Enable Javscript for better performance
ஆண்டவர் விரும்பும் நோன்பு!- Dinamani

சுடச்சுட

  
  v4

  மதம் ஒருவனது வாழ்வைச் செம்மைப்படுத்தும் உயரிய ஆயுதமாகத் திகழ்கிறது. மகிழ்வை அள்ளித்தந்து மனங்களை அளப்ரிய சந்தோஷத்தால் நிரப்புகிறது எல்லா மதங்களைச் சார்ந்த திருவிழாக்களும். அதேசமயம் மனங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் நிலை நிறுத்துவதிலும் மதம் பெரும்பங்கு வகிக்கிறது. எல்லா மதங்களுமே ஜெயம், தவம், தான தர்மம் ஆகிய நற்காரியங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்தாலும் ஒரு சில குறிப்பிட்ட காலங்களில் நோன்பிருப்பதை வலியுறுத்திக் கூறுவதைக் காண்கிறோம்.
  " நடவுக்கு ஒருகாலம்; அறுவடைக்கு ஒருகாலம்;
  அழுகைக்கு ஒரு காலம்; சிரிப்புக்கு ஒருகாலம்
  போருக்கு ஒரு காலம்; அமைதிக்கு ஒருகாலம்
  (சபை உரையாளர் 3: 2,4,8)
  மார்கழி, தை மாதங்களில் இந்து சகோதரர்களும் ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் சகோதரர்களும் விரதத்திற்கும் நோன்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதைப்போன்று கிறிஸ்துவர்களும் விபூதி புதன் முதல் (பிப்ரவரி 14 ஆம் நாள்) உயிர்ப்புப் பெருவிழாவான நாற்பது நாள்கள் நோன்பிருந்து ஜெப, தப, பக்தி முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இக்காலமே தவக்காலம் என்றழைக்கப்படுகிறது.
  தவக்காலத்தின் தொடக்க நாளான விபூதி புதனன்று குருவானவர் விசுவாசிகளின் நெற்றியில் சாம்பலைப்பூசி " மண்ணிலிருந்து வந்த மனிதனே, நீ மண்ணுக்கே திரும்புவாய்.. மறவாதே!' என்று கூறி நிலையாமையை நினைவுறுத்துகிறார். நிலையில்லா இவ்வுலக வாழ்வில் முடிந்த அளவு நற்காரியங்களைச் செய்து, நிலையான மறுவுலக வாழ்வுக்கு நம்மை தயார் செய்ய வேண்டும் என்பதையே அந்த நாள் நினைவுறுத்துகிறது.
  இறைவனுக்கு ஏற்ற நோன்பு எது என்பதைக் குறித்தும் பைபிளிலேயே விளக்கம் கூறப்பட்டுள்ளது. "" ஒருவன் நாணலைப் போல் தன் தலையை தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா.. எனக்கு ஏற்ற நோன்பு..? ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும் பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும் உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் .. அன்றோ நான் விரும்பும் நோன்பு..! அப்போது உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். ஆண்டவரின் மாட்சி உனக்குப்பின் சென்று காக்கும். ஆண்டவர் உன்னைத் தொடர்ந்து வழி நடத்துவார்'' (எசாயா 58)
  மேலும் பிறர் பார்க்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டமாக விளம்பரப் படுத்திக்கொள்ளும் இன்றைய செயல்பாடுகளையும் ஆண்டவர் விரும்புவதில்லை. " நீங்கள் நோன்பு இருக்கும்போது முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார் (மத்தேயு 6: 16-18)
  வரப்போகும் இந்த தவக்காலத்தில் இரக்கமும் அன்பும் நிறைந்த நம் செயல்கள் மூலம் கலைந்த ஓவியமாய் குலைந்து கிடக்கும் இந்த உலகை, இறைவன் முதன் முதலில் படைத்த அழகிய உலகமாக மாற்றிட நம்மாலான முயற்சிகள் செய்து இறைவனின் அருளைப் பெறுவோம்.
  - பிலோமினா சத்தியநாதன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai