Enable Javscript for better performance
நான்கு அம்பல யாத்திரை!- Dinamani

சுடச்சுட

  
  1

  வடக்கே, "சார் தாம் யாத்ரா' என்று சொல்வார்கள். ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோயில்களுக்கும் புனித யாத்திரை செல்வதையே அப்படிச் சொல்வார்கள். அதேபோல், தெற்கேயும் ஒரு நாலு-கோயில் யாத்திரை இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? குறிப்பாக, கேரளத்தில் இதை "நாலு அம்பல யாத்திரை!' என்று குறிப்பிடுகிறார்கள். 

  இந்த யாத்திரையை ராமாயண மாதம் எனப்படும் கர்க்கடக மாதத்தில், அதாவது ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 15 வரையான முப்பது நாள்களில் ஒரு நாள் நான்கு கோயில்களையும் போய் தரிசித்துவிட்டு வருவார்கள். அதில் இன்னும் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த நான்கு கோயில்களில் ஒன்றில் ராமர் இருப்பார். இரண்டாவதில் பரதன் இருப்பார். மூன்றாவதில் லக்ஷ்மணர் இருப்பார். நான்காவதில் சத்ருக்னர் இருப்பார். இந்த ராமாயண மாதத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ராமாயணம் வாசிப்பார்கள்.

  இறைவனின் பத்து அவதாரங்களில் ஏழாவது அவதாரம் ஸ்ரீராமர். விஷ்ணுவின் பாஞ்சசன்யம்தான் பரதன். அனந்தன் - லக்ஷ்மணனாகவும், சுதர்சன சக்ரம் - சத்ருக்னன் ஆகவும் சூர்ய வம்சத்தில் பிறந்தார்கள். எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? அவர்கள் பிறந்த வரிசைப்படிதான் அவர்களுடைய ஆலயங்களில் வழிபட வேண்டும். பிறகு மீண்டும் ராமர் ஆலயத்திற்கு வந்து வழிபட வேண்டும். அப்போதுதான் யாத்திரை முழுமை அடையும்.

  எதற்காக இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு சிறிய பட்டியலே இருக்கிறது: 

  நினைத்த காரியங்கள் நிறைவேற; முந்தைய ஜன்மத்தில் செய்த தவறுகளுக்குப் பரிகாரமாக;  சந்தான பிராப்தி கிடைக்க; நோய்களில் இருந்து விரைவான குணம் பெற; எல்லா தரிசனங்களையும் பிற்பகலுக்கு முன்னால் முடித்துவிட வேண்டும். அதிகாலையிலேயே புறப்பட வேண்டும். திருச்சூரிலிருந்து மொத்தம் 75 கி.மீ. தூரத்துக்குள் அமைந்திருக்கின்றன என்பதால் இது சாத்தியம் என்கிறார்கள். இந்த திருப்தி உங்களுக்கு வேறு எதிலும் கிடைக்காது என்கிறார் ஒரு பக்தர். துவாபர யுகத்தில், கிருஷ்ணர் துவாரகையில் வைத்து பூஜித்த விக்கிரகங்களே இந்த ராமர்-பரதர்-லக்ஷ்மணர்-சத்ருக்னர் விக்கிரகங்கள் எனக் கூறப்படுகிறது. கடல் அடியிலிருந்து இவை கிடைத்தன எனவும், மீன்கள் பிடிக்கும் வலையில் இவை சிக்கின என்றும் சொல்கிறார்கள்.

  முதலில் ஸ்ரீராமர் திருத்தலமான "திருப்ரயார்' ராமர் கோயில். திருச்சூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. கேரளத்தில் பல கோயில்கள் இருந்தாலும், இந்தக் கோயில்கள் முக்கியமானவை.

  திருப்ரயார் கோயிலில் ஸ்ரீராமர் தவிர கணபதியும், தர்ம சாஸ்தா, லக்ஷ்மணன், ஹனுமான் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. சீதை சந்நிதி இங்கே கிடையாது. இங்கே தரிசித்த பிறகே மற்ற கோயில்களுக்குப் போகலாம். இங்கே கோயிலை ஒட்டி ஓடும் தீவ்ரா நதிக்கரையில், கானோலி வாய்க்காலில், முன்பே வேண்டிக்கொண்டவர்கள் மீன்கள் வாங்கிவிட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். வெடி வைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டவர்கள் வெடி வைப்பார்கள். அவல், நெய்ப் பாயசம், தட்டை, நெய்யப்பம், எள்ளுக் கிழி இவைதாம் முக்கியமான நைவேத்தியங்கள். கொடிமரம் இல்லை.

  கொடூரமான அசுரர்களையும், கரன் என்ற அரக்கனையும், தொண்ணூறு நிமிடங்களில் தீர்த்துக் கட்டிய ஸ்ரீராமர், அந்த பாவனையோடுதான் இங்கே மூலவராகக் காட்சியளிக்கிறார். 

  திருச்சூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது "இரிஞ்ஞாலக்குடா' என்ற ஊர். அங்கிருந்து 30 கி.மீ. தூரத்தில் "கூடல் மாணிக்கம்' என்ற இடத்தில் கோயில்கொண்டிருப்பவர் பரதன். இவரை, "சங்கமேசுவரன்' என்றும் பூஜிக்கிறார்கள். கம்பீரமான கோபுரம்,  விசாலமான விளக்கு மாடம், மண்டபம், புலீயினி தீர்த்தம், நீண்ட பிரகாரம் ஆகியவைகளைக் கொண்டு விளங்குகிறது பரதனின் ஸ்ரீ கோயில்.

  அவல் பாயசம் இங்கு நைவேத்யம். மேலும் தாமரை மொட்டு சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

  துலா (ஐப்பசி) மாதத்தில், புத்தா எனப்படும் புதிய அரிசியை, நெல் அறுவடை முடிந்திருப்பதால் அதைக் கொண்டு பக்தர்களுக்கு விருந்து வைப்பார்கள். வயிறு சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள், குட்டஞ்சேரி மோஸரி தயாரிக்கும் முக்கிடி நைவேத்தியத்தை பிரசாதமாக ஏற்று உண்பார்கள். சங்குதான் சுவாமி. ராமர் வனவாசம் இருந்த 14 வருட காலத்தில் ஆட்சி செய்துவிட்டு, ராமர் திரும்பிவிட்டார் என்று அனுமன்  செய்தி சொல்வதைக் கேட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் பரதன். 

  லக்ஷ்மணரின் ஆலயம் அமைந்திருப்பது "மூழிக்குளம்'. இது மூன்றாவது திருத்தலமாகும்.  எர்ணாகுளம்-ஆலுவா தாலுக்காவில் பாக்கடவு பஞ்சாயத்தில், சாலக்குடி புழையின் கரையில் கிழக்குப் பார்த்த வாக்கில் தரிசனம் தருகிறார் லக்ஷ்மணர். 108 திவ்ய தேசங்களில் ஒன்று மூழிக்குளம். லக்ஷ்மணர் சிலையுடன் இங்கே சிவபிரான், கணபதி ஆகிய தெய்வங்களையும் தரிசிக்கலாம். ராமர்-சீதை-அனுமன் என்று எல்லோரும் தெற்குப் பார்த்து இருக்கிறார்கள். பால் பாயசம், ஒற்றை அப்பம், அரவணை எனப்படும் பாயசம் மற்றும் அவல் இங்கே நைவேத்யம்.  

  "மாயம்மலி'ல் சத்ருக்னன் ஆலயத்தில், அவர் மட்டுமே இருக்கிறார். தெற்குப் பார்த்து கணபதி சந்நிதி இருக்கிறது. நுழைந்தவுடன் முக மண்டபத்தில் அனுமன் சந்நிதி இருக்கிறது. 

  இந்தக் கோயில், இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து ஏழு கி.மீ. தூரத்தில் ஹரிப்பாலம் அருகே உள்ளது. மது என்ற அரக்கன் சிவனைக் குறித்து தவம் செய்து ஒரு சூலம் பெற்றான். உனக்கும், உன் மகன் லவணனுக்கும் எதிரிகளை ஒழிக்க இது உதவும் என்று கொடுத்தார். லவணனின் காலத்துக்குப் பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும் என்று சிவபெருமான் கூறிவிட்டு, மறைந்துவிட்டார் மது நல்லவனாயிருந்தான். மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை அழிக்க ராமர் சத்ருக்னனிடம் சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை நிறைவேற்றத் தயாராக, கோப வடிவத்தில் நிற்கிறார் சத்ருக்னர். 

  சுதர்சன புஷ்பாஞ்சலி, சக்ர சமர்ப்பணம் இவை இரண்டும் இங்கே முக்கிய வழிபாடுகள்.  சித்திரை மாதம் மிருகசீர்ஷ தினம் தான் பிரதிஷ்டை தினம்.

  இது தவிர, கேரள மாநிலத்தில் மேலும் மூன்று "நாலம்பலங்கள்' இருக்கின்றன. ஒன்று, கோட்டயம் மாவட்டத்திலும் அடுத்தது எர்ணாகுளம் மாவட்டத்தில் மூவாற்றுபுழா அருகிலும் மூன்றாவது மலப்புறம் மாவட்டம் புழக்காட்டில் வயநாட்டில் நூல்புழா ஓடும் பொன்குழி ராமர் கோயில் தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். இங்கே நூல்புழா என்பது வால்மீகி ஆசிரமம் இருந்த இடம் என்றும், சீதை இங்கே வால்மீகி ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது வடித்த கண்ணீர் தான் "நூல்புழா' என்று கூறுகிறார்கள்.

  - சாருகேசி

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai