Enable Javscript for better performance
அகத்தியர் வழிபட்ட பறக்கை மதுசூதனப் பெருமாள்!- Dinamani

சுடச்சுட

  
  2

  அகத்தியர் சுசீந்திரம் தாணுமாலயனைத் தரிசிக்க வந்தார். அப்போது அனுசூயையின் கணவரான அத்திரி முனிவர், "இந்த ஞானகான வனத்தை அடுத்து வில்வம் நிறைந்த வேதவனம் உள்ளது. அங்கு இரு தேவியருடன் மதுசூதனன் உறைகின்றான். அப்பெருமாளையும் வணங்கும்படி' கூறினார். அகத்தியர் பெருமாளைக் கண்டார். பெருமாளைக் கண்ட ஆனந்தத்தில் யாழில் தேவகாந்தாரம் ராகத்தை இசைத்தார். மதுசூதனன் அகத்தியரின் தேவ கானத்திற்கு மயங்கி அருள்பாலித்தார். 

  அச்சமயம், அவ்வனத்தில் சாபவிமோசனம் தீர, தவம் செய்து கொண்டிருந்த இந்திரனின் காதில் அகத்தியரின் தேவ கானம் கேட்டது. உடனே வில்வமரங்கள் நிறைந்த வேத வனத்திற்கு வந்தான். மதுசூதனனைக் கண்டு இறைஞ்சி வழிபட்டான். விண்ணுக்கும் மண்ணுக்குமாக காட்சியளித்த மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தந்தருளினார். "அரியும் அரனும் இரண்டல்ல. ஞானகானவனத்திலும் வேத வனத்திலும் (பறக்கை) இருப்பவன் ஒருவனே' என்பதை அறிவித்தார், விஷ்ணு பகவான். கருடன் இங்கு விஷ்ணுவை வழிபட்டதாகவும் மோட்சமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. மதுசூதனன் என்னும் அரக்கனை விஷ்ணு வதம் செய்ததால் மதுசூதனன் ஆனார். மதுசூதனப்பெருமாள் ஆலயம், கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையில் அமைந்துள்ளது. 

  இவ்வாலயம் மகாமண்டபம், வெளிப்பிரகாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கு மகாமண்டபத்தில் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட கொடிமரமும் கருவறைக்கு நேராக தெப்பக்குளமும் அமைந்துள்ளன. கொடிமரத்தை அடுத்து பலிபீடம் உள்ளது. கொடிமரத்தை அடுத்து, 18 தூண்கள் கொண்ட மகாமண்டபம், ஸ்ரீ கோயில் ஆகியவை காணப்படுகின்றன. கருவறை, உபபீடம், பத்மபாதம், விருத்த குமுதம், பட்டிவேதிகை என்னும் இலக்கணப்படி அமைந்துள்ளது.

  கருவறையில் மதுசூதனப்பெருமாள் 140 மீட்டர் உயரத்தில் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம், அபயஹஸ்தமாக ஸ்ரீதேவி பூதேவி உடன் கல்படிமமாக காட்சி அளிக்கிறார். வெளிப்பிரகாரத்தில் நாகரின் மேல் சங்கு சக்கரத்துடன் குதிரை மீதமர்ந்த பெருமாள் மற்றும் ஐந்து தலை நாகரின் உடலில் நின்ற கோலத்தில் பெருமாள் திருவுருவங்கள் அமையபெற்றுள்ளதைக் காணலாம். வடகிழக்கில் வடக்குத் தெற்காக சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. மகாமண்டபத்தின் தென்மேற்கில் கருடாழ்வார் கோயில் உள்ளது. இக்கோயிலில் மதுசூதனன், பாலகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ சக்கரம், ஸ்ரீதேவி, பூதேவி, பார்த்தசாரதி ஆகிய தெய்வங்கள் உள்ளன. அதோடு வடபகுதியில் யோகநரசிம்மர், திருவிக்கிரமன், கலப்பையுடன் கூடிய பலராமன், வரதராஜப்பெருமாள் திருவுருவங்கள் அமையப்பெற்றுள்ளன.

  இவ்வாலயத்தில் மரத்தினால் செதுக்கப்பட்ட கருடாழ்வாரையும் காணலாம். இந்த கருடாழ்வார் பற்றிய கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவர், மரத்தினால் அழகிய ஒரு கருடாழ்வார் சிலையை செய்தார். சிற்பி இறைவனை வேண்டி பக்தியுடன் சிலையின் கண்களைத் திறந்ததும் அச்சிலை உயிர் பெற்றது. உடனே பறந்து தென்திசை சென்ற கருடாழ்வார், புனித நீராடி மதுசூதனனை தரிசித்து வலம் வந்த பின்னர் புறப்பட்டுச் சென்றது. இததைக்கண்ட சிற்பி கையிலிருந்த உளியை கருடாழ்வாரை நோக்கி எறிந்தார். வலது இறக்கையில் காயம்பட்ட கருடாழ்வார் ""மதுசூதனா..!'' என்று அலறியபடியே கீழே விழுந்தது. கருடன் விழுந்த அவ்விடம், "கருடமுக்கு' என்று அழைக்கப்படுவதுடன் அங்கு கல்லாலான ஒரு கருடாழ்வார் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அமிர்தகலசம், அப்பம், பால் பாயசம் ஆகியவையே முக்கியமான நைவேத்தியங்களாகும்.

  இவ்வாலயம், நாகர்கோவிலிலிருந்து மணக்குடி வழியாகச் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் பறக்கை உள்ளது. 

  தொடர்புக்கு: 82206 18902/ 04652 241270. 
  - முனைவர் எஸ். ஸ்ரீகுமார்                                                              


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai