சென்னையில் ஸ்ரீரங்கம்!

கிழக்கிந்திய கம்பெனி, கி.பி. 1639 -ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22 -ஆம் தேதி, விலைக்கு நிலம் வாங்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்கள்.
சென்னையில் ஸ்ரீரங்கம்!

கிழக்கிந்திய கம்பெனி, கி.பி. 1639 -ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22 -ஆம் தேதி, விலைக்கு நிலம் வாங்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்கள். விற்றவர்களின் தந்தை சென்னப்ப நாயக்கன் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள பகுதிக்கு சென்னப்பட்டினம் என்று பெயர் சூட்டினர். தற்போது செüகார்பேட்டை என அழைக்கும் பகுதியில் நெல்லூர் ஒங்கோல் கொத்தப்பட்டனாவில் இருந்து குடியேறிய வணிக செட்டியார்கள், ஆற்காட்டு முதலியார்கள் மற்றும் உற்பத்தி, விளைபொருள் வியாபாரம் செய்யும் பூர்வ குடிகள் ஆகியோர் வசித்தனர். ஆந்திர செட்டியர்களுக்கு திருவரங்கன் பால் இருந்த ஈடுபாட்டால் அடிக்கடி திருவரங்கத்திற்குக் குடும்பத்துடன் சென்று தரிசித்தும் தான தருமமும் செய்து வந்தனர்.
 திருவரங்கன் வந்த வரலாறு: பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து திருவரங்க விமானம் வெளிப்பட்டது. அரங்கன் அதனில் சயனித்து சேவை சாதித்தார். சூரியனை அரங்கனுக்கு நித்திய பூசை செய்ய பிரம்மா நியமித்தார். சூரிய குலத்து இட்சுவாகு மன்னன் விமானத்தை அரங்கனோடு அவனது தலைநகரமாகிய அயோத்திக்கு கொண்டு சென்று வழிபட்டு வந்தான். அந்த வம்சத்தில் வந்த ராமர், தன் பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு அதை வைத்து பூஜை செய்துவரக் கொடுத்தார். விபீஷணன் தனது தலையில் சுமந்து இலங்கைக்கு செல்லும் வழியில் காவிரிக்கரையில் விமானத்தைக் கீழே இறக்கி வைத்து இளைப்பாறினான். மீண்டும் புறப்படும்போது விமானம் எடுக்க வரவில்லை. அரங்கனிடம் விபீஷ்ணனும் சோழமன்னன் தர்மவர்மனும் இறைவனிடம் வேண்ட, காவிரியின் ஆற்றிடைக்குறையில் விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டு மக்களுக்கு அருள விருப்பம் கொண்டதாகத் தெரிவித்தார். தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்ப அதன் வரலாறு தொடர்ந்தது.
 இந்த வரலாறு குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே பாட்டியும் மற்றவர்களும் சொல்லக் கேட்டு சிறுவர்களின் மனதில் தங்கிய ஆசை அவர்களோடு கூடவே வளர்ந்தது. இந்த ரங்கநாதரையும் விமானத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு சென்று தங்கள் வட சென்னையில் தங்கள் பகுதியில் வைத்து தினமும் வழிபட விரும்பினர்.
 அவர்கள் முயற்சியில் திருவரங்கத்து அரங்கனுக்கென்று சென்னையில் அவர்கள் வசிக்கும் இன்றைய செüகார்பேட்டை முல்லா தெருவில் ஓர் இடம் ஏற்பாடு செய்து திருவரங்கத்தைப் போலவே அங்கு ஒரு திருக்கோயிலை எல்லாரும் சேர்ந்து 1722- இல் அமைத்தார்கள். கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் தொன்மையான இத்திருக்கோயிலில் திருவரங்கத்தைப் போல் சிறிய திருமேனியுடன், சதுர்புஜங்களுடன், சங்கு சக்கரங்கள் தாங்கி, வலதுகை அபயமாகவும், இடது திருக்கரம் கடிஹஸ்தமாகவும், நாபிக்கமலத்திலிருந்து பிரம்மாவும் திருவடியருகில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்து ஆதிசேஷனில் சயனக்கோலத்தில் பாலரங்கநாதராக அதே பூஜை முறையில் அர்ச்சா மூர்த்தியாக அருளுகிறார்.
 வடக்கே தலைவைத்து வடக்கு தெற்காக சயன கோலம். உற்சவரும் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். ரங்கநாதரின் கருவறை விமானம் ஸ்ரீ ரங்கத்தைப் போன்று ரங்கவிமானம் அல்லது பிரணவாகார விமானமாக அமைந்துள்ளது.
 திருக்கோயில் சந்நிதிகள்: கருவறை, அர்த்த மண்டபம், மஹாமண்டபம் என்ற அமைப்பை உடைய மொட்டைகோபுர நுழைவாயிலுடன் அமைந்துள்ளது. துவஜஸ்தம்பம் ஆழ்வார், ஆசார்யர்கள் சந்நிதி, ரங்கநாயகித் தாயார், ஸ்ரீபட்டாபிராமர், ருக்மணி சத்யபாமாவுடன் வேணுகோபாலன், வரதராஜப் பெருமாள், ஆண்டாள், ஸ்ரீநிவாசர், யோகநரசிம்மர் ஆகிய சந்நிதிகள் அமைந்துள்ளன.
 வழிபாடுகள்: இந்தக் கோயிலின் அனைத்துப் பூஜைகளும் உற்சவங்களும் குறைவில்லாமல் ஸ்ரீரங்கம் பந்ததியை ஒட்டி ஆண்டு முழுவதும் நடக்கும் கோயிலாகும். மார்கழிமாதம் அத்யயன உற்சவம், பகல் பத்து நாட்கள் ஆனபிறகு வைகுண்ட ஏகாதசி இரவு துவங்கி பத்துநாட்கள் இராப்பத்து விழாவாக நடைபெறும்.
 வைகுண்டஏகாதசித் திருநாள்: பிரளயத்தில் மூழ்கிய உலகை புனர் நிர்மாணம் செய்ய படைத்த பிரம்மனின் பணியை இரு அசுரர்கள் தடுத்தனர். அவர்களை பெருமாள் வதம் செய்தார். அவர்கள் திருமாலிடம் வைகுந்தத்தில் அவரது திருவடி நிழலில் வாசம் செய்ய வேண்டும் எனக் கேட்டனர். மார்கழி சுக்ல பட்ச ஏகாதசியில் வடக்கு நுழைவாயிலைத் திறந்து அதன் வழியாக அவர்களை அழைத்துச் சென்று பரமபதத்திற்கு அனுப்பினார். ஆதலால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று அருள் கிட்டிய சுவர்க்கவாசல் திருநாள், வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது.
 நம்மாழ்வார் மோட்சம்: வைகுண்டஏகாதசிக்கும்முன்10 நாள்கள் பகல்பத்தும் பின் 10 நாள்கள் இராப்பத்து எனவும் இத்திருக்கோயிலிலும் ஸ்ரீரங்கம் போலவே கொண்டாடப்படுகிறது. திருவரங்கம் போலவே இராப்பத்து கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைவதாகவும் மீண்டும் உலகநலனுக்காகவும் நமக்காகவும் அவரை நமக்கு திரும்ப கொடுக்கக் கேட்பதாகவும் அதன்படி அளிப்பதாகவும் நம்மாழ்வார் மோட்சம் என்னும் வைபவம் இங்கும் கொண்டாடப்படுகிறது.
 இத்திருக்கோயிலில் டிசம்பர் 08 முதல் பகல்பத்து உற்சவம் துவங்கி நடைபெறுகிறது. டிசம்பர் 17 இரவு 7.00 மணிக்கு நாச்சியார் திருவல்லிக்கேணியின் அபிமானத்தலமான இக்கோயிலிலும் மறுநாள், டிசம்பர் 18- வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறந்து கோஷ்டிகள், பக்தர்கள் புடைசூழ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
 டிசம்பர் 18 வைகுண்ட ஏகாதசி. அன்று இரவு முதல் இராப்பத்து உற்சவம் தொடர்ந்து நடைபெற்று டிசம்பர்- 19 அன்று மாலை பக்தர்கள் மனம் குளிர பெருமாள் சயன சேவை சாதித்து, அதன்பிறகு இரவு புறப்பாடாகும்.
 இறுதியாக, டிசம்பர் 27 - அன்று நம்மாழ்வார் மோட்சம் புகுதலும் உலக நலன் வேண்டி மக்களுக்காக வேண்டுதல் செய்ய இத்திருக்கோயிலிலேயே வாசம் செய்யும் உற்சவமும் நடைபெறும்.
 அமைவிடம்: சென்னை பூக்கடை சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், யானைக் கவுனி மற்றும் பூக்கடை பேருந்து நிறுத்தங்கள்.
 தொடர்புக்கு: 0442529 0387 / 94454 10025.
 - சு. இராஜாஇளம்பெருவழுதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com