Enable Javscript for better performance
பொற்புடைய நாள்களில் அற்புதங்கள்- Dinamani

சுடச்சுட

    
    3

    நாள்களும் மாதங்களும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவை. குறிப்பிட்ட நாள்களில், மாதங்களில் நடந்த நிகழ்ச்சிகளால் அந்த நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதியபட்டதால் அந்த நாள்களுக்கு மாதங்களுக்கு சிறப்புகள் ஏற்பட்டன. சிறப்புகளால் அந்த நாள்களும் மாதங்களும் பொற்புடையனவாயின. அச்சிறப்புகளைச் செப்புவதே இக்கட்டுரை.

    சனிக்கிழமை பூமி படைக்கப்பட்டது. மூசாநபியைப் பின்பற்றியவர்களுக்குச் சனிக்கிழமை வார விடுமுறை நாள். ஞாயிற்றுக்கிழமை அல்லாஹ் மலையைப் படைத்தான். இந்நாள் இறைவன் உலகை உருவாக்க துவங்கிய நாள்.

    ஞாயிற்றுக்கிழமை மரம் நடுவதற்கும் வீடு கட்டுவதற்கும் உரிய நாள். சொர்க்கம் ஞாயிற்றுக்கிழமை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஈசா நபியை பின்பற்றியோருக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.

    திங்கள்கிழமை- மரம், செடி, கொடிகள் படைக்கப்பட்ட நாள்; முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள்; நபித்துவம் பெற்ற நாள்; மிஃராஜுக்கு (விண் பயணம்) சென்ற நாள்; மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்ட நாள்; மதீனாவை அடைந்த நாள்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுல் அஸ்வத் கல்லைக் கஃபாவில் பதிந்த நாள்; திருக்குர்ஆனின் சூரா மாயிதா திரு நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட நாள்; அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்த நாள். திங்களைப் பற்றி திரு நபி (ஸல்) அவர்களின் மணிமொழி ""சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் அவனை மட்டும் வணங்குவோரின் பாவங்கள் மன்னிக்கப்படும் நாள். ஒவ்வொருவரின் நற்செயல்களும் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும் இந்நிகழ்ச்சிகள் வியாழக்கிழமையும் நடக்கும்'' அறிவிப்பவர் அபுஹீரைரா (ரலி) நூல் முஸ்லிம். திங்கள்கிழமை இப்ராஹீம் நபி காலத்தில் வார விடுமுறை நாள்.

    செவ்வாய்க்கிழமை - பொருத்த கேடானவைகள் படைக்கப்பட்ட நாள். ரத்தத்தின் நாள் என்ற பெயரும் செவ்வாய்க்கிழமைக்கு உண்டு. உலகின் முதல் பெண் அன்னை ஹவ்வாவிற்கு மாதவிலக்கு ஏற்பட்ட நாள். ஆதம் நபியின் மகன் காபீல் சகோதரன் ஹாபீலைக் கொலை செய்த நாள். ஜக்கரியா நபி, அவர்களின் மகன் யஹ்யா நபி, அகம்பாவ அரசன் பிர் அவ்னின் அரசவைக்கு வந்து மூசா நபியின் ஏக இறை கொள்கைக்கு எதிராக சூழ்ச்சி செய்து தோற்று ஏக இறை கொள்கையை ஏற்ற சூனியக்காரர்கள், பிர்அவ்னின் மனைவி அன்னை ஆசியா கொல்லப்பட்ட நாள். சைத்தான் இப்லீசை இறைவன் சாபமிட்டு பூமிக்கு அனுப்பிய நாள். நரகம் படைக்கப்பட்டநாள். மனித உயிர்களைப் பறிக்கும் உரிமையை வழங்கிய நாள்.

    புதன்கிழமை- ஒளி படைக்கப்பட்ட நாள். பிர் அவ்னும் அவனுடைய படையும் நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்ட நாள். ஆது, தமூது கூட்டத்தினர் ஸôலிஹ் நபியின் ஏக இறை கொள்கையை ஏற்காது எதிர்த்த சமூகம் அழிந்த நாள். புதனில் குளிப்பது நல்லது. புதன் கிழமை துவக்கப்படும் செயல் எளிதாக நிறைவேறும். கல்வி கற்பிக்க நல்ல நாள். ஜெக்கரியா நபி காலத்தில் வார விடுமுறை நாள்.

    வியாழக்கிழமை - கால்நடைகள், படைக்கப்பட்ட நாள். நாடியது நிறைவேற, தேடியது கிடைக்க, விண்ணப்பித்த வேலைகள் எண்ணியபடி நடக்க, அதிகாரிகளைச் சந்திப்பதற்குரிய நாள். சுஐப் நபி வணிகம் செய்ய புறப்பட்ட நாள். அந்த நபி அந்த வணிகத்தில் தக்க லாபம் ஈட்டினார்கள். அதனால் வியாழக்கிழமை பயணத்திற்கும் வணிகத்திற்கும் ஏற்ற நாள். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹி வந்த நாள். எஹ்யா நபியை பின்பற்றியோருக்கு வார விடுமுறை நாள்.

    வெள்ளிக்கிழமை- மனிதர்கள் அசர் (மாலை) தொழுகைக்குப்பின் திருமணம் செய்ய சிறந்த நாள். ஆதம் நபி - அன்னை ஹவ்வா, மூசா நபி -சபூரா, சுலைமான் நபி- பல்கீஸ், முஹம்மது நபி (ஸல்) அன்னை கதீஜா (ரலி). திருமணம் நடந்த நாள். முதல் மனைவி இறந்தபின் அன்னை ஆயிஷா (ரலி) திருமணம் நடந்த நாள். வெள்ளிக்கிழமை நகம் வெட்டுவோரின் நோய் நீங்கும், ஆதம் நபி அவர்களை வெள்ளிக்கிழமை அசருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் - அசருக்கும் இரவுக்கும் இடையில் உள்ள நேரத்தில் அல்லாஹ் படைத்தான். அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி) நூல்- முஸ்லிம். வெள்ளிக்கிழமைக்கு முன் பின்னால் வருவதால் வியாழக்கிழமையும் சனிக்கிழமையும் அல்லாஹ்வின் அருள்பெற்ற நாள்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றும் இஸ்லாமியர்களுக்கு வார ஓய்வு நாள்.

    நல்ல நாள்களில் நல்லதை நாடி நல்லன செய்து அல்லல் இன்றி அகிலத்தில் எல்லாரும் எண்ணிய எண்ணியாங்கு எய்தி திண்ணியராய் வாழ புண்ணிய பூமான் நபி (ஸல்) அவர்கள் போதித்தபடி நீதிநெறியோடு வாழ்வோம், ஆதியும் அந்தமும் இல்லா அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

    - மு.அ. அபுல் அமீன்

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai