Enable Javscript for better performance
அறிவியலுக்கு அப்பால்7- கீரோவிற்கு (Cheiro) ஆவியால் அளிக்கப்பட்ட ஓவியம்!- Dinamani

சுடச்சுட

  

  அறிவியலுக்கு அப்பால்7- கீரோவிற்கு (Cheiro) ஆவியால் அளிக்கப்பட்ட ஓவியம்!

  By dn  |   Published on : 15th August 2016 12:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ariviyal

  எண்கணிதத்தின் (Numerology) தந்தை என்று உலகளவில் போற்றப்படும் கீரோவின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஓர் அழகான ஓவியம், ஓர் ஆவியால் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது என்றால் நம்பமுடியுமா?

  எண்களுக்குச் சக்தி உண்டு என்றும், ஒவ்வொரு எழுத்தும் (alphabet) ஓர் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டது என்றும், ஒவ்வொரு மனிதனின் பெயரிலுள்ள எழுத்துக்களின் கூட்டுத் தொகையும் அவரது பிறந்த தேதியும் ஒத்துப்போனால் வாழ்க்கை வளம்பெறும் என்றும் கூறி எண்கணிதத்தை உலக அரங்கில் பிரபலப் படுத்தியவர் கீரோ. உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்த கீரோ, தஞ்சை சரஸ்வதி மகாலில் இருந்த ஏட்டுச் சுவடிகளில் இருந்துதான் எண்கணிதத்தை உருவாக்கினார் என்று ஒரு நம்பிக்கை சிலரிடம் உண்டு.

  கீரோவின் இயற்பெயர் கவுன்ட் லூயி ஹெமன் (Count Louis Hemon). உலகம் முழுதும் சுற்றிய அவர், இறுதியில் லண்டனில் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்றெண்ணி ஒரு மிகப்பெரிய பங்களாவை விலைக்கு வாங்கினார். அந்த பங்களாவில் குடியேறிய முதல் நாள் இரவு சுமார் 12 மணிக்கு தன் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கீரோ திடீரென்று வீட்டின் அடித்தளத்தில் கதவு திறந்து மூடப்படும் ஓசை கேட்டார். பிறகு அடித்தளத்திலிருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களில் பூட்ஸ் காலடியோசை பலமாகக் கேட்டது. அப்போது, அந்த வீட்டில் கீரோவையும் அவரது செயலாளர்

  ஹென்றி பெர்கின்ஸையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எனவே, கீரோ பக்கத்து அறையில் இருந்த தனது செயலாளரை அழைத்தார். பயத்தில் நடுங்கிக்கொண்டே வந்த அவர் தானும் காலடியோசையைக் கேட்டதாக ஒப்புக்கொண்டார். எனவே, இருவரும் அடுத்த நாள் காலை வீட்டை ஒவ்வொரு மூலையாகச் சோதனை செய்து, முந்தைய நாள் நிகழ்ச்சி தங்களது பிரமையாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

  ஆனால், அதே நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது. எனவே, கீரோ ஒரு சீறிப்பாயும் நாயை விலைக்கு வாங்கினார். முதல் நாள் கீரோ அந்த நாயை வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் கொண்டு

  சென்றபோது, அடித்தளத்தில் ஒரு குறிப்பிட்ட அறையின் முன் வந்ததும் அந்த நாய் கீரோவின் கையில் இருந்த சங்கிலியை உதறிவிட்டு மாடிக்குத் தாவிப்போய் கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்டது. எனவே, அந்த வீட்டில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக கீரோ நம்பிக்கை கொண்டார்.

  பிறகு ஒருநாள் கீரோ சில நண்பர்களை விருந்துக்கு அழைத்தார். விருந்து முடிந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று கீரோவின் வீட்டில் இருந்த புத்தர் சிலையின் முன்னால் இருந்த பூந்தொட்டியில் யாரோ தட்டும் ஒலி கேட்கத் துவங்கியது. உடனே, விருந்துக்கு வந்திருந்தவர்கள், புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு ஆவியுடன் பேசிப் பார்ப்போம் என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட கீரோ, கையில் ஒரு பென்சிலையும் நோட்டுப் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு, சத்தம் வந்த திசையை நோக்கி "ஆங்கில மொழியிலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் நான் வரிசையாகச் சொல்கிறேன். சரியான எழுத்தை உச்சரிக்கும்போது ஒருமுறை தட்டுங்கள். அப்படி நீங்கள் தட்டுவதில் இருந்து உங்கள் பெயரை நாங்கள் அறிந்துகொள்கிறோம்' என்றார்.

  பிறகு, அவர் ஆங்கில மொழியின் ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கத் தொடங்கியதும் பூந்தொட்டியில் தட்டும் ஒலி கேட்கத் தொடங்கியது. அந்தக் கேட்டொலியில் இருந்து உருவான சொற்றொடரைக் கூட்டிப் படித்தபோது, அதில் "என் பெயர் கார்ல் க்லிந்த். நான் 120 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டில் வாழ்ந்தேன். கீழே படிக்கட்டுக்குப் பின்னால் உள்ள காலி அறைக்குப் போனால் மற்ற செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்' என்ற செய்தி உருவாகியது. உடனே, அனைவரும் அந்த அறைக்கு ஓடினார்கள். அங்கே மீண்டும் அதே முறையைப் பின்பற்றியபோது, தான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் என்றும், அந்த அறையில் லிட்டல் என்பவனைத் தான் கொலை செய்ததாகவும் செய்தி வெளிப்பட்டது.

  உடனே, கீரோ இந்தச் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பரிசோதிப்பதற்காக பாரிஷ் தேவாலயத்துக்கு ஓடினார். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பதிவேடுகளை அவர் புரட்டியபோது, உண்மையிலேயே அந்த வீடு 1740 முதல் 1800-ஆம் ஆண்டு வரை கார்ல் க்லிந்த் என்பவருக்குச் சொந்தமாக இருந்தது என்று அறிந்தார்.

  எனவே, மீண்டும் கீரோ அந்த ஆவியோடு தொடர்பு கொண்டபோது, தானும் தன் காதலி சார்லெட்டும் அந்த வீட்டில் இன்பமாக இருந்ததாகவும், இடையில் லிட்டல் என்பவன் தன் காதலில் குறுக்கே வர முயற்சி செய்ததால் தான் அவனைக் கொன்று கீழே உள்ள அறையில் புதைத்துவிட்டதாகவும் செய்தி வந்தது. அதைவிட வேடிக்கை என்னவென்றால், தன் காதலியும் இறந்தபின் தன்னிடம் வந்துவிட்டதாகவும், தாங்கள் இருவரும் தற்போது பசுமை நிறைந்த நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.

  இதைக்கேட்ட கீரோ தான் உதவிக்கரம் நீட்டுவதாகத் தெரிவித்தபோது, "உங்கள் உதவிக்கு நன்றி, எனக்கு ஏதேனும் உதவி செய்வதானால் கீழே உள்ள அறைக்கு வருவதை அடியோடு நிறுத்திவிடுங்கள்.

  எங்களைத் தனியே இருக்க விடுங்கள்' என்றது. அதை அப்படியே ஏற்றுக்கொண்ட கீரோ அன்று முதல் கீழறைக்குப் போவதை அடியோடு நிறுத்திவிட்டார்.

  பல வருடங்களுக்குப்பின்னால், கீரோ அந்த வீட்டை விற்றுவிடத் தீர்மானித்தபோது, மீண்டும் கார்ல் க்லிந்த்தின் ஆவியை அழைத்தார். தான் விடைபெறுவதாக அவர் கூறியபோது, நெகிழ்ந்துபோன அந்த ஆவி, கீரோவிடம் "நானும் உன்னுடன் வர விரும்புகிறேன். ஆனால், என்னால் முடியாது. நீ ஒருவன்தான் என்னைப் புரிந்துகொண்டாய். எனவே, நினைவுப் பரிசாக உனக்கு ஒன்றைத் தர விரும்புகிறேன்.

  என் அறையில் உள்ள மர வேலைப்பாடுகளுக்குப் பின்னால் என் காதலியின் உருவம் வரையப்பட்ட ஓர் ஓவியம் இருக்கிறது. அதை எங்களுடைய நினைவுப்பரிசாக நீ எடுத்துக்கொள். உன் புது வீட்டில் அந்த ஓவியத்தை மாட்டிவைத்துக்கொள். பின்னால் நீயும் ஒருநாள் எங்களைப்போல் நிழல் உலகத்திற்குள் வரும்போது, உன்னை வரவேற்க இரண்டு அன்புள்ளங்கள் அங்கே காத்திருக்கும் என்பதை நினைவு கொள்' என்று கூறிவிட்டு மறைந்தது. உடனே, கீரோ கீழறையில் உள்ள மர வேலைப்பாடுகளை நீக்கிப் பார்த்தபோது, ஒரு ஓவியம் அங்கு கிடைத்தது. தன் வாழ்நாளின் இறுதிவரை கீரோ அந்த ஓவியத்தை தன் வீட்டில் மாட்டி வைத்திருந்தார்.

  கீரோ இறந்தபின் நிழல் உலகத்திற்குப் போனாரா, கார்ல் க்லிந்த்தையும் அவரது காதலியையும் சந்தித்தாரா, அப்படி நிழல் உலகம் என்ற ஒன்று இருக்கிறதா என்றெல்லாம் யாருக்குத் தெரியும்!

  போனவர்கள் இன்னும் திரும்பி வரவில்லையே?

  - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai