Enable Javscript for better performance
வள்ளிமணவாள பெருமானுக்கு கல்யாண மஹோற்சவம்!- Dinamani

சுடச்சுட

    
    8

    சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35கி.மீ. தொலைவில் உள்ளது சிறுவாபுரி. இங்கு அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி திருக்கோயில் உள்ளது. இங்கு, மணக்கோலத்தில் வள்ளி மணவாள பெருமான் உற்சவ மூர்த்தியாக காட்சி தருகிறார்.

    வள்ளியும் முருகப்பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளி மணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமண வயதுவந்த ஆண்கள், பெண்கள், இந்த கோயிலுக்கு, ஆறு வாரம், முருகனுக்குரிய நாளான செவ்வாய்க்கிழமைதோறும் வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    முருகனின் திருப்பெயர்களில் "வள்ளி மணவாளன்' என்பது தனிச்சிறப்புடையதாகும்.  "குமாரதந்திரம்' என்னும் நூல் முருகனின் வடிவங்களைக் குறிப்பிடுகிறது. அதில் வள்ளி கல்யாண சுந்தரர் என்பதும் ஒன்றாகும். ஒரு முகமும் நான்கு கரங்களுடன் பின்னிரு கரங்களில் அட்சமாலையும், கமண்டலமும், கொண்டு முன் இருகரங்களில் அபயம் கடியவலம்பிதம் (இடுப்பில்) கொண்டு முருகப்பெருமானும், தனது வலது கரத்தை முருகனின் வலது கரத்தின் கீழ் வைத்து மணப்பெண்ணுக்கே உரிய நாணம் வெளிப்பட இனிய முகத்துடன் வள்ளிபிராட்டியும் காட்சியளிப்பதாக உள்ளது. இந்த கோலத்தைத் தான் "வள்ளி மணவாளப் பெருமாளே' என்று திருப்புகழில் அருணகிரியார் போற்றியுள்ளார். இதைக் கருத்தில் கொண்டு சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட அற்புத பஞ்சலோகப் படிமத்தை சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் 1994 ஆம் வருடம் இவ்வாலயத்திற்கு அர்ப்பணித்துள்ளனர். 

    பிரார்த்தனை தலமாக விளங்கும் சிறுவாபுரிக்கு, ஆறுவாரம் தொடர்ந்து வரமுடியாமல் சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும், சிறுவாபுரியில் வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோற்சவத்தை நடத்துகின்றனர். இந்த மஹோற்சவத்தில் பங்கேற்கும் திருமண பிரார்த்தனையாளர்கள், வள்ளிமணவாள பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் கண்ணுற்றால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த திருமண வைபவத்தில் பங்கேற்கும் ஆண்களுக்கு, விரைவில் திருமணம் நடைபெறவேண்டும் என பிரார்த்தித்து, ஆண்களுக்கு வள்ளி மாலையும், பெண்களுக்கு முருகன் மாலையும் வழங்கப்படும். கல்யாண உற்சவம் முடிந்ததும், வள்ளி மணவாள பெருமான் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ஆறுமுறை வலம் வருவார். அப்போது, திருமண பிரார்த்தனையாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு, "வள்ளி மணவாளா போற்றி' என்ற மந்திரத்தை உச்சரித்தப்படி வரவேண்டும்.
    இந்த பிரார்த்தனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, எவ்வித கட்டணமும் கிடையாது. இதை இறை தொண்டாக, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் இலவசமாக நடத்துகின்றனர். பிரசாதம், மாலை, மதிய உணவு ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கடந்த முறை கல்யாண உற்சவத்தில் பங்கேற்று, திருமணம் கைகூடியவர்கள், தம்பதி சகிதமாக, செப்டம்பர் 3 ஆம் தேதி வரவேண்டும். இவர்கள், வள்ளி மணவாள பெருமானுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை கோயிலைச் சுற்றி, தம்பதிகள் எடுத்துவந்து நன்றி செலுத்த வேண்டும். இவர்களுக்கு வரவேற்பும் விருந்தும் அளிக்கப்படும்.

    கல்யாணவிருந்து: செப்டம்பர் - 4 ஆம் தேதி கல்யாண மஹோற்சவம் முடிந்ததும், மதியம் 12.00 - 1.00 மணிக்கு அன்னதானமாக கல்யாண விருந்து நடைபெறும். மஹோற்சவத்தில் பங்கேற்க விரும்பும் பிரார்த்தனையாளர்கள், செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 7.00 மணிக்கு சிறுவாபுரிக்கு வந்தால் போதுமானது. முன்பதிவு தேவையில்லை.  

    தொடர்புக்கு: 044-24712173/  99443 09719.
    குறிப்பு: சென்னை- கோயம்பேட்டிலிருந்து சிறுவாபுரிக்கு, தடம்எண் 533 என்ற பேருந்தும், சென்னை - செங்குன்றத்திலிருந்து, நகரப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

    - சிவத்தமிழ் குகமணி தெ.தனபால்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai