ஆதிபுரீசனின் அருட்காட்சி!

தொண்டைநாட்டு பாடல் பெற்ற சிவாலயங்களில் முதன்மையாகவும் மூன்றுலகிலும் உள்ளவர்கள் வேண்டிய பொருளை எல்லாம் தரும் தலம் திருவொற்றியூர். சிவபெருமான் புற்றுருவில் வீற்றிருக்கின்ற திருத்தலம் திருவொற்றியூர்.
ஆதிபுரீசனின் அருட்காட்சி!

தொண்டைநாட்டு பாடல் பெற்ற சிவாலயங்களில் முதன்மையாகவும் மூன்றுலகிலும் உள்ளவர்கள் வேண்டிய பொருளை எல்லாம் தரும் தலம் திருவொற்றியூர். சிவபெருமான் புற்றுருவில் வீற்றிருக்கின்ற திருத்தலம் திருவொற்றியூர்.
உலகம் முழுவதும் நெருப்பாலும் காற்றாலும் பகுதி பகுதியாய் அழிந்து போனது. அதுபோக நீரும் ஜலப்பிரளயத்தை உண்டாக்கி முற்றிலும் அழித்தது. ஒரு பகுதி மட்டுமே எஞ்சி நின்றது. கடல் அதனையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்ளத் துடித்தது . அந்நிலையில் அங்கிருந்த அரன் அதனை "சற்று ஒத்தியிரும்' எனக் கட்டளையிட கடலும் பின்வாங்கியது. அதனால் அரன் இருந்த அந்த இடம் "திரு ஒத்தியூர்' என இருந்து திருவொற்றியூர் என வழங்கத்தொடங்கியது. உலகம் முழுவதும் உற்பத்தியாவதற்கு முன்பே உருவான இடமாதலால் இப்பகுதி ஆதிபுரி இறைவன், ஆதிபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
நான்முகனுக்கு காட்சி தருவதற்காக அக்கினி சொரூபமான இறைவன் அவ்வக்கினியின் மத்தியில் சதுர வடிவமாகிய சித்திரப் பலகை வடிவில் வன்னிமரத்தடியில் எழுந்தருளினார். அவ்வாறு தோன்றிய இறைவன் யாராலும் உருவாக்கப் படாத தானே சுயம்புவாய் உருவானதால் "தீண்டாத் திருமேனியன்' என அழைக்கப்பட்டார். சுயம்புலிங்கமான ஆதிபுரீசுவரர் தானே புற்றுமண் வடிவிலே தோன்றியவர் என்பதனால் "புற்றிடங்கொண்டார்' எனப்படுகின்றார். பிரளயத்திற்குப்பின் புதியதாக மீண்டும் உலகை அரன் சொற்படி பிரம்மன் படைத்தார். 
வாசுகி என்னும் பாம்பு அஷ்ட நாகங்களில் ஒருவன். நாகலோகத்தில் நல்லபடியாய் அரசு நடத்திக் கொண்டிருந்தான். சிவன் பால் அதீத பக்தி கொண்டிருந்தவன்.வான்மீகி முனிவர் ஒற்றியூர் இறைவனால் நித்தியம் பெற்றதை அறிந்து பூலோகம் அடைந்தான். திருவொற்றியூருக்குப் போய் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வன்னி மரத்தடியில் எழுந்தருளியுள்ள இறைவனை துதித்தான். 
அவ்வாறே செய்த வாசுகி நாகம், இறைவன் மகிழ்ந்து இருக்கும் நேரத்தில் உங்களை விட்டு விலகாத தன்மையை எனக்கருள வேண்டுமென வேண்டினான். இறைவன் கட்டளைப்படி திருப்பாலைவனம் சென்று இறைவனை தரிசித்து மீண்டும் ஒற்றியூர் வந்து தரிசனம் செய்து வணங்கி உங்கள் திருவடி சேர்த்து அருளவேண்டுமென வேண்டினான். அந்த வாசுகிப்பாம்பைத் தம்முடைய திருவடியில் பொருந்தும்படிச் செய்தார். அதுவும் சிவபெருமானிடத்தில் ஐயக்கியமானது. 
வாசுகி சிவன் பாதம் சேர்ந்த தகவலறிந்த ஆதிசேஷன் தினமும் தன் நந்தவனத்தில் மலர்ந்த மலர்களை பறித்துவந்து புஷ்பாஞ்சலி செய்து, அவன் பிறவித் துயரறுக்க வழி வேண்டினான். மறுநாள் காலை வரும்போது தான் சூட்டிய மலர்கள் அகற்றப்பட்டு புதியதாக பூஜை செய்யப்பட்டிருப்பதை அறிந்து மன வருத்தம் அடைந்தான். ஒரு விருச்சிகப் (கார்த்திகை) பெüர்ணமி நாள் இரவில் ஒளிந்திருந்து பார்த்தபோது நள்ளிரவில் சந்திரன் வந்து ஏற்கெனவே இருந்த மலர்களை அகற்றி பூஜை செய்வதைக் கண்டு அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அப்போது அக்கினிஸ்தம்பம் போல் இருவர் மத்தியிலும் சிவபெருமான் தோன்றினார். இருவரும் போரிடுதலை விட்டு போற்றித் துதித்தனர். அவர்களின் பக்தியைப் போற்றி அவர்களுக்கும் நித்தியத்துவத்தை அருளினார். 
இத்தனைச் சிறப்பு வாய்ந்த மூலவர் படம்பக்கநாதர், புற்று வடிவ சுயம்பு லிங்கத் திருமேனியை எப்போதும் கவசத்துடன் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்தில் 3 நாள்களைத் தவிர மற்ற நாள்களில் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். விருச்சிக முழுநிலவு நாளன்று கவசம் திறக்கப்பட்டு பௌர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து 3 நாள்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 
இந்த தைலம் சார்த்தும் பூசைச் சடங்கு காலம் காலமாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. இம்மூன்று நாள்களிலும் பிரம்மா, வாசுகி ஆதிசேஷன் சந்திரன் ஆகியோர் வந்திருந்து சிவனை பூசிப்பதாக நம்பப்படுகிறது. திருவொற்றியூர் தலபுராணமும் இவர்கள் வந்து வழிபாடு செய்ததைக் குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சார்த்தப்படும். இங்குள்ள லிங்கத் திருமேனி தீண்டா திருமேனியனாக இருப்பதால் , இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சாதாரண நாள்களில் ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். 
இவ்வாண்டு, 03.12.2017 ஞாயிறன்று மாலை 6.00 மணிக்கு புற்றிடம் கொண்டாரான படம்பக்கநாதர் ஆகிய ஆதிபுரீஸ்வரர் மீதுள்ள கவசம் களையப்பட்டு தைலம் சார்த்தப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். 04.12.2017 திங்கள்கிழமை முழுநாளும்; 05.12.2017 செவ்வாய்க் கிழமை இரவு 8.00 மணிவரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். 
- இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com