

இந்துக்கள் பின்பற்றும் கலாசாரங்கள், கடைப்பிடித்து ஒழுகிவரும் சீலங்கள் அனைத்திற்கும் வேதம்தான் மூலகாரணம்! வேதங்கள் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் பேசுகின்றன. ஆற்றவேண்டிய கடமைகளைப் போதிக்கின்றன. அந்த கடமைகளில் ஒன்று தான் பித்ரு (நீத்தார்) கடன் ஆற்றுவது. இல்வாழ்வானின் கடமையாக வள்ளுவப்பெருந்தகையும் "தென்புலத்தார்வழிபாடு' என்று இதனைச் சிறப்பித்து கூறியுள்ளார்.
மாளய பட்சம்: நீத்தார் கடன் நிறைவேற்ற சிறந்த காலமாகக் கருதப்படும் பதினைந்து புனித நாள்களை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். அதுவே, "மஹாளய பட்சம்' என்று அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள நாள்களே மாளய பட்ச நாள்களாகக் கருதப்படும். சாந்தரமான கணக்கின் அடிப்படையில் இவ்வாண்டு, ஆவணி 21 முதல் புரட்டாசி 3 வரை அதாவது செப்டம்பர் 6 முதல் 19 வரை அமையப்பெற்றுள்ளது. இந்த பதினைந்து நாள்களிலும் முன்னோர்கள் பூலோகவாசியாக நம்முடன் வாசம் செய்வதாக ஐதீகம்.
நாம் செய்ய வேண்டியது:
1. பித்ருக்கள் பூலோக வாசம் செய்யும் நாள்களில் அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் பேணுதல்.
2. பார்வணம் (முறைப்படி திதி கொடுத்தல்), ஹிரண்யம் (அரிசி, வாழைக்காய், பணம் தந்து தர்ப்பணம் செய்தல், தர்ப்பணம் (எள்ளும், தண்ணீரும் விடுதல்) ஆகிய இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை கட்டாயம் பின்பற்றி செய்து பித்ருக்கள் ஆசிபெற வேண்டும்.
3. இந்த பித்ருபூஜையை எள்ளும், நீரும் அளித்து எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு தர்ப்பணபூஜை மட்டும்தான் என்று கருதாமல் பித்ருக்களை நினைத்து அன்னதானம், பிண்டதானம் முதலியவைகளை அளித்தால் பன்மடங்கு பலன்உண்டு.
4. ஆறு, குளம், நதிக்கரைகளில் மற்றும் புனித தலங்களில் மஹாளய தர்ப்பணம் செய்வது உசிதம்.
5. மஹாளய பட்ச தினங்கள் முழுவதும் பிதுர்தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் மஹாபரணீ (செப் 10), மத்யாஷ்டமீ (செப்டம்பர்- 13), மஹாவ்யதீபாதம் (செப்டம்பர்- 14), கஜச்சாயா (செப்டம்பர்- 17) ஆகிய புனித நாள்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
"கயை' தலத்தின் சிறப்பு: மிகப்பெரிய தலம் விஷ்ணுகயா இன்றைய பிகார் மாநிலத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் இறந்த எவருக்கும் திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் இது. இங்குள்ள பல்குன நதி, விஷ்ணுபாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் யாத்ரீகர்கள் திதி கொடுக்கின்றனர். ஆற்றின் அக்கரையில் "ராமகயா' உள்ளது. சீதா, லட்சுமணர் உடனிருக்க, தசரத மகாராஜனுக்கு ராமபிரான் பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்த இடம்.
தென்னகத்தின் "ராமகயா': தமிழகத்தில் பல தலங்கள் கயைக்கு நிகராகப் போற்றப்படுகின்றது. அதில் கும்பகோணம் அருகில் கோவிந்தபுரம் என்ற க்ஷேத்திரத்தில் ஜெகத்குரு பகவந்நாம போதேந்திர ஸ்வாமிகள் அதிஷ்டானம் உள்ளது. இதற்கு சற்று தொலைவில் காவிரிக்கரை அருகில் உள்ளது "ஸ்ரீராம கயா தீர்த்தக்கட்டம்' இங்கு காசி விஸ்வநாதர் சந்நிதியையும் கதாதரர் சந்நிதியில் விஷ்ணுபாதத்தையும் தரிசிக்கலாம். தர்ப்பணம் செய்வதற்கு தனி மண்டபம் உள்ளது. தாயாருக்கு 16 (பதினாறு) பிண்டங்கள் வைக்கப்படும் தாத்பரியத்தைக் கூறும் அழகான வாசகங்கள் பிளாஸ்டிக் பலகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஸ்ரீராமபிரான் தட்சிண தேசம் வந்து காவிரி நதி தீர்த்தத்தில் நீராடி இந்த தலத்தில் பாணபுரீஸ்வரரை பிரதிஷ்டை செய்து, தனது பாணத்தினால் ஏற்படுத்திய நீரால் அபிஷேகம் செய்து பித்ரு தர்ப்பணம், சிரார்த்தம், பிண்ட பிரதானம் செய்தார் என்றும் ஆகையால் இங்கு செய்யப்படும் பித்ரு பூஜைகளுக்கு வடக்கே கயாவில் செய்த சிரார்த்த பலன் உண்டு என்றும் திருவிடைமருதூர் தலபுராணம் சொல்கின்றது.
ஸ்ரீராமரே நீராடியதால் ஆடுதுறை (தற்போது கோவிந்தபுரம்) என்று இந்த தலத்திற்கு பெயர் உண்டு. வடக்கே கயா செல்ல முடியாதவர்கள் கோவிந்தபுரம் வருவதற்கு ஓர் அரிய வாய்ப்பு.
"பித்ருபட்சமேளா' என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த மஹாளயபட்சத்தில் அவரவர் வசதிற்கேற்ப நீத்தார் கடனை பொருத்தமான இடங்களில் நிறைவேற்றினால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும்! வம்சம் தழைக்கும்! செல்வ வளம் பெருகும்!
- எஸ். வெங்கட்ராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.