

சிவபெருமானின் அடியார்களில் குறிப்பிடத்தக்கவர்களாக கூறப்படுவோர் அறுபத்துமூவர் ஆவர். அவர்களில் அரிவாட்டாய நாயனாரும் ஒருவர். சிவபெருமானுக்குக் கொண்டு சென்ற நிவேதனப் பொருள் கீழே சிந்தியதால் தன் கழுத்தையே அறுத்துக் கொண்டு தனக்குத் தண்டனை கொடுத்துக் கொண்ட அருளாளர் இவர்!
சோழ நாட்டில் அமைந்துள்ள கணமங்கலம் எனும் கண்ணத்தங்குடியில் பிறந்த தூய சிவனடியாரான இவர், நாள்தோறும் செந்நெல் அரிசியையும், செங்கீரையும், மாவடுவையும் நீள்நெறிநாதருக்குப் படையல் செய்வது வழக்கம். இவரிடம் திருவிளையாடல் புரிய எம்பெருமான் திருவுளங் கொண்டார்.
இதனால் நாயனாரின் செல்வவளங்கள் குறைந்து அவரை வறுமை வாட்டியது. என்றாலும் நாயனார் கூலிக்குச் சென்று நெல்லறுத்து அதில் கிடைத்த நெல்லைக்கொண்டு இறைவனுக்கு திருவமுது படைத்து வந்தார். செந்நெல்லை இறைவனுக்கும், கார்நெல்லை தனக்குமாகப் பயன்படுத்தி வந்தார். ஆனால் அவருக்கு சோதனையாக கிடைத்த கூலி நெல்லும் செந்நெல்லாகவே அமைந்தது. இதற்குச் சற்றும் மனம் தளராத நாயனார், தான் பட்டினி கிடந்து இறைவனுக்கான செந்நெல்லைக்கொண்டு திருவமுது படைத்து வந்தார்.
உடல் நலிவுற்ற நிலையில், ஒருநாள் படையலுக்காகத் திருவமுதினை தட்டுத் தடுமாறி சுமந்து கொண்டு நீள்நெறிநாதர் ஆலயம் நோக்கி நடந்த நிலையில், தடுமாறி கீழே விழுந்தார். திருவமுது மண்ணில் சிந்தியது. இதைத் தன் தவறாகவே நினைத்து வருந்திய நாயனார், "இனி நான் ஏன் திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும்? ஆண்டவனுக்கு அமுது படைக்கும் பேறினை நழுவ விட்டேனே?' என்று வருந்தியபடி, தன்னிடம் இருந்த அரிவாளைக் கொண்டு தன் கழுத்தை அறுக்கலானார்.
உடனே பூமிக்குள் இருந்து தோன்றிய இறைவனின் திருக்கரம் நாயனாரின் கையைப் பற்றி தடுத்தாட்கொண்டது. அப்போது ரிஷப வாகனத்தில் தோன்றிய இறைவன், "இனி நீ வருந்த வேண்டாம். உன் மனைவியோடு நமது உலகம் வந்து இன்புற்று வாழ்வாயாக"', என்று அருள் வழங்கினார். அதன்படியே இருவரும் கயிலாயம் சென்று சேர்ந்தனர்.
தன் கழுத்தை அறுக்க அரிவாள் பூட்டினமையால் "அரிவட்டாயர்' என்றே அழைக்கப்பட்டார். இத்தகு சிறப்புமிகு அரிவாட்டாய நாயனார் அவதரித்த தலம், கண்ணத்தங்குடி. இங்கே கோயில் கொண்டிருப்பவர் நீள்நெறிநாதர் ஆவார்.
இப்பெருமைமிகு அரிவாட்டாயருக்கு விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை தலைமையில், குறிஞ்சிப்பாடி சிவனார் அடியார் திருக்கூட்டம், கண்ணத்தங்குடி அரிவாட்டாய நாயனார் வழிபாட்டு மன்றம் மற்றும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு தனி ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இதன் குடமுழுக்கு விழா செப்டம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி அளவில் நடைபெறுகின்றது. சிவனடியார்கள் இவ்வைபவத்தில் பங்கேற்று இறையருள் பெறலாம்.
தொடர்புக்கு : 73390 62010.
- பனையபுரம் அதியமான்
கண்ணத்தங்குடி நீணெறி நாதர் ஆலயம்
அரிவாட்டாய நாயனாரை ஆட்கொண்டவரே, நீள்நெறிநாதர் எனும் நீணெறிநாதர். அன்னை ஞானாம்பிகை. ஆமையின் செருக்கை அடக்கி, தோலினை ஆடையாக இறைவன் அணிந்த தலம். கோச்செங்கட் சோழன் தீராத நோய் தீர்ந்தபின் எழுப்பிய ஆலயம். படிக்காசுப் புலவர், தண்டலையார் சதகம் பாடி படிக்காசு பெற்ற கோயில். புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் தங்கி வழிபட்ட தலம். திருஞானசம்பந்தர், வள்ளலார் பாடிப் பரவிய தலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.