Enable Javscript for better performance
வித்தைக்கு அதிபதி ஸ்ரீ ஹயக்ரீவர்!- Dinamani

சுடச்சுட

    
    6

    ஸ்ரீ ஹயக்ரீவர்!பிரம்மதேவனிடமிருந்து வேதங்களை மதுகைடபர்கள் அபகரித்துச் சென்றதை ஸ்ரீ மகாவிஷ்ணு மத்ஸ்யாவதாரம் செய்து வேதங்களை அசுரர்களிடமிருந்து மீட்டுத் தந்தார். மீண்டும் அவற்றை பிரம்ம தேவனுக்கு உபதேசிக்க எம்பெருமான் எடுத்த அவதாரமே ஹயக்ரீவ அவதாரமாகும்.

    ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகும். வெண்மை நிறமுள்ள குதிரை முகத்துடன் காட்சி தரும் இவ்வெம்பெருமான் ஞானமே வடிவானவர். பின்வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும் இடக்கரத்தில் சங்கத்தையும் முன்வலக்கரத்தில் ஏட்டையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தை போதிக்கும் ஞான சொரூபியாக ஹயக்ரீவர் திகழ்கிறார். பிராட்டியுடன் சேவை சாதிக்கும் இவரே ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்!

    சுவாமி தேசிகன் கடலூருக்கு அருகிலுள்ள திருவஹீந்திபுரம் திருத்தலத்திற்குச் சென்று அங்கிருந்த "ஒளஷதகிரி' என்ற சிறு குன்றின்மீது அரசமரத்தின் கீழ் அமர்ந்து கருடமந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ கருடன் தோன்றி அவருக்கு ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார். இம் மந்திரத்தை சுவாமி தேசிகன் ஜபம் செய்யவும் ஸ்ரீ ஹயக்ரீவர் மகிழ்ந்து போய் தனது திருவாய் அமுதத்தை அவருக்கு அருளினார்.

    ஹயக்ரீவரின் அருளைப் பெற்ற சுவாமி தேசிகன், ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை அருளிச்செய்தார். "ஞானானந்த ... முபாஸ்மஹே..'' ""வெள்ளைப் பரிமுகன்'' என்று தேசிகரால் பிரார்த்திக்கப்பட்ட ஸ்ரீ ஹயக்ரீவ பெருமான் கேட்டவற்றை உடனே அளிக்கக் கூடியவர். அவருடைய அருளால் எல்லா கஷ்டங்களும் நீங்கி, விரும்பியது யாவும் கிடைக்கும். கலைமகளுக்கே ஞானத்தை அளித்த ஹயக்ரீவரைத் துதித்தால் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர்.

    ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த பிரசாதமாகிய நன்றாக வேகவைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து, நெய் விட்டுக்கிளறிய "ஹயக்ரீவ பண்டி' என்ற பிரசாதத்தை ஒவ்வொரு திருவோணம் நட்சத்திரத்தன்றும் செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்கள் படிப்பில் மேன்மை அடைவர். அதுவும் ஆவணி திருவோணம் அன்றாவது கட்டாயம் செய்யவேண்டும்.

    கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திபுரத்தில் மட்டுமே அவருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கே ஹயக்ரீவருடன் லட்சுமி தேவியையும் காணலாம். மைசூர் பரகால மடத்தில் உள்ள "ஸ்வர்ண ஹயக்ரீவர்' சரஸ்வதி தேவியால் ராமானுஜருக்கு அளிக்கப்பட்டவர். இவரை, சுவாமி தேசிகரும் பூஜித்துள்ளார். வில்லிவாக்கம், நங்கநல்லூர், செட்டிபுண்ணியம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அர்ச்சா ரூபியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    பிரம்மாவுக்கு வந்த கஷ்டங்களை நீக்கி வேதங்களை ரக்ஷித்த ஹயக்ரீவர் ஆவணித் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர். உள்ளம் உருகி வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் மூர்த்தியாக ஸ்ரீ ஹயக்ரீவர் விளங்குகிறார்.

    - பட்டம்மாள் ஜெகந்நாதன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai