சமூக நலனில் அக்கறை கொள்ளுங்கள்!

இறைவன் இவ்வுலகில் தாம் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் இயல்புக்கேற்ப பல்வேறு திறமைகளைக் கொடுத்திருக்கிறார்.
சமூக நலனில் அக்கறை கொள்ளுங்கள்!

இறைவன் இவ்வுலகில் தாம் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் இயல்புக்கேற்ப பல்வேறு திறமைகளைக் கொடுத்திருக்கிறார்.
 புனித பைபிளில் இயேசு ஓர் உவமை மூலம் இக்கருத்தை எடுத்துரைக்கிறார் (மத்தேயு 25: 14-30) . நெடும் பயணம் செல்லவிருந்த ஒரு செல்வந்தன், தன் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கேற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்துகளும்; வேறொருவருக்கு இரண்டு தாலந்துகளும்; இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். (தாலந்து- கிரேக்க வெள்ளி நாணயம்)
 நெடுங்காலத்திற்குப்பின் அந்தப் பணியாளர்களின் தலைவன் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்துகள் பெற்றவர் அவரை அணுகி, "ஐயா ஐந்து தாலந்துகளை என்னிடம் ஒப்படைத்தீர். இதோ இன்னும் ஐந்து தாலந்துகளை ஈட்டியுள்ளேன்' என்றார். மகிழ்ச்சியடைந்த தலைவன் அவனை இன்னும் பெரிய பொறுப்புகளில் அமர்த்தினார். இரண்டு தாலந்துகளைப் பெற்றுக் கொண்ட பணியாளனும் அவரை அணுகி, " ஐயா, வாணிபம் செய்து மேலும் இரண்டு தாலந்தை ஈட்டியுள்ளேன்!' என்றான். திருப்தியடைந்த தலைவனும் அப்பணியாளனிடமும் புதிய பொறுப்புகளை ஒப்படைத்தார்.
 ஒரு தாலந்தைப் பெற்ற பணியாளனோ அவரிடம் வந்து, " ஐயா, நீர் மிகக் கடுமையானவர் என்று எனக்குத் தெரியும் . எனவே, மிகப் பத்திரமாக மண்ணுக்கடியில் புதைத்து வைத்திருக்கிறேன்' எனக்கூறி ஒரு தாலந்தை கொண்டு வந்து கொடுத்தான். கோபமுற்ற தலைவன் அத்தாலந்தை பத்து தாலந்து உடையவரிடம் ஒப்படைத்துவிட்டு, சோம்பேறியான வேலையாளனுக்கு உரிய தண்டனையையும் கொடுத்தார்.
 எனவே, இறைவன் நமக்களித்துள்ள தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு, சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாகத் திகழவேண்டும். எவ்வளவுக்கு அதிகமான வசதிகளையும் வாய்ப்புகளையும் ஒருவனுக்கு இறைவன் கொடுத்திருக்கிறாரோ, அவ்வளவுக்கு மேலாக நம் அண்டை அயலாரிடம் அக்கறை கொண்டு வாழ நாம் எதிர்பார்க்கப்படுகிறோம். இதுவே, இறைவனது படைப்பின் குறிக்கோள்.
 அமெரிக்காவில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு! உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக இருந்த ராக்பெல்லர் நோய்வாய்ப்பட்டு படுக்கையை விட்டு எழவும் முடியாமல் இருந்த தருணத்தில், உலகின் சிறந்த மருத்துவர்கள் கொடுத்த எந்த மருந்துமே பலனளிக்கவில்லை. கடைசியாக, மனோதத்துவ நிபுணர்கள் வந்து பரிசோதித்து, " ஏழைகளுக்கு உதவி செய்து பாருங்கள். இதுதான் கடைசி வழி' என்று கூறிவிட்டனர்.
 இதுவரை பணத்தைப் பெருக்குவதிலேயே குறியாக இருந்த ராக்பெல்லர், மனோதத்துவ நிபுணர்கள் கூறியபடி ஏழைகளுக்கு உதவுவதற்காக சில கோடி டாலர்கள் அளிக்குமாறு உத்தரவிட்டார். சில நாள்களிலேயே உடல்நலம் தேறி படுக்கையை விட்டு எழும் நிலைக்கு வந்தார். தர்மத்தின் பலனை அனுபவித்த அவர், அதன்பிறகு "ராக்பெல்லர் பவுண்டேஷன்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல கோடி டாலர்களை ஏழைகளின் நன்மைக்காக செலவிடும்படி செய்தார். உடல்நலமும் மனநலமும் பெற்று மகிழ்வுடன் வாழ ஆரம்பித்தார்.
 அன்பும் நீதியும் உலகிலே தழைத்திட தன்னலமின்றி பிறருடன் கூடி உழைப்போம். என்னுடைய வசதி வாய்ப்புகள் கடவுள் எனக்குக் கொடுத்துள்ள கொடை. அதை நான் சுயநலமின்றி முடியாதவர்களுக்கு முடிந்தவரை செலவிடுவதை என்னிடம் இறைவன் எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் இவ்வுலகமே சொர்க்கலோகமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
 - பிலோமினா சத்தியநாதன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com