Enable Javscript for better performance
புதைத்தலும் உயிர்த்தலும் - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்- Dinamani

சுடச்சுட

  
  4

  உயிரோடு புதைக்கப்பட்டவர்கள் 40 நாட்களுக்குப் பிறகு உயிரோடு திரும்ப முடியுமா? 

  1835-ஆம் ஆண்டு வெளிவந்த "கல்கத்தா மெடிக்கல் டைம்ஸ்' (Calcutta Medical Times) இதழில் பிரசுரிக்கப்பட்ட ஓர் உண்மைச் சம்பவம். ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக மருத்துவ அறிவியலாளர்களைப் பித்துப் பிடிக்க வைத்தது. அந்தச் சம்பவம் இதுதான்:
  லாகூரை (Lahore) ஆண்டு வந்த மன்னராகிய ராஜா ரஞ்சித் சிங்கின் அரண்மனைக்கு ஒருநாள், தன்னை யோகி என்று சொல்லிக்கொண்டு ஹரிதாஸ் என்னும் ஒருவர் வந்தார். தன்னை பூமிக்கு அடியில் எத்தனை நாள்கள் புதைத்து வைத்தாலும் தான் யோகப் பயிற்சியின் மூலம் உடல் உறுப்புக்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி உயிரோடு இருக்க முடியும் என்றும், எப்படிப்பட்ட சவாலுக்கு உட்பட்டும் தன்னால் இதை நிரூபிக்கமுடியும் என்றும் ஹரிதாஸ் கூறினார்.

  கண்மூடித்தனமாக எதையும் ஏற்றுக் கொள்ளும் வழக்கம் அல்லாத ராஜா ரஞ்சித் சிங் தன்னுடைய பரிசோதனைக்கு ஹரிதாஸ் உட்பட்டால் அவருக்குத் தக்க சன்மானம் தர முடியும் என்றும், ஆனால் அப்பரிசோதனைகள் அறிவியலாளர்களின் முன்னிலையில் மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படும் என்றும் எச்சரித்தார். அந்தச் சவாலை ஏற்றுக் கொண்ட ஹரிதாஸ், கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சாதாரண உணவு அருந்துவதைக் குறைத்துக் கொண்டே வந்தார். 

  இதற்கிடையில் ராஜா ரஞ்சித் சிங்கிற்குச் சொந்தமான ஒரு கட்டடத்தில் ஓர் அறையில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளன்று ஹரிதாஸ் மெல்லிய சல்லாத் துணி ஒன்றை எடுத்து, அதனுடையப் பெரும் பகுதியை வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்திவிட்டு பின் அதை வெளியே எடுத்தார். தனது குடல் முழுவதும் தற்போது காலியாகி சுத்தமாகி விட்டது என்று சொல்லிவிட்டுக் கொஞ்சம் வெதுவெதுப்பான நீருள்ள தண்ணீர்த் தொட்டியில் அமர்ந்தார்.  சிறிது நேரம் சில யோகப் பயிற்சிகளைச் செய்தபின், ஆசன வாயின் வழியாக உள்ளிழுக்கப்பட்ட சுடு நீரினால் தன்னுடைய ஜீரண மற்றும் கழிவு உறுப்புகள் எல்லாம் சுத்தமாகி விட்டன என்று அறிவித்தார். 

  பிறகு, நாசித் துவாரங்களையும், காதுகளையும் உருக வைத்த மெழுகுகளால் அடைத்துக் கொண்டார். அவருடைய நாக்கின் அடியில் இருந்த நாளங்கள் ஏற்கெனவே அவரால் நீக்கப்பட்டிருந்த காரணத்தால் தனது நாக்கை உள்நோக்கி மடிக்கும் திறனை அவர் பெற்றிருந்தார். அத்திறனைப் பயன்படுத்தி, அவர் தனது நாக்கை உள்நோக்கி மடித்து, தனது தொண்டையில் இருக்கும் மூச்சுக் குழாயின் முகப்பை மூடிக்கொண்டு கண்களையும் மூடிக் கொண்டார்.
  அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, நாடித்துடிப்பு முற்றிலும் நீங்கி அவருடைய உடல் சவத்தைப் போல் ஆகியிருந்தது. உடனே அந்த உடலை ஒரு நார்த்துணியால் (linen) கட்டி, ராஜா ரஞ்சித் சிங்கின் மாளிகையில் தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் வேலையாட்கள் இறக்கினார்கள். அதன்பிறகு, அந்தப் பள்ளம் மண்ணைக் கொண்டு நிரப்பப்பட்டு அந்த மண்ணின்மேல் பார்லி (Barley) விதைகளைத் தூவினார்கள். பின்னர் அந்தப் பள்ளம் இருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டு, பெரிய பூட்டால் பூட்டப்பட்டு, அந்தப் பூட்டின் மேல் ராஜா ரஞ்சித் சிங்கின் அரசு முத்திரை பதிக்கப்பட்ட சீல் வைக்கப்பட்டது. 

  அந்தக் கட்டடத்தைச் சுற்றி இரவு பகலாக அரண்மனைக் காவலர்கள் காவல் புரியத் தொடங்கினர். எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் பழக்கமுடைய ராஜா ரஞ்சித் சிங், அடிக்கடி அந்தக் கட்டடத்திற்குத் திடீர் விஜயம் செய்து இதில் ஏமாற்று வேலையோ சதியோ நடந்துவிடாமல் பார்த்துக் கொண்டார். 40 நாட்களுக்குப் பிறகு, ஆங்கிலேய மருத்துவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை அழைத்துக் கொண்டு ராஜா ரஞ்சித் சிங், ஹரிதாஸ் புதைக்கப்பட்ட கட்டடத்திற்குப் போனார். அரசரின் நேரடிப் பார்வையில் அரசு முத்திரையுடன் கூடிய சீல் உடைக்கப்பட்டு, பூட்டு திறக்கப்பட்டு, பள்ளம் தோண்டப் பட்டது. புதைக்கப்பட்ட அதே நிலையில், அதாவது உட்கார்ந்த நிலையில் நார்த்துணிக்குள் ஹரிதாஸின் உடல் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. நார்த்துணிக்குள் இருந்து ஹரிதாஸின் உடல் வெளியே கொண்டுவரப்பட்ட பிறகு மருத்துவர்கள் ஹரிதாஸின் உடலைப் பரிசோதித்தனர். அதில் இதயத் துடிப்போ, நாடித் துடிப்போ இல்லை. இறந்து போனபிறகு சடலங்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை அந்த உடலில் காணப்பட்டது. மருத்துவர்களைப் பொருத்த அளவில் அப்பொழுதிருந்த ஹரிதாஸின் உடலுக்கும், உயிரற்ற ஒரு சடலத்திற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

  ஆனால், ஹரிதாஸின் உதவியாளர் ஹரிதாஸின் உடல் மேல் வெதுவெதுப்பான சுடுநீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினார். அந்த இளஞ்சூட்டில் ஹரிதாஸின் கைகளையும் கால்களையும் தேய்த்துவிட்டு அவருடைய நாசித் துவாரங்களிலிருந்தும், காதுகளிலிருந்தும் அடைக்கப் பட்டிருந்த மெழுகை எடுத்துவிட்டார். பின்னர், ஒரு சிறு கத்தியினால் மூடியிருந்த ஹரிதாஸின் உதடுகளை மெதுவாகப் பிரித்து, பெரும் சிரமத்திற்குப் பின் ஹரிதாஸின் வாயைத் திறக்க வைத்தார். தனது இடது கையால் ஹரிதாஸின் வாயைத் திறந்த நிலையில் பிடித்துக் கொண்டு, தனது வலது கை விரல்களை ஹரிதாஸின் வாய்க்குள் செலுத்தி உள்பக்கமாகத் திரும்பியிருந்த அவரது நாக்கை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார். 

  இதற்கிடையில் கோதுமையால் தயாரிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகளைப் போன்றிருந்த ஒரு உணவுப் பண்டத்தைக் கொஞ்சம் சுட வைத்து ஹரிதாஸின் தலையில் வைத்தார். பிறகு உருக வைக்கப்பட்ட வெண்ணெய்யினால் ஹரிதாஸின் இமைகளை நன்றாகத் தேய்த்துவிட்டு அவருடைய கண்களைத் திறக்கச் செய்தார். பின், ஹரிதாஸின் வாய்க்குள் தன் வாயின் மூலம் அந்த உதவியாளர் காற்றைச் செலுத்தினார். இரண்டு மூன்று முறை அவர் இப்படிச் செய்ததும் ஹரிதாஸின் உடலில் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டு, கண்கள் விரிந்து, அங்கங்கள் அசையத் தொடங்கின. உடனே, தான் கொண்டு வந்திருந்த உருக வைக்கப்பட்ட வெண்ணெய்யை ஹரிதாஸின் நாக்கில் அவருடைய உதவியாளர் தடவினார். சட்டென ஹரிதாஸ், ராஜா ரஞ்சித் சிங்கை அருகில் வருமாறு சைகை காட்டினார்.

  ராஜா அருகில் வந்ததும் ""இப்பொழுது என்னை நம்புகிறாயா?'' என்று ஹரிதாஸ் கேட்டார். ""ஆமாம்'' என்று சொல்லி முத்து நகை ஒன்றையும், தங்கக் காப்புகள் இரண்டையும், விலை உயர்ந்த பட்டாடைகளையும் ஹரிதாஸýக்குப் பரிசாக ராஜா ரஞ்சித் சிங் வழங்கினார்.

  இந்த நிகழ்வை நேரடியாகப் பார்த்த ஆங்கிலேய மருத்துவராகிய சர் சார்லஸ் வேட் (Sir Charles Wade), இதைப் பற்றிய குறிப்பைப் பதிவு செய்ததோடு நில்லாமல், அமெரிக்க மருத்துவராகிய ஜேம்ஸ் ப்ரெய்ட் (James Braid) அவர்களுக்கும் அனுப்பி வைத்தார். பின்னாளில் இலண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகையாகிய இலண்டன் டெலிகிராஃப் (London Telegraph) , இந்தச் சம்பவத்தைக் குறித்த செய்திக் குறிப்பை 22.8.1880- ஆம் ஆண்டு வெளியிட்டது.

  இப்படிப்பட்ட பல நிகழ்வுகளைப் பொய்யான புனைக் கதைகள் என்று சொல்லும் அறிவியலாளர்கள் கூட, ஹரிதாஸைக் குறித்த இந்தச் சம்பவத்தின் நம்பகத் தன்மையை மறுக்கவில்லை. ஆனால், மிகக் கடுமையான குளிர் பிரதேசத்தில் வாழும் சில விலங்கினங்கள், தங்களுக்கு உணவு கிடைக்காத கடுங்குளிர் காலத்தில், தங்களை உயிரற்ற சடலங்களாக மாற்றிக் கொண்டு ஆழ்துயில் நிலைக்குப் (Hybernation) போய்விடுவதைப்போல் மனிதர்களும் போக முடியும் என்றும் ஹரிதாஸின் சாதனை இந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். ஆனால், சுமார் 170 ஆண்டுகளுக்குப் பிறகும் ஹரிதாஸின் சாதனைக்குப் பின்னால் உறங்கும் அறிவியல் உண்மை கண்டுபிடிக்கப் படவில்லை.

  - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai