Enable Javscript for better performance
ஈருலகிலும் நேரிய வாழ்வு!- Dinamani

சுடச்சுட

  
  v3

  இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கிய கடமை. இதனைக் குர்ஆனின் 2-185 ஆவது வசனம், "" உங்களில் எவர் ரமலான் மாதத்தை அடைவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விளக்கியதை விவரிக்கிறார் அபூஹுரைரா (ரலி) "" பிறையை பார்த்து நோன்பு நோற்றிடுங்கள். பிறையை பார்த்து நோன்பை நிறைவு படுத்துங்கள். மேக மூட்டத்தால் பிறை தென்படாமல் இருந்தால் நோன்பிற்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமை படுத்துங்கள். நோன்பை முடிப்பதற்குரிய ஷவ்வால் மாத பிறை தென்படுவதிலும் மேக மூட்டம் முட்டுக்கட்டையாக இருந்தால் நோன்பையும் முப்பது நாள்கள் நோற்று முழுமைப்படுத்துங்கள். நூல்- புகாரி. ஏழாவது மாதமான ரஜப் பிறந்ததும் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் "" எங்கள் இறைவனே! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் பரக்கத்தை (அருளை) இறக்கி வைத்து சஹருடைய புனித ரமலான் மாதத்தை நாங்கள் அடைய அருள்புரிவாயா!'' என்று இறைஞ்சினார்கள். இவ்வாண்டு, ரமலான் மாதம் 17 அல்லது 18.5.2018 -இல் பிறக்கிறது.
   வைகறை தொழுகைக்கு பாங்கு (தொழுகை அழைப்பு) ஒலிப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் சாப்பிடுவதைப் பருகுவதை நிறுத்தி உண்ணாது இருப்பதே நோன்பு. இரவின் பிற்பகுதியில் சாப்பிடுவதற்குச் சஹர் சாப்பாடு என்று சொல்வார்கள். சஹர் சாப்பாட்டின் சிறப்பைச் சீலநபி (ஸல்) அவர்கள் ஞாலமறிய செப்பியது - நமது நோன்பிற்கும் வேதம் அருளப்பட்ட மற்றவர்களின் விரதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பது என்று உரைத்ததை அறிவிப்பவர் அம்ர்பின்அல்ஆஸ் (ரலி) நூல்- முஸ்லிம். சஹரில் உணவை உண்ணுங்கள். அதில் அருள் அதிகம் உள்ளது என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை அறிவிக்கிறார் அனஸ் (ரலி) நூல்- முஸ்லிம். நோன்பு நோற்றவர் மறதியாக உண்டால், பருகினால் நோன்பை முழுமைப்படுத்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி.
   பயணத்தில் இருப்போர் விரும்பினால் நோன்பு நோற்கவும் விரும்பாவிடில் விட்டு விடவும் விழுமிய நபி (ஸல்) அவர்கள் விளம்பியதை அறிவிக்கிறார்கள் அன்னை ஆயிஷா (ரலி) நூல் }புகாரி. பயணத்திலோ நோயினாலோ விட்ட நோன்பை பயணம் முடிந்து ஊர் திரும்பியபின் நோய் நீங்கி நலம் பெற்ற பின் கணக்கிட்டு நோற்க கட்டளையிடுகிறது. குர்ஆனின் 2-185 ஆவது வசனம்.
   பகல் முடிந்து சூரியன் மறைந்து இரவு துவங்கிவிட்டால் நோன்பு திறக்க சிறப்புடைய நபி (ஸல்) அவர்கள் பொறுப்புடன் புகன்றதை உரைக்கிறார் உமர் (ரலி) நூல்- முஸ்லிம். நோன்பு திறப்பதில் அலட்சியமாக காலம் கடத்துவது கூடாது என்பதை "" நோன்பு திறப்பதை விரைவுபடுத்தும் காலம் எல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்று நீதர் நபி (ஸல்) அவர்கள் நினைவுறுத்தியதை அறிவிக்கிறார் சஹல் பின் ச அத் (ரலி) நூல்- முஸ்லிம். நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் இருக்கின்றன. நோன்பைத் திறக்கும் பொழுது ஏற்படுவது ஒரு மகிழ்ச்சி. மற்றொன்று மறுமையில் இறைவனைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி என்ற மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை மகிழ்வோடு கூறுகிறார் அபூஹுரைரா (ரலி) நூல் - முஸ்லிம்.
   நோன்பு நோற்கும் நல்லடியார்கள் நல்லதையே நாடி நல்லதையே செய்து வல்லோன் அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் பெறுவதற்காக "" ரமலான் வந்து விட்டால் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரக வாயில்கள் அடைக்கப்படுகின்றன. சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் விளக்கியதை விளம்புகிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. நோன்பு நோற்றவர்கள் மட்டும் ரய்யான் என்னும் நுழைவு வாயில் வழியே சொர்க்கம் செல்வார்கள். மற்றவர்கள் அவ்வாயில் வழியே செல்ல முடியாது என்று செம்மல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதைச் செவியுற்று தெரிவிக்கிறார் சஹ்ல்பின் சஅத் (ரலி) நூல்- முஸ்லிம். நம்பிக்கையோடு நன்மையை நோக்கி ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பைத் தெரியப்படுத்துகிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி.
   இறைமறை குர்ஆன் இயம்பும் வண்ணம் இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய முறையில் நோன்பு நோற்று நேற்றுவரை உள்ள பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஆவி துறந்த பின் மறுமையிலும் நறுமணம் வீசும் சொர்க்கத்தில் சுகம் பெறுவோம். ஈருகிலும் நேரிய வாழ்வு வாழ்வோம்.
   - மு.அ. அபுல் அமீன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai