Enable Javscript for better performance
அறிவியலுக்கு அப்பால் - 8: மருந்தா, மாயமா?- Dinamani

சுடச்சுட

  

  அறிவியலுக்கு அப்பால் - 8: மருந்தா, மாயமா?

  By  - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்  |   Published on : 15th August 2016 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  5

  அறிவியலுக்கு அப்பால்-8

  ரஷ்யாவின் பைத்தியக்கார சாமியார் என்று அழைக்கப்பட்ட ரஸ்புடின் (Rasputin) மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோய்களை சர்வ சாதாரணமாகக் குணப்படுத்தினான் என்றால் நம்ப முடியுமா?
   ரஷ்யாவின் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்கு முன், அந்நாட்டை ஆண்ட கடைசி ஜார் மன்னன் நிக்கோலஸ்-II ஆவான். அவனுக்கும், இராணி அலெக்சாண்ட்ரியாவுக்கும் நான்கு பெண் குழந்தைகளுக்குப் பிறகு, பிறந்த ஐந்தாவது குழந்தை ஆண் குழந்தை. அந்த ஆண் குழந்தைதான் அந்த சாம்ராஜ்யத்தை ஆளப் போகிறவன் என்று மன்னன் அகமகிழ்ந்தபோது பேரிடியைப்போல் ஒரு செய்தி மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, அந்த குழந்தைக்கு ஹீமோபீலியா (hemophilia) எனப்படும் இரத்தத்தின் உறையும் தன்மை குறைவு நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் காலத்தில், இரத்தத்தை உறைய வைப்பதன் மூலம் இரத்தம் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை (இப்போது வைட்டமின்-கே கொண்ட மருந்துகள் பல தயாரிக்கப்பட்டுவிட்டன). எனவே, அந்தக் குழந்தையை ஒன்பது வயதுவரை மெய்க் காப்பாளர்கள் கண்ணை இமை காப்பதுபோல் பாதுகாத்து வந்தனர். ஆனால், திடீரென்று ஒருநாள் குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து அடிபட்டுவிட்டது. காயத்திலிருந்து வெளியேறத் தொடங்கிய இரத்தத்தை மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் நிறுத்த முடியவில்லை. இனி யாராலும் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது, அரசியின் காதில் யாரோ ரஸ்புடினைப் பற்றிக் கூறினார்கள். வசீகரிக்கும் கண்களும், நீண்ட தாடியும், நடு வகிடு எடுத்து வாரப்பட்ட தலைமுடியும், அகன்ற நெற்றியும் கொண்ட ரஸ்புடின் நோய்வாய்ப்பட்டிருந்த குழந்தையின் படுக்கை அருகில் முட்டிக்கால் போட்டு அமர்ந்தான். தன் பையிலிருந்து ஒரு சிலையை எடுத்து மேசையின் மேல் வைத்தான். அதன் இருபுறமும் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தன் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். சுமார் 1 மணிநேரம் கழித்து கண்களைத் திறந்த ரஸ்புடின், இராணியைப் பார்த்து "உங்கள் பிள்ளையை சாவின் கைகளிலிருந்து பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டேன்' என்றான். உண்மைதான். பிரபலமான மிகப்பெரிய மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்துவிட்டு, இரத்தப்போக்கு நின்றுவிட்டது என்று உறுதி செய்தனர். குழந்தையின் உடல்நிலை சரியானது. அன்றுமுதல் கடைசி ஜார் மன்னனின் அரச குடும்பத்தின் நம்பிக்கையையும், அதை ஆட்டிப் படைக்கும் வல்லமையையும் ரஸ்புடின் பெற்றான். இறுதியில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலேயே 1916-ஆம் ஆண்டு ரஸ்புடின் கொலை செய்யப்பட்டான். ரஸ்புடினின் அமானுஷ்ய சக்தி அறிவியலாளர்களால் சோதிக்கப்படவில்லை.
   ஆனால், கிரேக்க நாட்டில் பிறந்த படிப்பறிவே இல்லாதிருந்த ஆடு மேய்க்கும் சிறுவனான ஏதனோசியோ கொந்தொ ஜார்ஜ் (Athanasios  Conto George) என்பவனது சக்தி அந்நாட்டு நீதிமன்றத்தில் நிரூபித்துக் காட்டப்பட்ட போது, மருத்துவ உலகம் வாயடைத்துப் போனது. மிகப் பெரிய எலும்பு முறிவுகளை எல்லாம் தன் கையசைவில் அவன் சீராக்கியபோது, எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள் அதை சட்ட விரோதமான செயல் என்று குற்றம் சாட்டி 1941-இல் அவனை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினர். ஏதென்ஸ் நகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் கூட்டம் அலைமோதியது. தன்னை ஒரு செப்படி வித்தைக்காரன் என்றும், ஏமாற்றுக்காரன் என்றும் குற்றம் சாட்டியவர்களைப் பொய்யாக்க, அவன் நீதிமன்றத்திலேயே தன் சக்தியை நிரூபிப்பதாகச் சூளுரைத்தான். நீதிபதியின்முன், அவ்வளவு பெரிய கூட்டத்தின்முன் அவன் ஒரு சாதாரணமான ஆட்டுக் குட்டியைக் கொண்டுவரச் செய்தான். பிரபலமான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள் பரிசோதித்தபின் அந்த ஆட்டுக் குட்டியின் பிஞ்சுக் கால்களை அவன் முறித்தான். வலியால் துடித்த அந்த ஆட்டுக் குட்டியின் முறிபட்ட கால்களை மீண்டும் தன் கைகளால் அவன் தடவிக் கொடுத்ததும் எலும்புகள் இணைந்தன. அந்த ஆட்டுக் குட்டி அவன் கைகளிலிருந்து கீழே குதித்து முன்போலவே சாதாரணமாக ஓடியது. இந்த நிகழ்வுக்கு எந்தவிதமான அறிவியல் - மருத்துவ விளக்கங்களை எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள் அளிக்க முடியாது போனதால் அவன் விடுதலை செய்யப் பட்டான்.
   1910-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியான சன்டே நியூயார்க் டைம்ஸ் (Sunday Newyork Times) பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின் சுருக்கம் இதோ :
   படிப்பறிவில்லாப் பாமரன் மனோவசியத்தில் ஆழும்போது அரைமயக்க நிலையில் பல நோய்களுக்குத் தக்க மருத்துவம் அளிக்கின்றான் - இது மருத்துவ உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த செய்தி அமெரிக்காவில் கென்டகியில் (Kentucky) ஹாப்கின்ஸ்வில் (Hopkinsville) என்னும் ஊரில் பிறந்த எட்கர் கெய்ஸ் (Edgar Cayce) என்பவரைப் பற்றியதாகும். ஒன்பதாவது வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்ட எட்கர் கெய்ஸ் தனது 23-வது வயதில் திடீரென்று பேசும் திறன் பாதிக்கப்பட்டார். அந்த ஊரின் தலைசிறந்த மருத்துவர்கள் இனி அவரால் முணுமுணுப்பதைத் தவிர இயல்பாக பேசமுடியாது என்று முடிவு கட்டியதும் எட்கர் கெய்ஸ் ஆழ்நிலை தியானத்திற்குப் போனார். தியானத்தில் அவருடைய உள்ளுணர்வு அவருடைய தொண்டையில் உள்ள குரல் நரம்புகள் செயலற்றுப் போயிருப்பதாக உணர்த்தியது. உடனே அவர் தனக்குத்தானே சுய உந்துதல் மூலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்துமாறு தன்னுடைய இரத்த நாளங்களுக்கு ஆணையிட்டார். ஒருசில நொடிகளில் நரம்புகள் புத்துணர்ச்சியோடு செயல்பட்டன.
   டாக்டர் தாமஸ் ஹவுஸ் (Dr. Thomas House) என்பவரது மனைவி வயிற்று வலியால் அவதியுற்றபோது, அன்றைய நாளில் மிகப் பெரிய நிபுணராகக் கருதப்பட்ட டாக்டர் ஹாக்கார்ட் (Dr.W.H.Haggard) என்பவர் திருமதி.ஹவுஸ் அவர்களின் வயிற்றில் கட்டி இருப்பதாகவும் அதை நீக்க ஓர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஆனால் திருமதி.ஹவுஸ் ஏற்கெனவே எட்கர் கெய்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அவரிடம் இரண்டாவது கருத்து கேட்க வேண்டிச் சென்றார். அவரைப் பரிசோதித்த எட்கர் கெய்ஸ், அவரது வயிற்றில் கட்டி இல்லை என்றும் அவரது பிரச்சினை மலச்சிக்கல்தான் என்றும் அவர் கருத்தரித்திருப்பதாகவும் கூறினார். அவரது மலச்சிக்கலைப் போக்க மருந்தும் கொடுத்தார். என்ன ஆச்சரியம் அந்தப் பெண்மணியின் மலச்சிக்கல் அகன்றது. ஒரு சில மாதங்களுக்குப்பின் அந்த பெண்மணி ஒரு குழந்தையை ஈன்றெடுத்தார். மருத்துவ உலகம் அவருக்கு எதிராக எத்தனையோ போராட்டங்களை நடத்தியது. ஆனால், அவர்களால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை. மே 1927-இல் வர்ஜீனியா கடற்கரை அருகே தி அúஸாசியேஷன் ஆஃப் நேஷனல் இன்வெஸ்டிகேடர்ஸ் (The Association of National Investigators) என்னும் ஒரு சிகிச்சை மையத்தை எட்கர் கெய்ஸ் தொடங்கினார். கடந்த 89 ஆண்டுகளாக அந்த மையம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எட்கர் கெய்ஸால் குணமாக்கப்பட்ட 9000 நோயாளிகளைப் பற்றிய கோப்புகள் இன்னும் அந்த மையத்தில் வைக்கப் பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது? நோயாளிகளின் நம்பிக்கையே அவர்களைக் (placebo effect) குணப்படுத்தியதாக சமீபத்தில் ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றி இங்கிலாந்தில் வெளியான ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையில் ஹோமியோபதியைப் பற்றியே இப்படி ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டு அது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. ஒருவேளை எட்கர் கெய்ஸைப் போன்றவர்களின் உடலிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளால் நோயாளிகளின் உடற்கூறில் ஏற்பட்ட நுண்ணதிர்வுகள் அவர்களது நோயைக் குணமாக்கி விடுகிறதா இது மருந்தா, மாயமா? இதற்குத் தக்க விடையை அறிவியல் கூறும் வரை டாக்டர் கெய்ஸைப் போன்றவர்கள் அமானுஷ்ய சக்தி படைத்தவர்கள் என்றே பலராலும் கருதப்படுவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai