Enable Javscript for better performance
புனித வாழ்விற்கு மனித நேயம்- Dinamani

சுடச்சுட

  
  4

   

  மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். அம்மதிப்பு மனிதருள் ஏற்றத்தாழ்வில்லாத இணைப்பை உருவாக்கும். இவ்விணைப்பின் பிணைப்பால் ஒருவருக்கொருவர் உற்றுழி உதவும் உயர்பண்பு உருவாகும். அப்பண்பின் நடைமுறையே மனித நேயம். மனித நேயம் ஒருவருக்கொருவர் தொடங்கி உற்றார், சுற்றம், ஊர், நாடு என்று விரிந்து உலகெங்கும் பரவும் பாங்கை 19.8.2016 உலக மனித நேய நாள் ஓங்கி ஒலிக்கிறது. 

  "மனிதன் பலவீனமாகவே படைக்கப் பட்டவன்'' என்று பகர்கிறது இகபர வழிகாட்டி குர்ஆனின் 4- 28 ஆவது வசனம். இப்பலவீனத்தால் இச்சைக்கு ஆளாகி எச்சப்பட்டு கொச்சைப் படக்கூடாது மனிதன் என்பதை ""ஆதமின் மக்களை நாம் சங்கைப் படுத்தினோம், மேன்மை படுத்தினோம்'' என்று எழில்மறை குர்ஆனின் 17-70 ஆவது வசனம் கூறுகிறது. படைப்புகளில் மேலானவனான மனிதன் மனித பண்பாடுகளில் மேலோங்கி வாழவேண்டும். மனிதனிடம் அன்பு, பரிவு, பாசம், இரக்கம், ஈகை, வாய்மை, நேர்மை, நீதி, பிறர்நலம் பேணல், தாராள தன்மை, சகிப்பு, மதிக்கும் மனோபாவம், கலந்து பழகும் பாங்கு முதலிய மேலான பண்புகளின் கலப்பே மனித நேயம். இம்மனித நேயமே புனித வாழ்வின் அடிப்படை. 

  முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளைப் புறக்கணித்து புறம்பாக நடந்து புண்படுத்தியவர்களைத் தண்டிக்காது மன்னித்து மற்றவர்களுக்கு நற்போதனை புரியும்படி குர்ஆனின் 7-199 ஆவது வசனம் ""இவ்வறிவீனர்களை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விட்டு நன்மையை ஏவுங்கள்'' என்று கூறுகிறது. இந்த வசனப்படி பத்ரு போரில் கைதானவர்களைக் கொல்லாது கோமான் நபி (ஸல்) அவர்களின் அணியில் போர்புரிந்த ஒவ்வொரு வீரரிடமும் கைதிகளை ஒப்படைத்தார்கள். 

  அன்சாரி தோழர் ஒருவர் அவரின் பாதுகாப்பில் இருந்த முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் சகோதரர் அபூஅஜீஸ் என்ற கைதிக்கு ரொட்டியை கொடுத்துவிட்டு அவரும் அவரின் குடும்பத்தினரும் மீதமாகும் பேரீச்சம்பழத்தை மட்டும் தின்றனர். வெளியில் செல்லும்பொழுது கைதியை ஒட்டகத்தில் உட்காரவைத்து அன்சாரி தோழர் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து கொண்டு நடப்பார். இம்மனித நேய மாண்பினால் பல கைதிகள் இஸ்லாத்தை ஏற்றனர்.

  நானி அபூபக்கர் ஷிப்லி தெரு ஓரமாக நடந்தார். ஓரத்தில் இருந்த மரத்தில் கல்லை விட்டு எறிந்தவன் கிளையில் தொங்கியபழம் கல்லடிபட்டு விழுவதைத் தாங்கி பிடித்து மரநிழலில் அமர்ந்து தின்றான். ஞானி அவரோடு வந்த சீடர்களிடம் சொன்னார் "கல் கொண்டு எறியும் மனிதர்களுக்குக் கனி கொடுக்கிறது மரம். கடும் வெயிலில் தவிப்பவருக்கு நிழலையும் காற்றையும் கொடுக்கிறது. நீங்களும் துன்பம் தருவோருக்கும் இன்பம் தரும் நன்மை என்னும் நற்கனியை நல்க வேண்டும்'. 

  இறைநேச பெண்மணி ராபியத்துல் அதவியா அவர்களைச் சந்தித்த அறிஞர்களிடம் ""நீங்கள் விளக்காக விளங்க வேண்டும், ஊசியாக உதவுங்கள்'' என்றார்கள். அறிஞர்கள் பொருளறியாது விழித்தனர். ராபியத்துல் அதவியா, இந்த விளக்கு தன்னை எரித்து மண்ணிலுள்ள மக்களுக்கு ஒளி தருகிறது. அதுபோல தன்னலம் அறுத்து பிறர் நலம் பேணி மனித நேயத்தோடு மக்களுக்கு ஒளிதரும் விளக்காக விளங்க வேண்டும். நிர்வாணியான ஊசி கிழிந்த ஆடைகளைத் தைத்து உடுத்தி மனிதர்கள் மானத்தை மறைக்க உதவுகிறது. அதுபோல் மக்களின் குறைகளை மறைத்து அவர்கள் கண்ணியமாக வாழ உதவுவதே உயரிய மனித நேயம் என்று விளக்கம் அளித்தார்கள். 

  ஈராக் மன்னர் குட்ட நோயால் உடல் கெட்டு உருக்குலைந்து உயிருக்குப் போராடி கொண்டிருந்த காலத்தில் அப்துல்லா இப்னு துஷ்தர் என்ற மேதை ஈராக் வந்தார். அவர் மன்னனை உற்று நோக்கி ""அரசனின் கொடுமையால் குற்றமற்ற நிரபராதிகள் சிறை கூட்டத்தில் தவிக்கின்றனர். இந்நிலையில் அரசன் நலம் பெற எப்படி இறைவனிடம் இறைஞ்ச முடியும்?'' என்று கேட்டார். அரசன் நிரபராதிகளை விடுவித்தான். இனி, இனியநபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் மனித நேயம் பேணி புனித ஆட்சி நடத்த அரசனிடம் உறுதி பெற்றார் ஞானி. பின்னர் அப்துல்லா இப்னு துஷ்தர் இரு கரமேந்தி இறைவனிடம் இறைஞ்சினார். ஏந்திய கைகள் தாழுமுன்பே வீழ்ந்தது அரசனை வீழ்த்திய குட்ட நோய். அள்ளி செல்ல அரசன் திறந்துவிட்ட பொற்குவியலின் ஒரு பொற்காசையும் அற்பமாய் பாவித்து பாராது முகம் திருப்பி ஞானி அப்பொன்னை ஏழை, எளியவர் இல்லாதோர் நல்வாழ்வு பெற செலவிட செப்பி சென்றார்.

  மனிதனுக்கு மனிதன் சமம். மனிதர்களுக்குள் ஏற்ற தாழ்வில்லை என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை எடுத்து நடத்தி எவரையும் அவர்களின் காலில் விழ அனுமதிக்கவில்லை என்று அறிவிக்கிறார் அபூஹீரைரா (ரலி) நூல் -திர்மிதீ, பைஹகீ. வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வரும்பொழுது அவையில் அமர்ந்து இருப்போர் எழுந்து நிற்பதையும் கூடாது என்று தடுத்ததை எடுத்துரைக்கிறார் அனஸ் (ரலி) நூல் - அஹ்மது.

  "மனிதர்கள் மீது இரக்கம் இல்லாதவர்களிடம் அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்'' என்ற நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை அறிவிக்கிறார் ஜரீர்பின் அப்துல்லாஹ் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம். பசி பட்டினியில் வாடுவோர், ஆடை இல்லாது அவதிப்படுவோர், உடல் நலமின்றி நலிவடைந்தோர், அநீதிக்கு ஆளானோர், ஆபத்து விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்குச் சாதி, சமய, இன, நாடு, மொழி வேறுபாடின்றி பிணி துடைத்தலே மனிதநேயம். மனிதநேயம் பேணி மாண்புற புனித வாழ்வு வாழ்வோம். பூதலத்தில் அமைதி நிலவும். பூவுலகில் மக்கள் மகிழ்வாய் வாழ்வர்.
  - மு.அ. அபுல் அமீன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai