சின்க்ளேர் வெளிக்கொண்டு வந்ததும், அமெரிக்காவில் மிகப் பெரிய எழுச்சி உருவாகி 1906-ஆம் ஆண்டில் இரண்டு பெரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதேபோல் பத்திரிகையியல் துறையில் மலிந்துவிட்ட கீழ்த்தரமான போக்கை (yellow journalism) வெளிச்சம் போட்டுக் காட்டிய அவருடைய இன்னொரு புதினம் "தி ப்ராஸ் செக்' (The Brass Check) ஆகும்.

  திரு.சின்க்ளேர் அவர்கள் 1913-ஆம் ஆண்டு, மேரி க்ரெய்க் கிம்ப்ரோ (Mary Craig Kimbrough) என்னும் பெண்மணியைத் தனது இரண்டாவது மனைவியாகக் கரம் பிடித்தார். சிறு வயது முதல் மாய மந்திரக் கலைகளில் (Occult Sciences) திருமதி. க்ரெய்க் ஈடுபாடு கொண்டிருந்தார். அடுத்தவர்கள் நினைப்பதைத் துல்லியமாக உணரும் ஆற்றலைத் திருமதி.க்ரெய்க் பெற்றிருந்ததைத் தானே நேரடியாகப் பலமுறை கண்டதும், மாற்றார் உள்ளத்தை அறியும் திறனைப் பரிசோதனைச் சாலையில் நிரூபிக்கும் முயற்சியில் திரு.சின்க்ளேர் ஈடுபட்டார்.

  1928-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 13-ஆம் நாள் தனது மனைவியின் இந்த இயல்பு கடந்த ஆற்றலைப் பரிசோதித்துப் பார்க்க, திரு.சின்க்ளேர் ஒரு முயற்சியை மேற்கொண்டார். திரு.சின்க்ளேர் அவர்களின் ஏற்பாட்டின்படி, அவரது வீட்டிலிருந்து 60 கி.மீ. தொலைவில் பாசடேனா (Pasadena) என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த அவரது மைத்துனராகிய திரு.இராபர்ட் இர்வின் (Robert Irwin) தன்னுடைய வீட்டின் ஒரு தனி அறையில் அமர்ந்து கொண்டு காலை 11.30 மணிக்கு அவருக்குத் தோன்றியவற்றைப் படமாக வரையத் தொடங்கினார். அதே சமயத்தில், திருமதி.க்ரெய்க் அவர்கள் தன்னுடைய இல்லத்தில் (60 கி.மீ தொலைவில்) திரு.இராபர்ட் இர்வின் வரையும் படங்களைத் தனது சக்தியால் கண்டுபிடிப்பதாகச் சொல்லி ஒரு சில படங்களை வரைந்தார். அவற்றைக் கையிலே எடுத்துக்கொண்டு தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு திரு.சின்க்ளேர் திரு.இர்வீனின் வீட்டுக்குப் போய் அவருடைய படங்களை வாங்கிப் பார்த்தபோது, அவர் பெரும் வியப்பிற்கு உள்ளானார். கண், செவி, மெய் முதலிய புலன்களின் தொடர்பின்றி, 60 கி.மீ. தொலைவில் ஒருவர் வரைந்து கொண்டிருந்த படங்களை அதே நேரத்தில் இன்னொருவரால் எப்படிச் சரியாக யூகிக்கவும், வரையவும் முடிந்தது என்னும் கேள்விதான் திரு.சின்க்ளேர் நடத்திய பரிசோதனைகளுக்கு ஆதாரமாக அமைந்தது.

  மாற்றார் மனதில் உள்ளதை அறியும் ஆற்றலை அறிவியல் ரீதியாகப் பரிசோதித்துப் பார்க்க, திரு.சின்க்ளேர் தனது மனைவியைக் கொண்டு நடத்திய 290 பரிசோதனைகளில் அவரது மனைவி 23 சதவிகிதம் முழுமையான வெற்றியும், 53 சதவிகிதம் பகுதியான வெற்றியும், 24 சதவிகிதம் தோல்வியும் பெற்றார். தன்னுடைய பரிசோதனைகளைக் கொஞ்சமும் மாற்றாமல், மறைக்காமல், குறைக்காமல் திரு.சின்க்ளேர் அவர்கள் மன வானொலி (Mental Radio) என்னும் நூலாகப் பதிப்பித்தார். அந்த நூலின் ஜெர்மானியப் பதிப்பிற்கு 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாகிய திரு.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein), மே-23, 1930- இல் ஒரு வியத்தகு முன்னுரையை எழுதினார். இதில் வேடிக்கை என்னவென்றால், திரு.சின்க்ளேர் அவர்களின் நூலைப் படித்துவிட்டு மட்டும் அந்த முன்னுரையை திரு.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதவில்லை. சின்க்ளேர் அவர்களின் இல்லத்திற்குப் போய் அந்தப் பரிசோதனைகளைக் கண்ணால் கண்டு, அதன்பிறகே அவர் அந்த முன்னுரையை எழுதினார்.

  திரு.சின்க்ளேர் அவர்களின் "மன வானொலி' நூல் வெளியான பிறகு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் உளவியல் பிரிவின் தலைவராக இருந்த பேராசிரியர் திரு.வில்லியம் மெக்டுகால் (William McDougall) திரு.சின்க்ளேர் அவர்களைச் சந்தித்து, திருமதி.க்ரெய்க் அவர்களின் திறனைத் தாம் பரிசோதிக்க விரும்புவதாகக் கூறினார். அதற்குச் சம்மதித்த திருமதி.க்ரெய்க், ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக் கொண்டார். உடனே, திரு.மெக்டுகால் அவர்கள், தனது சட்டைப் பையில் சில வரைபடங்களைக் கொண்டு வந்திருப்பதாகவும், அவற்றைத் திருமதி.க்ரெய்க் அவர்களால் சரியாகப் படிக்க முடியுமா என்றும் கேட்டார். சிறிது நேரம் ஆழ்நிலை தியானத்திற்குப் போன திருமதி.க்ரெய்க், தான் கற்சுவர்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தையும், அதில் சிறு ஜன்னல்களையும், பச்சைப் பசேலென்ற இலைகளால் மூடப்பட்ட சுவர்களையும் காண்பதாகச் சொன்னார். உடனே, தனது சட்டைப் பையிலிருந்து தான் கொண்டு வந்த படத்தைப் பேராசிரியர் திரு.மெக்டுகால் எடுத்தபோது, அதில் திருமதி.க்ரெய்க் சொன்னதைப் போலவே ஒரு கட்டடத்தின் வரைபடம் இருந்தது. திருமதி.க்ரெய்க் அவர்களின் இந்தத் திறன் உண்மையானதுதான் என்பதை உணர்ந்து கொண்ட திரு.மெக்டுகால், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறையில் இதைப் பற்றிய ஆராய்ச்சியை விரிவு படுத்துவதற்காகப் பெரும் தொகை ஒன்றை உருவாக்கினார்.

  "மன வானொலி' நூல் வெளியான பிறகு, திரு.சின்க்ளேர் அவர்கள், அவரது சோஷலிஸக் கட்சித் தோழர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தான் கண்ட உண்மை, மதவாதத்தின் அடிப்படையிலோ, மூட நம்பிக்கையின் அடிப்படையிலோ எழுந்ததல்ல என்றும், அது அறிவியல் ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டது என்றும் கூறி, அந்த விமர்சனங்களைப் புறந்தள்ளினார் திரு.சின்க்ளேர்.

  அப்படியானால், நம் அனைவருக்கும் மற்றவர்களின் உள்ளத்தில் உள்ளதை உணரும் ஆற்றல் உண்டா? அப்படிப்பட்ட ஆற்றல் அறிவியலுக்கு இப்பாலா? அப்பாலா?

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai