திருவிடைமருதூரில் ஒரு மதுரை!
By DIN | Published on : 19th August 2016 11:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் ஒரு மதுரை உள்ளது. மதுரைக்குச் சென்றால் மீனாட்சியை வணங்குவதுபோல் திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி அம்மனையும் வழிபடலாம்.
மதுரையை சேர்ந்த மன்னன் வரகுணபாண்டியன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருவிடைமருதூர் வந்து பல மாதங்கள் தங்கி வழிபட வேண்டிய கட்டாயம் வந்தது. பாண்டியன் தினமும் மதுரையில் மீனாட்சியையும் சொக்கநாதரையும் தவறாமல் வழிபடுபவன். திருவிடைமருதூரிலும் தங்கவேண்டும்! என்ன செய்வது என்று யோசித்தான்!
மீனாட்சியை வழிபடுவதற்காக, ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோயிலின் வடபுறம், திருமஞ்சன வீதியில் மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் சிறு கோயில் கட்டினான். இங்கு வணங்கிய பிறகு மகாலிங்க சுவாமியையும் வணங்கினான்.
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கசுவாமியை வழிபட வருபவர்கள், மீனாட்சி சொக்கநாதரை முதலில் வழிபட்டு, அடுத்து ஸ்ரீ மகாலிங்கசுவாமியை வழிபடவேண்டும்.
ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கிழக்குப் பார்த்த ஆலயமாக விளங்குகிறது. மூலவர் சொக்கநாதர், வலதுபுறத்தில் அம்பாள் மீனாட்சி அமைந்துள்ளார். நந்திபகவான், பலிபீடம், விநாயகர், நடராஜர் என அனைத்துச் சந்நிதிகளும் உள்ளன. அறநிலையத்துறையின் ஆளூகையிலும் ஸ்ரீலஸ்ரீ திருவாவடுதுறை குருமகாசந்நிதானம் அருளாசியுடனும் இரண்டு கால பூஜைகள் நடக்கின்றன.
பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி, அஷ்டமி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வருடத்திற்கு இருமுறை இவ்வாலயத்தில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகின்றது. இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் அகலும். திருமணத்தடை நீங்குகின்றது. கடன் தொல்லை தீரும். மேலும் வியாபாரம் செழிக்கும்.
கும்பகோணம் -ஆடுதுறை பேருந்து தடத்தில் திருவிடைமருதூர் உள்ளது.
தொடர்புக்கு: 94428 88281.
- வீ.பி.கே. மூர்த்தி