Enable Javscript for better performance
வெற்றிக்கு உற்ற வழி- Dinamani

சுடச்சுட

    
    v3

    "அறிவாளிகளே! அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்'' என்ற எழில்மறை குர்ஆனின் 5-100 ஆவது வசனம் உலகில் நன்மை நல்குவதினும் கெடுதி பயப்பவையே மிகுந்து உகந்திட ஊக்குவிக்கின்றன. அறிஞர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி கெட்டதை விட்டு விலகி நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து கடைபிடித்து கடைத்தேற்றம் பெற்று வெற்றி பெறுவதைப் பேசுகிறது. அதிகாலையிலும் பகலும் இரவும் வெற்றியை நோக்கி வாருங்கள் என்று பாங்கு (தொழுதகை அழைப்பு) ஒலியில் அறைகூவி அழைக்கப்படுகிறது. இதன் பொருள் உங்களுக்கு எதுவெல்லாம் நன்மை பயக்குமோ அவற்றை நோக்கியும் உங்களின் இம்மை மறுமை வாழ்விற்குப் பயன் தருவதை நோக்கியும் விரைந்து வாருங்கள். வெற்றி என்பது வாழ்வில் ஈடேற்றத்தையும் பெற்று தரவேண்டும். இவ்வெற்றியைப் பெறும் வழிகள்.
     வெற்றியைக் குறிக்கும் அல்லாஹ் என்னும் சொல் குர்ஆனில் நாற்பது இடங்களில் நவிலப்படுகிறது. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நிறுத்துவார்கள். நாம் வழங்கிய பொருள் செல்வத்திலிருந்து செலவு செய்வார்கள். இறை வேதங்களை நம்புவார்கள். நியாய தீர்ப்பு இறுதி நாளை நம்புவார்கள். இவர்களே இறைவனின் நேரான வழியில் நின்று வெற்றி வெற்றவர்கள் என்று உரைக்கின்றன உத்தம குர்ஆனின் 2-3 முதல் 5 வசனங்கள். உறுதியான நம்பிக்கையே வெற்றி பெறுவதற்கான முதல் வழி என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். இவ்வசனங்களில் உள்ள அல்முப்லிஹுன் என்னும் சொல் வேதங்களையும் இறைதூதர்களையும் நம்பி நன்மை பயக்கும் நற்செயல்கள் செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்றவர்கள் என்று விளக்குகிறது திப்ரீ என்ற குர்ஆன் விரிவுரை.
     பிரகாசமான குர்ஆனைப் பின்பற்றுபவர் வெற்றி பெற்றவர்கள். நேரான பாதையில் செல்லுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதை உறுதிபடுத்தும் இறுதி மறை குர்ஆனின் 7-157 ஆவது வசனம் நல்லதை ஏவி தீயதை விட்டு விலக்கிடும் விழுமிய நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆனைப் பின்பற்றுவோரே வெற்றி பெற்றவர்கள் என்று மூசா நபிக்கு இறைவன் இயம்பியதைக் குறிப்பிடுகிறது.
     நற்குணங்கள் ஒருவரின் ஆளுமையை சீராக்கி தூய்மை செய்கிறது. இத்தகையோரும் வெற்றி பெற்றவர்களே என்பதை பாவங்களை விட்டு பரிசுத்தமானவரும் வெற்றி பெற்றவரே என்று 87- 14 ஆவது வசனம் உரைக்கிறது. அல்லாஹ்வைத் திக்கு (புகழைப் பாடுவது) செய்வது வெற்றி பெறும் மற்றொரு வழி என்று வாகாய் மொழிகிறது 62-10 ஆவது வசனம். அல்லாஹ்வின் திக்ரு மன நிம்மதியைத் தந்து உள்ளத்தைத் தூய்மைபடுத்துவதைப் பறை சாற்றுகிறது 91-9 ஆவது வசனம். தொழுகை அழைப்பு (பாங்கு) ஒலி கேட்டு தொழுது முடித்தபின் தத்தம் பணிகளைச் செய்ய பரவி செல்ல பணித்து அல்லாஹ்வை நினைவு கூற கூறி அதுவே வெற்றி பெற உற்ற வழி என்று உரைக்கிறது உத்தம குர்ஆனின் 62 -10 ஆவது வசனம். இறைவா! என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துபவன் உன்னையன்றி யாரும் இல்லை என்று இறைவனிடம் இனிய நபி (ஸல்) அவர்கள் இறைஞ்சியதை இயம்புகிறது முஸ்லிம்.
     உங்களின் நற்செயல்களில் சிறந்தது தொழுகை என்ற தோழமை நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பை அஹ்மது நூலில் காணலாம். மிக்க உள்ளச்சத்தோடு தொழுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள் என்று 23-1 மற்றும் 2 ஆவது வசனங்கள் உரைக்க 22-77 ஆவது வசனம் நீங்கள் குனிந்து சிரம் பணிந்து இறைவனை வணங்குங்கள். நன்மையை செய்யுங்கள். அதனால் நீங்கள் வெற்றி அடையலாம் என்று அறிவித்து தொழுகைகளின் நிலைகளை சரியாக பேணி தொழுபவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று உறுதிப்படுத்துகிறது. முதலாளி முன் நின்று மரியாதையுடன் கூலி வாங்கும் கூலிகாரனைப் போல் முன்னால் முழு முதல் மூலவன் அல்லாஹ் நிற்பதை உணர்ந்து உள்ளச்சத்தோடு பணிந்து தொழுபவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதைத் தப்ஸீர் காஷிபி என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது. மறுமையில் முதல் கேள்வி தொழுகையை பற்றியது. தொழுகையை சரியாக தொழுதவர்கள் வெற்றி அடைந்தவர்கள் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவித்ததை அபூதாவூத், திர்மிதீ, நஸஈ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் காணலாம்.
     வெற்றி பெற அடுத்த வழி ஜகாத்தைக் கொடுப்பதே. ஏழைகளுக்கு ஆதரவற்றோர்களுக்கு அவர்களைப் போன்றவர்களுக்குத் தான தர்மங்கள் செய்பவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்ற 59-9 ஆவது வசனம் இணை வைத்து வணங்கும் ஈவிரக்கம் அற்ற மாபாதக குறைஷிகளின் கொடுமை தாளாது மனம் உவந்து தங்களின் தேவையை விட வந்தவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியதைக் குறிப்பிட்டு அவ்வாறு வழங்குவோரே வெற்றி பெற்றவர்கள் என்று பேசுகிறது.
     அல்லாஹ்விற்காக தங்களுடைய ஊரைத் துறந்து பொருளையும் உயிரையும் தியாகம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மகத்தான பதவியைப் பெற்றவர்கள். மேலும் அவர்களே வெற்றி பெற்றவர்கள்என்ற 9-20 ஆவது வசனம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏக இறை கொள்கையை எடுத்துரைத்த துவக்க காலத்தில் அக்கொள்கையை ஏற்காத அக்கிரமக்காரர்களின் அநீதிகளுக்கு அஞ்சாது உயிரையும் பொருளையும் தியாகம் செய்து ஊரையும் துறந்து வேற்றூர்களுக்கு நாடுகளுக்கு ஹிஜ்ரத் செய்தவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று விளம்புகிறது.
     மறுமையில் தராசு தட்டை நன்மையின் பக்கம் கனக்க வைக்கும் உறவினருக்கு உதவும் வழிபோக்கர்களுக்கு வாரி வழங்கும் வள்ளன்மை. இத்தகு பண்பாளர்கள் வெற்றி பெற்றவர்கள் என்ற 30- 38 ஆவது வசனத்தில் வரும் அல்முப்லிஹுன் என்னும் சொல் மறுமையின் வெற்றியைச் சுட்டினும் இல்லை என்னாது ஈவோரின் செல்வம் இம்மையிலும் பெருகும். மறுமையில் நன்மை தீமை அளவிடப்படும் பொழுது ஈந்துவந்த இரக்கமுடைய இவர்களின் நன்மைகள் மிகுந்திருக்கும். அதனால் இவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதை 23-102 ஆவது வசனம் உறுதிபடுத்துகிறது.
     உத்தம குர்ஆன் உரைக்கும் உற்ற வழியைப் பற்றி பிடித்து சற்றும் பிறழாது சாந்தநபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த முறையில் வாழ்வோம். இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம்.
     - மு.அ. அபுல் அமீன்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai