Enable Javscript for better performance
சக்தி வழிபாட்டுச் சிறப்பிற்கு ஈந்தமுக்கல் ஜாலாம்பாள்!- Dinamani

சுடச்சுட

  

  சக்தி வழிபாட்டுச் சிறப்பிற்கு ஈந்தமுக்கல் ஜாலாம்பாள்!

  By DIN  |   Published on : 18th May 2018 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  v6

  சென்னை- தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தாம்பரம் அருகே பழைய பெருங்க(கு)ளத்தூரில் சக்தி வழிபாட்டின் பெருமையை கூறும் அருள்மிகு ஈந்தமுக்கல் ஜாலாம்பாள்அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
   வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் பழம் பெருமை வாய்ந்ததுமான பெருங்களத்தூரில் அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரர் கோயிலும்; ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன.
   ஸ்ரீ ஈந்தமுக்கல் ஜாலாம்பாள் அம்மன் கோயிலின் கருவறையில் வழிபாட்டில் உள்ள அம்மன் சிரசுப்பகுதி (தலைப்பகுதி) மட்டும் அமைந்து வழிபடப் பெறுகிறாள். ஆந்திர மாநிலத்தில் நெல்லூரிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் ஈந்தமுக்கலூர் என்ற ஊர் அமைந்துள்ளது. அயலார் படையெடுப்பின் காரணமாக அம்மனை கொண்டுவந்து இங்கே ஸ்தாபித்து கோயில் கட்டி வழிபட்டதாகத் தலச்சிறப்பு கூறப்படுகிறது. மேலும் ஜுவாலையில் (நெருப்பில்) தோன்றியதால் ஜாலாம்பாள் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
   கருவறையில் பின்னாளில் அமைக்கப்பட்ட அம்மன் இடது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் தனது கரங்களில் உடுக்கை, சூலம், கத்தி, கபாலம் தாங்கி அருள் வழங்கும் அற்புதக் கோலத்தைக் காணலாம். புன்னகைத் தவழும் முகத்துடன் விழிகளில் அருட்பார்வையுடன் காட்சி தருகிறாள். தீ சுவாலை போன்ற கிரீடம் அணிந்த நிலையில், தலைக்கு மேலே நாகம் குடை பிடிப்பதையும் காண கண் கோடி வேண்டும்.
   திருக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம், இடைநாழி, முன்மண்டபம், மகாமண்டபம் என்ற கட்டட அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. மகாமண்டபப் பகுதியில் கொடிமரம். பலிபீடம், அம்மனின் சிம்ம வாகனம் ஆகியவை அமைந்துள்ளன. இம்மண்டபம் அண்மையில் கட்டப்பட்டதாகும்.
   திருக்கோயிலின் நுழைவு வாயில் அழகிய வேலைபாட்டுடன் காட்சி தருகிறது. வாயிலின் மேற்புறம் பூர்ணகும்பம் காட்சி அளிக்கிறது. நுழைவு வாயிலை அடுத்துள்ள மகாமண்டபம் அழகிய சிற்ப வேலைபாட்டுடன் நாயக்க கால கலை அம்சத்துடன் விளங்குகிறது. மண்டபத்து தூண்களில் ராமா, அனுமன், பெருமாள் அவதாரங்கள், அம்மனை வழிபடும் காட்சி, மண்டபத்தை கட்டியவர்களின் உருவங்கள், அன்னம், கிளி போன்ற சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன.
   மண்டபத்து விதானத்தில் சக்தி வழிபாட்டின் தத்துவத்தை எடுத்துக்கூறும் நவ (ஒன்பது) கோண வடிவமும் அதன் நடுவே, கவிழ்ந்த தாமரை போன்ற சிற்ப வேலைப்பாடுகளும் வியக்க வைக்கிறது. அதனைச் சுற்றி பெண்கள் நடனமாடும் கோலத்தையும் கஜலட்சுமியின் வடிவத்தையும் காணலாம். சதுர வடிவமான சிற்பத்தில் நான்கு மூலைகளில் ராமர் வில்லை -அம்பை ஏந்தி நிற்கும் கோலத்திலும்; மற்றோரு மூலையில் அம்மனின் வடிவத்தையும்; அடுத்த மூலையில் யானையின் மீது அமர்ந்து ஓலைச் சுவடியைத் தாங்கி, விரிசடையுடன் காட்சி தரும் முனீசுவரரையும் விதான சிற்பங்களில் கண்டு மகிழ்ந்து போற்றலாம்.
   இச்சிற்பத்தில் கிளிகள் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளன. பச்சைக்கிளிகள் தூது செல்லும் தன்மை உடையது. நம் குறைகளை, வேண்டுதல்களை அம்மனிடம் எடுத்துக்கூற, இவ்வாறு கிளிகள் சிற்ப வடிவங்களாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது. "" ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே'' எனப் போற்றப்படும் நவ கோண வடிவம் சிற்பமாகக் காட்சி அளிக்கும் மண்டபத்திலிருந்து அம்மனை வழிபட, நினைத்தது நடக்கும் எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
   திருச்சுற்றில் விநாயகர் சந்நிதி, தல மரங்கள் வேம்பு- வில்வம் காணப்படுகின்றது. குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் குறையில்லாமல் பிரசவபேறு வேண்டியும் பெண்கள் சிறப்பாக வழிபடுகின்றனர். இக்கோயிலில் ஆடிமாதத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 10 நாள்கள் பிரம்மோத்சவ திருவிழாவும் நடைபெறும். திருவிழா துவங்குவதற்கு முன்னதாக கிராம தேவதையான செல்லியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்து விழாவினைத் துவக்குகின்றனர்.
   பழைய பெருங்களத்தூரில் அருளாட்சி செய்து வரும் ஸ்ரீ ஈந்தமுக்கல் ஜாலாம்பாள் அம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் நிறைவேறி 22.04.2018 -அன்று கும்பாபிஷேகம் நடைபெற்று, மண்டலாபிஷேக வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
   - கி. ஸ்ரீதரன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai