Enable Javscript for better performance
நுண் நோக்காற்றல் - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்- Dinamani

சுடச்சுட

  
  8

  அறிவியலுக்கு அப்பால் -15

  இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம், இங்கிலாந்தின் பிரதமராகிய வின்ஸ்டன் சர்ச்சில் தனது மந்திரிசபை உறுப்பினர்கள் மூன்று பேரை இரவு விருந்திற்கு ஒருநாள் அழைத்திருந்தார். இங்கிலாந்துப் பிரதம மந்திரியின் அதிகார பூர்வ மாளிகையாகிய எண்:10, டெüனிங் தெருவில் இரவு விருந்து நடந்து கொண்டிருந்த சமயம் திடீரென்று உள்ளுணர்வால் உந்தப்பட்ட சர்ச்சில், சமையலறைக்குப் போனார். அங்கிருந்த சமையலர் மற்றும் அவரின் உதவியாளர்களைச் சமையலறையிலிருந்து வெளியேறி குண்டு வீச்சிலிருந்து தப்பும் பாதுகாப்புக் குழிக்குப் போகும்படி உத்தரவிட்டார். அதன்பிறகு அவர் தனது மாளிகையின் விருந்து நடந்து கொண்டிருந்த அறைக்குத் திரும்பினார். ஒரு சில நிமிடங்களுக்குள் அந்த மாளிகையின் பின்பக்கம் வீசப்பட்ட குண்டு ஒன்றினால் சமையலறையின் கண்ணாடிச் சன்னல்கள் உடைந்து அந்த துண்டுகள் சமையலறை முழுவதும் வீசியெறியப்பட்டன.
  அதேபோல், ஒருநாள் விமானங்களைத் தாக்கும் ஏவுகணைக் கிடங்கிற்குப் போன வின்ஸ்டன் சர்ச்சில், அங்கிருந்த ஆயுதங்களைப் பார்வையிட்டார். அதன்பின் தனது காரில் அவர் வழக்கமாக அமரும் இடதுபக்கப் பின்னிருக்கையில் அமரப் போனார். அங்கிருந்த காவல் அதிகாரி இடதுபக்கப் பின்னிருக்கைக் கதவைத் திறந்ததும் ஏதோ ஓர் உணர்ச்சியால் உந்தப்ப ட்டவராக வின்ஸ்டன் சர்ச்சில் வலது பக்கப் பின்னிருக்கையில் போய் அமர்ந்திருந்தார். கார் சிறிது தூரம் போனபிறகு ஒரு குண்டு வீச்சு நடைபெற்றது. அந்த அதிர்ச்சியில் சற்று மேலே எழும்பிய கார் நல்ல வேளையாகக் கீழே இறங்கி ஒரு நிலைக்கு வந்தது. சர்ச்சில் வலது பின்னிருக்கையில் அமராமல் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவருடைய கார் உருண்டிருக்கலாம் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். 
  மேற்கூறிய இரு நிகழ்வுகளிலும் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களைக் குறிப்பிட்ட முடிவுகளை எடுக்குமாறு தூண்டியது எது? அவருடைய நுண்நோக்காற்றலா? (Clairvoyance)  அல்லது இவை தற்செயல் நிகழ்வுகளா? 
  1688 முதல் 1772 வரை வாழ்ந்த இம்மானுவெல் ஸ்வீடன்போர்க் (Emanuel Swedenborg) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு விஞ்ஞானி, தத்துவஞானி, இறையியலாளர், மற்றும் மறைஞானி என்று போற்றப்பட்டவர். இயற்கணிதம் (Algebra), நுண்கணிதம் (Calculus), புவியமைப்பியல் (Geology), மருத்துவ இயல் (Medicine), வானியல் (Astronomy), பொருளாதாரம் (Economics), தொழில்நுட்பம் (Technology) மற்றும் பொறியியல் (Engineering) போன்ற துறைகளில் ஆய்வறிக்கைகளை வெளியிட்டவர் அவர். வெவ்வேறு விதமான மண்ணைப் பற்றியும், மண்ணின் மேற்பரப்பைப் (Soil) பற்றியும், ஊதுலைகளைப் (Blast Furnace) பற்றியும், காந்த சக்தியைப் (Magnetism) பற்றியும், நீர்ம நிலையியலைப் (Hydrostatics)  பற்றியும் பல ஆய்வுகளை எழுதியுள்ளார் அவர். படிகவியல் (Crystallography)ஆராய்ச்சித்துறை இம்மானுவெல் ஸ்வீடன்போர்க்கால் நிறுவப்பட்டது. விண்மீன் படலக் கோட்பாட்டை (Nebular Hypothesis) அவரே முதலில் முன்மொழிந்தார் என்று கருதப்படுகிறது. (இப்போது இதுவே சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விளக்கும் மாதிரியுருவாகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.) மருத்துவ இயலில் அவரே நாளமில்லாச் சுரப்பிகளின் (ductless glands) செயல்பாட்டை முதலில் கண்டுபிடித்தார்.
  அப்படிப்பட்ட அறிவியலாளரான ஸ்வீடன்போர்க், 1759-ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் இலண்டனிருந்து (London) ஸ்டாக்ஹோமிற்குப் (Stockholm) பயணமானார். ஜுலை மாதம் 19 ஆம் தேதி அவர் காத்தன்பர்க் (Gothenburg) வந்தடைந்தார். 
  அவரை வில்லியம் காஸல் (William Castel) என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துப் போனார். அப்போது நேரம் மதியம் மணி நான்கு. ஸ்வீடன்போர்க் அவர்களைச் சந்திப்பதற்காக அங்குப் பலர் வந்திருந்தனர். அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த ஸ்வீடன்போர்க், திடீரென்று 6 மணியளவில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியே போனார். எல்லோரும் திகைத்திருந்த போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் வெளிறிய முகத்துடன் கலவரத்தோடு வீட்டிற்குள் திரும்பினார். அங்கிருந்தவர்களிடம் ஸ்டாக்ஹோமில் அதே நேரத்தில் சூதர்மாம் (Sudermalm) என்ற இடத்தில் பயங்கரமான தீப்பற்றி அந்தத் தீ விரைவாகப் பரவிக் கொண்டிருப்பதாக ஸ்வீடன்போர்க் கூறினார் (காத்தன்பர்க் ஸ்டாக்ஹோமிலிருந்து 300 மைல் தொலைவில் உள்ளது). அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அமைதியற்ற நிலையில் காணப்பட்ட ஸ்வீடன்போர்க் அடிக்கடி வெளியே சென்று வந்தார். திடீரென்று தன்னுடைய நண்பர்களில் ஒருவரின் வீடு ஏற்கெனவே எரிந்து சாம்பலாகி விட்டதாகவும் தன்னுடைய சொந்த வீடும் ஆபத்தில் இருப்பதாகவும் அவர் சொன்னார். 8 மணியளவில் கொஞ்சம் தெளிவடைந்தவராகக் காணப்பட்ட ஸ்வீடன்போர்க், ""கடவுளுக்கு  நன்றி, எனது வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டை அடையும்போது தீ அணைக்கப்பட்டு விட்டது'' என்று மகிழ்ச்சியாகக் கூக்குரலிட்டார்.
  காத்தன்பர்க் முழுவதும், குறிப்பாக அவருடன் விருந்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இந்தச் செய்தி பதட்டத்தை ஏற்படுத்தியது. அன்று மாலையே இந்தச் செய்தி ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் அவர் ஸ்வீடன்போர்க்கை அழைத்து அவரது அனுமானத்தை எப்படி ஏற்பது என்று கேட்டார். அதற்கு ஸ்வீடன்போர்க் தீ எப்படிப் பற்றியது என்றும் எப்படி அணைக்கப்பட்டது என்றும் எத்தனை நேரம் தொடர்ந்து எரிந்தது என்றும் துல்லியமாகக் கூறினார்.
  அடுத்த நாள் மாலை ஒரு தூதர் ஸ்டாக்ஹோமிலிருந்து காத்தன்பர்க் வந்தடைந்தார். அவர் கொண்டு வந்த கடிதங்களில் ஸ்டாக்ஹோமில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றிய செய்தி இருந்தது. தீ எப்படி ஏற்பட்டது, எப்படிப் பரவியது, எவ்வளவு நேரம் எரிந்தது, எப்படி அணைக்கப்பட்டது என்ற விவரங்கள் அக்கடிதத்தில், ஸ்வீடன்போர்க் விவரித்ததைப் போலவே சொல்லப்பட்டிருந்தன. முந்நூறு மைல் தொலைவில் உள்ள இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றி ஸ்வீடன்போர்க் எப்படித் துல்லியமாக அறிந்து கொண்டார் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.
  அந்நாளில் தத்துவ உலகைக் கலக்கிக் கொண்டிருந்த, ஸ்வீடன்போர்க் அவர்களின் சம காலத்தவராகிய, ஜெர்மானியச் சிந்தனையாளராகிய இம்மானுவெல் கான்ட் (Immanuel Kant) மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்: ""இந்த நிகழ்வின் நம்பகத்தன்மை வலிமை மிக்க ஆதாரங்களைக் கொண்டதாகவும், ஸ்வீடன்போர்க் அவர்களின் அமானுஷ்ய சக்தியைச் சந்தேகத்திற்கு இடமற்றதாகவும் ஆக்குகிறது''.
  ஆனால் தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் ஸ்வீடன்போர்க்கின் சக்தியை வியந்து பேசிய இதே இம்மானுவெல் கான்ட், பின்னால் 1766-இல் எழுதிய "ஆவியுலக மெய்யுணர்வாளரின் கனவுகள்' (Dreams of a spirit seer) என்னும் நூலில் ஸ்வீடன்போர்க் அவர்களைப் பற்றி நையாண்டி செய்திருந்தார். ஆனாலும், மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றிய அவரது குறிப்பு மாறவில்லை. பின்னாளில் உளவியல் துறையைக் கலக்கிய திரு.கார்ல் யுங் (Carl Jung) மேலே குறிப்பிடப் பட்ட நிகழ்வைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு ஸ்வீடன்போர்க்கின் படைப்புக்களிலிருந்து சில கருத்துக்களை இரவல் வாங்கிக் கொண்டதாக ஒரு கருத்து உண்டு. எது எப்படியாயினும், எங்கோ நடப்பதை வேறு எங்கோ அறியும் சக்தி, அதாவது நுண்நோக்காற்றல் (clairvoyance) உண்மையில் சாத்தியமா? அது அறிவியல் ரீதியில் சாத்தியம் இல்லையென்றால், மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளுக்கு அறிவியல் உலகின் விளக்கம் என்ன?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai