Enable Javscript for better performance
சிறப்பான வாழ்வுக்கு ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்- Dinamani

சுடச்சுட

    
    5

    ஒரு நிறுவனத்தில் உற்பத்தியானது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே சென்றது. இதன் காரணம் என்ன என்று விசாரித்த நிறுவனத்தின் முதலாளி, அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் உள்ள சிறு சிறு பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட ஒற்றுமையின்மையே காரணம் என அறிந்தார். எனவே, ஊழியர்களை உற்சாகப்படுத்தி அவர்களிடம் நற்பண்புகளையும் நல்லெண்ணங்களையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என அந்த நிறுனத்தின் முதலாளி நினைத்தார். 

    இதை எவ்வாறு சரி செய்து மீண்டும் உற்பத்தியை அதிகரிப்பது என யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார். அனைத்து ஊழியர்களையும் அழைத்து ஒரு பெரிய ஹாலில் அமரச் செய்தார். அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அனைவர் கையிலும் ஒரு பலூனைக் கொடுத்து தங்கள் பெயரை எழுதச் சொன்னார். அனைத்து பலூன்களும் ஒரே கலராக இருந்தன. பின்னர் பெயர் எழுதப்பட்ட பலூன்கள் அனைத்தையும் அருகில் உள்ள அறைக்குள் வைத்தார். பின்னர் அனைவரையும் பார்த்து ""உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் சென்று ஐந்து நிமிடத்தில் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுப்பவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு உண்டு'' என கூறினார். 

    அனைவரும் ஓடிச்சென்று தங்கள் பெயர் உள்ள பலூனைத் தேடினர். ஆனால் யாரும் ஐந்து நிமிடத்தில் எடுக்க முடியவில்லை. இதைப் பார்த்துக்கொண்டிருந்த முதலாளி, "ஒவ்வொருவரும் ஒரு பலூனை மட்டும் எடுத்து வந்து அதில் என்ன பெயர் இருக்கிறதோ அவரிடம் ஒப்படையுங்கள்'' என்றார். ஒருவருக்கொருவர் பிரச்னையுடன் இருந்த அனைவரும் ஒற்றுமையுடன் வேகமாக அந்த பலூனை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தனர். ஒரு நிமிடத்தில் அவரவர் பெயர் உள்ள பலூன் அவரவர்களிடமே வந்து சேர்ந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி. 
    பின்னர் அந்த முதலாளி ""நாம் ஒருவருக்கு ஒரு உதவிசெய்தால் அவரும் நமக்கு உதவி செய்வார். ஆகவே, நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடன் வாழும்போது பல பெரிய வெற்றிகளை அடைய முடியும். இனி இதேபோல் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். ஒற்றுமையாக உள்ள உங்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்படும்'' என கூறினார். அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் மீண்டும் உற்பத்தி அதிகரித்தது.

    தன்னைப்போல பிறரையும் நேசிக்கும்போது மட்டுமே இந்த உதவிசெய்யும் எண்ணம் வரும். இதற்கு அன்பே பிரதானமாக உள்ளது. 
    பரிசுத்த வேதாகமத்தில் இந்த உதவி செய்யும் பண்பைப் பற்றி பார்க்கும் போது, 1பேதுரு 4:10-இல் "அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்'' என பரிசுத்த பேதுரு கூறியுள்ளார்.  

    ஒருவருக்கொருவர் உதவிசெய்யும் எண்ணம் எப்போது வருமென்றால், அன்பு இருந்தால் மட்டுமே வரும். மேலும் லூக்கா 10:30-37 வரை உள்ள வசனங்களில் பார்க்கும் போது கள்ளர் கையில் அகப்பட்டு குற்றுயிராய் விடப்பட்ட மனிதனுக்கு சமாரியன் உதவிசெய்தான். இதுவும் அன்பின் மிகுதியால் செய்யப்பட்ட உதவியே. ஆகவே நாமும் அனைவரிடமும் அன்பாயிருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து சிறப்புடன் வாழ்வோம். 

    - ஒய். டேவிட் ராஜா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai