Enable Javscript for better performance
மண்ணியாற்றின் கரையில் மகத்தான ஆலயம்!- Dinamani

சுடச்சுட

  
  5

  சிவபெருமான் சுயம்பு லிங்கமூர்த்தியாய் அருளும் தலங்களுள் ஒன்று பொன்பேத்தி. அவர் நடத்திய ஒரு திருவிளையாடலின்படி, அன்னை பார்வதி தேவி தன்னை மறைத்துக்கொண்ட இறைவனுடன் திரும்பவும் ஒன்று சேர இப்பூவுலகில் மானிடப் பிறவியெடுத்து அலைந்தபோது தன் பொன் அணிகலன்களை விரித்துச் சென்றாளாம். அதனை அடையாளம் வைத்து பொன்நகைகளை பற்றி எடுத்து வந்ததால் "பொன்பற்றி' என வழங்கி, பின் மறுவி "பொன்பேத்தி' என ஆயிற்று என்கின்றது கர்ணபரம்பரையாகச் சொல்லப்பட்டுவரும் இத்தலவரலாறு. 

  மேலும் கூறப்பட்டுவரும் தகவல்களின்படி, நித்திய ஏகாதசி சீலர்கள் என்று சொல்லப்படும் தொண்ணூற்றாறு (96) மகரிஷிகள் இப்பூவுலகில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பதற்குரிய தலங்களுள் இதுவும் ஒன்று, என தீர்மானித்து இங்கு ஓராண்டு காலம் தங்கி அருகில் ஓடும் மண்ணி ஆற்றில் நீராடி இறைவனை வழிபட்டு தங்கள் பிதுர்கடன்களை நிறைவேற்றினராம். எனவே காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்கு இணையான தலமாகத் திகழ்கின்றது " பொன்பேத்தி'. 

  மகாளயபட்ச நாள்களில் மற்றும் இதர புண்ய தினங்களில் இங்கு செய்யப்படும் பிதுர் தர்ப்பணங்கள் அளப்பறிய பலன்களை நல்கும் எனவும் சொல்லப்படுகின்றது. கிருதயுகத்தில் ஆதிஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் தோன்றிய தலம் எனவும், முதன் முதலில் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவ பூஜை வழிபாடு இத்தலத்தில்தான் பைரவ மகரிஷியால் ஏற்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுவது உண்டு. இக்காரணம் தொட்டே இத்தலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் பைரவரிடம் பொன், வெள்ளி அல்லது தாமிரத்தினால் ஆன சிறு ஆபர்ண காசுகளை சமர்ப்பித்து அதனைக் கோத்து ஆண், பெண் இருபாலரும் ஒரு சக்திவாய்ந்த பலன் தரும் அணிகலன்களாக பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது. அபரிமித பலன்தரும் அஷ்டமி பைரவ வழிபாடு இத்தலத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்.

  ஒரு காலத்தில் பூவுலகின் பொன்தாம்பாளமாகத் திகழ்ந்து தலைசிறந்த ஆன்மிக வழிபாட்டுத் தலமாக விளங்கிய இவ்வூர் சிவாலயம், காலத்தின் கோலத்தால் சிதைவுற்று மிஞ்சியது மகாதேவன் மட்டுமே என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வூர் கிராம மக்கள் முயற்சியாலும், சென்னைவாழ் சிவநேயச் செல்வர்கள் ஆதரவினாலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

  அனைத்து தெய்வ சந்நிதிகளுடன் புதுப்பொலிவுடன் திகழும் பொன்பேத்தி பவானீஸ்வரர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் செப்டம்பர் -4 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகின்றது. இவ்வைபவத்தில் மடாதிபதிகள், ஆதினகர்த்தர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகின்றது. யாக சாலை பூஜைகள் செப்டம்பர் -2 ஆம் தேதி துவங்குகின்றன.

  கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புறம்பயம் சென்று அங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள பொன்பேத்தியை அடையலாம். 
  தகவல்களுக்கு : செல்: 98400 53289 /97900 76726 / 95851 52811.

  - எஸ். வெங்கட்ராமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai