பொருநை போற்றுதும்! 19 - டாக்டர் சுதா சேஷய்யன்

"நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது' என்றொரு பழமொழியே உண்டு. "பார்க்கக்கூடாது' என்பதைவிட, "பார்க்கமுடியாது' என்றே சொல்லலாம். அகன்ற ஆறாகப் பாய்ந்து,
பொருநை போற்றுதும்! 19 - டாக்டர் சுதா சேஷய்யன்

பொருநையில் ஒருநாள் பொழிந்த அன்பொடும் படிந்தவர் பூண்ட
 வெவ்வினையால் அழிந்த சிந்தையர் ஆயினும், பரகதி அடைவர்
 - என்கிறது பாபநாசத் தலபுராணம்.
 இத்தகைய சிறப்புமிக்க பொருநை நல்லாளின் கரைகளில்தாம் எத்தனை எத்தனை அற்புத ஊர்கள்! இந்த ஊர்களின் அழகும், அமைப்பும், ஆலயங்களும், பெயர் விசேஷமும் வார்த்தைகளில் வர்ணித்துவிட முடியாதவை.
 "நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது' என்றொரு பழமொழியே உண்டு. "பார்க்கக்கூடாது' என்பதைவிட, "பார்க்கமுடியாது' என்றே சொல்லலாம். அகன்ற ஆறாகப் பாய்ந்து, அருவிகளில் வீழ்ந்து, கால்வாய்களில் கவின் சேர்க்கும் நதிகள் பலவற்றுக்கும் மூலம் காண்பது அரிது. அதாவது, குறிப்பாக எந்த இடத்தில் அந்த நதி தோன்றுகிறது என்று அறுதியிட்டுத் துல்லியமாகக் கூற முடியாது. மலைப் பகுதிகளிலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் சின்னஞ்சிறிய நீரோடைகள் பல தோன்றும்; பாயும். இந்த ஓடைகள் ஒன்றுக்கொன்று பலவிதமாகச் சேர்ந்து, பிரிந்து, கிளை படர்ந்து, சிறிது தொலைவில் நதியாக உருவாகும். இவ்வாறு உருவாகும் நதி, வளைந்து நெளிந்து ஓடும்போது, அருகில் இன்னும் சில பல நீரோடைகள் உருவாகி வந்து சேர்ந்துகொள்ளும்; ஆங்காங்கே இன்னும் சில ஆறுகள் வந்து கலக்கும். இந்தப் பகுதிகளில் மனிதர்கள் நடமாடும்போது, ஒரு சில நீரோடைகள் பளிச்சென்று புலப்படும்; ஒரு சில புலப்படா. மழை, வெயில் போன்ற சீதோஷ்ண நிலைகளைப் பொறுத்து, சில நீரோடைகள் சில நாட்களில் காணாமல்கூடப் போகலாம். குறிப்பிட்ட புள்ளியில்தான் நதி தொடங்கியது என்று சுட்டமுடியாமல் போகும். இதனால்தான், நம்முடைய முன்னோர்கள் "நதி மூலம் பார்க்கக்கூடாது' என்றார்கள்.
 பொருநையின் புறப்பாடு: பொருநை நல்லாளின் தொடக்கப் புள்ளியைத் துல்லியமாகச் சுட்டுவதும் கடினம். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தென்பகுதியில் உள்ள பொதிகை மலையின் உயர்சிகர நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், சுமார் 6120 அடி உயரத்தில், சிற்றோடைகளாகத் தாமிரவருணி தொடங்குகிறாள். அசம்பு மலை, அகத்திய மலை, பெரும் பொதிகை, சிவஜோதி பர்வதம், தென் கைலாயம் என்றெல்லாம் அழைக்கப்படுகிற இந்த மலை, அடர்ந்த வனங்களைக் கொண்டது. இந்த வனங்களுக்குள் பற்பல சிற்றோடைகளாகத் தவழ்கிறவள், பூங்குளம் என்னும் இடத்தில் நதியாக வெளிப்பட்டுப் பாயத் தொடங்குகிறாள். இதனால், பூங்குளமே பொருநையின் தோற்றுவாய் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 பொருநை நல்லாள் நதியாகப் பிறப்பெடுக்கும் விதம் அலாதியானது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சிகரங்களில் பெய்யும் மழை, கிழக்குச் சாய்வறைகளில் ஓடைகளாக உருவெடுத்து நதியைத் தோற்றுவிக்கிறது. இதுதவிர, இன்னொரு சிறப்பும் இங்கே நிகழ்கிறது. உயர்ந்த இந்த மலைப்பகுதிகளில், ஆண்டு முழுவதும் மூடுபனி காணப்படும். காற்றிலும் தாவரங்களின்மீதும் நீர்த்துளிகள் நிறைந்திருக்கும். ஈரப்பதம் சொட்டிக் கொண்டே இருப்பதுபோன்ற உணர்வைத் தரும். மூடுபனியும் ஈரப்பதமும் நீர்த்துளிகளாகி நதியில் கலந்து பாயும்.
 அடர்வனங்களாகவும் மூடுபனிச் சிகரங்களாகவும் இருக்கிற இந்த இடங்களில், மேகங்கள் சஞ்சரிக்கும்போது, மனிதர்கள் சற்றே வேகமாகப் பேசினால்கூட மேகங்கள் கலைந்தோடிவிடும் என்கின்றனர் இந்தப் பகுதிகளில் வசிக்கிற காணி என்னும் பழங்குடிப் பெருமக்கள்.
 நிறைய செடிகொடிகளும் தாவரங்களும் நிறைந்த இப்பகுதிகளில், கிளைகளும் மரப்பட்டைகளும் இலைகளும் மலர்களும் நீரில் விழுகின்றன. இதனால், பொருநை நீர் மருத்துவ குணத்தைப் பெறுகிறது.
 பூக்கள் சூழும் பூங்குளம்: பூங்குளம் என்ற பெயருக்கு என்ன காரணம்? கேரள-தமிழக எல்லைப் பகுதிகளான சங்கு முத்திரை, பொங்காலைப் பாறை ஆகியவற்றின் அருகில் பூங்குளம் உள்ளது. பொதிகையின் உயரத்திலிருந்து நோக்கினால், பள்ளத்தாக்கில் சிறிய குட்டைபோல் தோற்றம் தருகிற பூங்குளத்தைச் சுற்றிலும், குறிப்பிட்ட சில மாதங்களில் "கருடா' மலர்கள் பூக்கும். இந்த மலர்களாலேயே "பூங்குளம்' என்ற பெயர். கொரலோகார்பஸ் எபிஜியஸ் என்னும் தாவரவியல் பெயர் கொண்ட கருடா, கொடி வகைத் தாவரமாகும். அகன்று பருத்த வேர்ப்பகுதிகளைக் கொண்ட நீண்ட கொடி. பூக்கள் மஞ்சளாகவும் காயும் கனியும் சிவப்பாகவும் இருக்கும். இந்தக் கனிகளை எட்டத்திலிருந்து பார்த்தால், கழுகு, கருடன் ஆகியவற்றின் உருவம் போல் தென்படும். ஆகாச கருடன், கொல்லன் கோவை என்றும் வழங்கப்படுகிற கருடாக் கொடியை, சமஸ்கிருதத்தில் கடம்பம் என்றும் தெலுங்கில் ஆகாச கெட்டா என்றும் அழைக்கிறார்கள். "ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்' என்னும் பழமொழிக்கு (இதுவே சிதைந்து, ஆயிரம் பேரைக் கொன்றால் அரை வைத்தியன் என்று மாறிவிட்டது), இந்தக் கொடியே ஆதாரம். இதன் வேர்களை எடுத்து வைத்துக் கொள்வார்களாம் வைத்தியர்கள். நச்சுப் பாம்பின் விஷத்தை முறியடிக்கும் ஆற்றல் இந்த வேருக்கு இருப்பதால், யாரிடம் இது இருக்கிறதோ, அவர் வைத்தியராகிவிடலாம்!
 வானிலிருந்து வீழ்ந்து. . . : அது சரி, பூங்குளத்திலிருந்து பொருநைப் பெண் புறப்பட்டுவிட்டாள். பின்னர்?
 தாமிரவருணியைத் தொட்டபடியே, மானசீகமாக அகத்திய மலைப் பகுதிகளுக்குள் பயணிக்கலாம். முதலில், பாணதீர்த்தம். களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் எல்லைகளுக்குள், காரையாறு அணைத்தேக்கத்திற்கு மேற்கே உள்ள அருவி (பாபநாசம் ஊரிலிருந்து சுமார் 14 கி.மீ. மலைப்பாதையில்; நெல்லையிலிருந்து சுமார் 65 கி.மீ.).
 அகத்தியரும் லோபாமுத்திரையும் அழைத்து வந்தபோது, இந்த இடத்தில் வேகமாகப் பாய்ந்த தாமிரவருணி, வில்லிலிருந்து அம்பு பாய்வதுபோல், மேலிருந்து கீழாகச் சீறிப் பாய்ந்தாளாம். இதனால் (பாணம் போல் பாய்ந்ததால்), "பாண தீர்த்தம்' என்று பெயர் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். அகத்தியரின் சீடனாக மாறி அவருக்குப் பணிவிடை புரிந்த பாணாசுரன் என்பவன் ஏற்படுத்திய தீர்த்தம் என்றுமொரு கதை உண்டு. பாணதீர்த்தத்திற்கு முன்பாகவே, பேயாறு, சித்தாறு, உள்ளாறு ஆகியவை வந்து பொருநையில் சேருகின்றன. பாறைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வேகமாகப் பாய்ந்த பொருநை, இந்தச் சிறிய ஆறுகளின் நீர்ப்பெருக்கால் பெருத்து, பாணதீர்த்தமாகக் கீழே சரிகிறாள்.
 உயரத்திலிருந்து வேகமாக நீர் மகள் விழுவதைக் கண்ட பண்டையகால மக்கள், ஆகாச நதி பூமிக்கு வருகிறாள் என்னும் பொருள்பட, வான தீர்த்தம் என்று வழங்கியிருக்கவேண்டும். அதுவே, பாண தீர்த்தம், வாண தீர்த்தம் என்றெல்லாம் மருவியிருக்கக்கூடும். "இயற்கை அன்னையின் இதயம்' என்றே இதனை வர்ணிக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் தமிழ்ச் சான்றோருமான டாக்டர் மா.ராசமாணிக்கனார். முந்தைய காலங்களில் (ஓரளவுக்கு இப்போதும்கூட) பாணதீர்த்தத்திற்குச் செல்வது கடினம்; பாறையும் கல்லுமாகக் கரடு முரடாக இருக்கும். மூலிகைகளின் மருத்துவமும் முன்னோர்களின் மகத்துவமும் செறிந்த இந்த அருவியில் நீராடுவதற்காக, பலவித சிரமங்களையும் பொருட்படுத்தாமல் மக்கள் செல்வார்களாம். "வாழ்நாளைக் கொடுத்து வானதீர்த்தம் ஆடு' என்றொரு சொலவடை நிலவியதாகவும், இந்தத் தீர்த்தத்தில் நீராடுவது அவ்வளவு சிறப்பானது என்றும் ராசமாணிக்கனார் செப்புகிறார்.
 தன்னுடைய தந்தை தயரதருக்கு, ராமபிரான், பாணதீர்த்தத்தில் பித்ரு கடன் செலுத்தித் திதி கொடுத்தாராம். வசதியும் தொழில்நுட்பமும் குறைவாக இருந்த காலங்களில், பாணதீர்த்த பகுதியைத் தாண்டி, மலைகளுக்குள் மக்கள் செல்லமாட்டார்கள். ஆகவே, தாமிரவருணியின் தொடக்கம் பாணதீர்த்த அருவி என்றே கொண்டாடினார்கள். "தாமிரவருணியின் தாய்' என்றே இந்தத் தீர்த்தத்தை விவரித்தார்கள்.
 (தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com