Enable Javscript for better performance
உவகை பீறிடும் உன்னத உறியடி உற்சவம்!- Dinamani

சுடச்சுட

  
  7

  வரகூரில் ஆண்டுதோறும் நடைபெறும் "ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி' நன்னாளை முன்னிட்டு பத்து தினங்களுக்கு உறியடி உற்சவம், காலம் காலமாக நடத்தப்படுகின்றது. இதனால் இவ்வூரும் ஆலயமும் உலகறிய சிறப்புப் பெற்றுள்ளது பெருமையாகும். ஆனால் இவ்வூரில் இருப்பதோ ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் ஆலயம்! கண்ணன் கோயில் இல்லாமல் உறியடித் திருவிழாவா, எப்படி சாத்தியம்?
  ஆந்திரத்தில் அவதரித்து தமிழகத்தில் இக்கிராமத்தில் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஸ்ரீநாராயணதீர்த்தர் என்ற யதி. அன்றாடம் இவர் தரிசித்துவந்த வரகூர் வேங்கடேசப் பெருமாள், இவருக்கு கிருஷ்ணனாக காட்சியளித்து அருளியதின் தாக்கமே இவ்வுறியடி உற்சவம் அமையப் பெரிதும் காரணமாய் இருந்திருக்கின்றது. கண்ணபிரானின் அருள்விளையாட்டில் உள்ளத்தைப் பறிகொடுத்த ஸ்ரீநாராயணதீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்னும் அபிநய கிரந்தத்தை வரகூரின் கோயிலில் சாந்நித்யம் மிகுந்த வேங்கடேசப் பெருமாள் சந்நிதிலேயே இயற்றினார். 
  கிருஷ்ணரின் ஜனனம் முதல் ஸ்ரீருக்மணி கல்யாணம் வரை இந்த இசைக்காவியம் விவரிக்கும். தரங்கிணி பாடல்களுக்கு பெருமாளே திரைக்குப் பின்னால் தன் சலங்கை ஒலி எழுப்பி நடனமாடியதாகக் கூறுவர். இந்த மகானே வரகூரில் உறியடி உற்சவத்தை ஏற்படுத்தி அதனை நடத்தியும் காட்டியுள்ளார். தஞ்சையை ஆண்ட நாயக்கமன்னர்களின் பேராதரவும் பெற்றது, இவரது காவியங்களும் மற்றும் இந்த உற்சவமும். தீர்த்தர் காட்டிய வழியில் அந்த சம்பிரதாயத்தை தங்கள் முன்னோர்கள் பின்பற்றிய பிரகாரம் இவ்வூர் மக்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் ஆண்டுதோறும் நடத்துவது சிறப்பு. இந்த உற்சவத்தில் இவர்கள் காட்டும் ஈடுபாட்டை காஞ்சி மகாசுவாமிகள் பெரிதும் சிலாகித்து கூறியுள்ளார். 
  இந்த நூற்றாண்டில் வரகூரில் வாழ்ந்த ஸ்ரீநாராயணகவி என்பவர் வரகூர் உறியடித் திருவிழாவை "சிக்யோத்ஸவ பிரபந்தம்' என்ற காவியமாகப் பாடியுள்ளார். தேவலோகத்தைச் சேர்ந்த இரண்டு கின்னரர்கள் இவ்வூருக்கு விஜயம் செய்து இந்த உற்சவத்தைக் கண்டுகளித்து அனுபவப்பூர்வமாக தாங்கள் அடைந்த உணர்வினை பரிமாறிக் கொண்டு உரையாடுவது போல் அமைந்துள்ளது இக்காவியம். இந்த உறியடி உற்சவம் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் "காயத்ரீ ஜப' நாளன்று தொடங்கி ஜென்மாஷ்டமிக்கு மறுநாள் உறியடித்திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. 
  உறியடிக்குத் தேவையான வழுக்கு மரம் நடுவதிலிருந்து சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றது. உற்சவ நாள்களில் உற்சவமூர்த்தி வேங்கடேசப் பெருமாள் விதவிதமாக கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சியளிப்பார். உறியடி நாளன்று காலை பாலகிருஷ்ணர் அலங்காரத்தில் வெண்ணைத் தாழியுடன் பல்லக்கில் வேதபாராயணம், தரங்கிணிப் பாடல் பஜனைகள், நாமசங்கீர்த்தன முழக்கங்கள் பின்தொடர கிராமத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கடுங்கால் என்ற வாய்க்கால் கரையில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளுவர். அன்று மாலை விஷேச திருமஞ்சனத்திற்குப் பிறகு இரவு 12 மணி அளவில் பிரதம இடையர் குலத்தினருக்கு ஆலய மரியாதை செய்த பிறகு இடையர்கள், சப்பாணியர்கள் பின்தொடர ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதிஷ்ணம் செய்துவர, முக்கிய நிகழ்வான "உறியடித்தல்' நடைபெறும்.
  அவ்வமயம், பக்தர்களின் ""உறியடியோ கோவிந்தோ, உறியடியோ கோவிந்தோ!'' என்னும் முழக்கம் விண்ணைப் பிளக்கும். சிறார்களின் குறும்பு விளையாட்டுகளுடன் பக்திப் பரவசத்துடன் உவகை பீறிட நடைபெறும் இந்த உற்சவத்தின் கண்கொள்ளாக் காட்சியை அன்று கோகுலமாக மாறும் வரகூரில் நேரில் கண்டு அனுபவித்தால்தான் உணர முடியும். 
  உறியடியும் வழுக்கு மரமும் நமக்கு விடாமுயற்சியும், இறையருளும் இருந்தால் நம் இலக்கை எளிதில் எட்டிவிடலாம் என்ற உன்னத தத்துவத்தை மறைமுகமாக அறிவுறுத்துகின்றது.
  இவ்வாண்டு, வரகூரில் உறியடி உற்சவம் ஆகஸ்டு -19 ஆம் தேதி தொடங்குகின்றது. முக்கியமான உறியடித்திருநாள் ஆகஸ்டு -26 ஆம் தேதி நடைபெறுகின்றது. ருக்மணிகல்யாணம் (ஆகஸ்டு- 27), ஆஞ்சநேய உற்சவம் (ஆகஸ்டு- 28). 
  தஞ்சாவூருக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ளது பூபதிராஜபுரம் என்ற பெயர் கொண்ட வரகூர் கிராமம். தஞ்சைப் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. 
  தகவல்களுக்கு: : 98421 52113 / 94436 74911.
  - எஸ்.வெங்கட்ராமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai