Enable Javscript for better performance
பொருநை போற்றுதும்! - 11- Dinamani

சுடச்சுட

  
  vm1

  இசைத் துறையில் தாமிரவருணித் தீரத்தின் பங்களிப்பு என்றெடுத்தால், அதுவும் ஒரு ஜீவநதிதான்!

  பூர்வீகம், பாலாற்றங்கரை விரிஞ்சிபுரம். இருப்பினும், பாட்டனாரின் காலத்திலேயே (18 -ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி), காவிரிக்கரைக்குக் குடும்பம் குடிபெயர்ந்தது. 19- ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், குடும்பத்தின் கடைக்குட்டி மகனான பாலாசுவாமி, வேங்கடேஸ்வர எட்டப்ப ராஜாவின் ஆதரவால், எட்டையபுரத்தில் குடியேறினார். பின்னர் வந்த ஆண்டுகளில், மூத்த சகோதரரான முத்துசுவாமியும் எட்டையபுரத்தை அடைந்தார். 

  1820-30 களில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீக்ஷிதரும் இவருடைய இளைய சகோதரர் பாலாசுவாமி தீக்ஷிதரும் எட்டையபுர ஆஸ்தானப் புலவர்களாகவும் வித்வான்களாகவும் திகழ்ந்தனர். 1835, அக்டோபர் 21-ஆம் நாள், எட்டையபுரத்திலேயே முத்துசுவாமி தீக்ஷிதர் சமாதியடைந்தார். தீக்ஷித சகோதரர்களால் உருவான சிஷ்ய பரம்பரை, பொருநையின் இசைப் பங்களிப்புக்கு மெருகு சேர்த்தது. 

  தென்னிந்திய இசை தேவதை, பாலாசுவாமி தீக்ஷிதர் வழியாக வயலின் என்னும்  ஆபரணத்தைப் பெற்றாள் என்பது உலகறிந்த தகவல். பாலாசுவாமி தீக்ஷிதரின் மகள் அன்னபூரணியின் மகன் சுப்பராம தீக்ஷிதர்(1839-1906), தொடக்கத்தில் தாயிடமிருந்து இசை, சமஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றைக் கற்ற இவர், பின்னர், விளாத்திகுளம் கிருஷ்ண அமாத்தியரிடம் நாடகம், காவியம், அலங்காரம், வியாகரணம், சந்தஸ் போன்ற நுட்பங்களைப் பயின்றார். எட்டையபுர சமஸ்தான வித்வானாக விளங்கிய பாலாசுவாமி தீக்ஷிதர், ஐந்து வயது சுப்பராமரைத் திருவாரூரிலிருந்து எட்டையபுரத்திற்கு அழைத்துச் சென்று,  தம்முடைய மகனாகச் சுவீகரித்துக் கொண்டார். பின்னாட்களில், சுப்பராம தீக்ஷிதரும் எட்டையபுர சமஸ்தான வித்வான் ஆனார். பல்வேறு கிருதிகள், வர்ணங்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். 1899-இல், தம்முடைய 60 -ஆவது வயதில், ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்ஷினி என்னும் மாபெரும் இசை நூலை இயற்றத் தொடங்கி, 1904-இல் அதனை நிறைவு செய்தார். முத்துசுவாமி தீக்ஷிதர் இயற்றிய கீர்த்தனைகள் பற்றிய விவரமான பதிவாகவும், கர்நாடக இசை நுட்பங்கள் குறித்த கலைக்களஞ்சியமாகவும், சாரங்கதேவர் தொடங்கி பல்வேறு இசைக் கலைஞர்கள் மற்றும் வாக்கேயக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சேகரமாகவும் இந்நூல் திகழ்கிறது. ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்ஷினி ஒரு மிகப் பெரிய அணை என்றும், பல நூற்றாண்டுகால இசை வித்தகமும் நுணுக்கங்களும் இந்த அணையினால் சேகரம் செய்யப்பட்டுள்ளன என்றும் இப்போதைய-சமகால இசைக் கலைஞர்களும் இசைநூல் அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் இன்னோரன்ன பிறரும் இந்தச் சேகரத்தின் மதகுகளைச் சற்றே திறந்து தங்களின் அறிவு ஓடைகளைப் பெறுகின்றனர் என்றும் இசை அறிஞர் டாக்டர் வி.ராகவன் அவர்கள் குறிப்பிடுவது வழக்கம். செளக வர்ணங்கள் மற்றும் தான வர்ணங்கள் பலவற்றை  சுப்பராம தீக்ஷிதர் இயற்றினார்.  எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களால் பிரபலமாக்கப்பட்ட சங்கராசார்யம் ஸ்மராம்யஹம் என்னும் சங்கராபரணக் கீர்த்தனை இவருடையதுதான்! ஒருமுறை, இந்தக் கீர்த்தனையின் உட்பொருள் குறித்து, மூன்று மணிநேரத்திற்கும் மேலாக விளக்கம் கொடுத்தாராம் காஞ்சி மஹாசுவாமிகள்!!

  பிரதம அப்பியாச புஸ்தகம் (கர்நாடக இசையின் ஆரம்பப் பாடங்களைப் பற்றியது), ஸம்ஸ்க்ருதாந்தர திராவிட கீர்த்தனை போன்ற வேறு சில நூல்களையும் சுப்பராம தீக்ஷிதர் எழுதினார். இவரின் திருக்குமாரர் அம்பி 
  தீக்ஷிதர்(1863-1936), பலகாலம் எட்டையபுர ஆஸ்தான வித்வானாக விளங்கியவர், தம்முடைய வாழ்வின் பிற்பகுதியைச் சென்னையில் கழித்தார். இவரைச் சுற்றி இசைக் கலைஞர்களும் பண்டிதர்களும் எப்போதும் இருப்பர். திருமதி டி.கே.பட்டம்மாள் அவர்களையும்  எஸ்.ராஜம் அவர்களையும் (முத்துசுவாமி) தீக்ஷிதர் கிருதிகளை மிகுதியும் பாடிப் பிரபலப்படுத்தச் செய்தவர் இவரே.  பத்தமடை படைத்த பாரத சங்கீதம் முத்துசுவாமி தீக்ஷிதர் எட்டையபுரத்திற்குச் செல்வதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவர், எட்டையபுர திவானாகத் திகழ்ந்த விஸ்வநாத ஐயர். விஸ்வநாத ஐயரின் கொள்ளுப் பேரனான பத்தமடை கிருஷ்ணன்(1921-2001),  பார் போற்றும் இசை வித்தகராக விளங்கினார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடமும் கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதரிடமும் இசை பயின்ற இவர், ஹிந்துஸ்தானி இசையிலும் வல்லவர். ராகம் தானம் பாடுவதில் கைதேர்ந்தவராக இருந்து, அபூர்வ ராகங்கள் பலவற்றில் ராகம் தாளம் பாடினார். தரமிக்க வாக்கேயக்காரராகவும் திகழ்ந்த இவர், சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் கீர்த்தனைகளும் தில்லானாக்களும் இயற்றினார். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை ஆகிய இரண்டையும் இணைத்து, "பாரத சங்கீதம்' என்னும் பாணியை உருவாக்கினார். 150 -க்கும் மேற்பட்ட பாரதியார் பாடல்களுக்கு இசையமைத்துப் பலரும் அவற்றைப் பாடும்படிச் செய்தார். ஸங்கீதாரண்ய கோகிலம், பாரதி இசைக் காவலர் போன்ற பட்டங்களைப் பெற்ற இவரின் சிஷ்யர்களில் வயலின் மேதை எம்.எஸ். கோபாலகிருஷ்ணனும் சூலமங்கலம் சகோதரிகளும் அடங்குவர். 

  களக்காடு கண்ட கான பாரம்பரியம்

  பொருநைக் கரை இசைக் குடும்பங்களில், களக்காடு வம்சாவளிக்குத் தனியிடம் உண்டு. "ராமன் அழைக்கிறான், போய் வருகிறேன், சஞ்சலம் விடுவீரே' என்னும் பக்த ராமதாஸ் திரைப்படப் பாடல், 1940-50 -களில் வெகு பிரபலம். இப்பாடலைப் பாடி நடித்தவர் களக்காடு ராம நாராயண ஐயர் (1910-1992). தம்முடைய 14 -ஆவது வயதில், வ.வே.சு.ஐயரின் சேரன்மாதேவி குருகுலத்தில் அரங்கேற்றம் நிகழ்த்தித் தம்முடைய இசைப் பயணத்தைத் தொடங்கிய ராமநாராயண ஐயர், சென்னையில், 1930-களில், டைகர் வரதாச்சாரி கலந்துகொள்ளமுடியாத கச்சேரி ஒன்றினைத் தாம் நிகழ்த்திப் பிரபலம் ஆனார். 1946-இல், சென்னைக்கு வருகை புரிந்த அண்ணல் காந்தியடிகளைத் தம்முடைய இசையால் நெகிழச் செய்தார். கோடீஸ்வர ஐயர், பாபநாசம் சிவன் ஆகியோரோடு நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்த இவர், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை, ராக தாளங்களோடு கூடிய கீர்த்தனைகளாக, "ஸ்ரீ லலித கீத நாராயணம்' என்னும் பெயரில் அமைத்தார். இதற்காக, காஞ்சி மஹாசுவாமிகளின் நிறைந்த ஆசியையும் பெற்றார். அபிராமி அந்தாதி, சியாமளா தண்டகம், செளந்தர்ய லஹரி ஆகியவற்றையும் வெவ்வேறு ராகங்களில் அமைத்துப் பாடினார். 

  களக்காடு ராம நாராயண ஐயர் மட்டுமல்லாமல், இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் பலரும் இசை வித்தகர்களே ஆவர். ராமநாராயண ஐயரின் தந்தையார் களக்காடு சுப்பையா பாகவதர் (1881-1955), நெல்லைச் சீமையின் பல்வேறு பகுதிகளில் முத்துசுவாமி தீக்ஷிதரின் கிருதிகளைப் பாடிப் பரப்பிய பெருமைக்குரியவர். அங்க சேஷ்டிதங்களின்றிப் பாடுவதில் சுப்பையா பாகவதர் சமர்த்தர். இவருடைய ஆற்றலை மெய்ப்பிப்பதற்காக, இவர் தலையில் எலுமிச்சம் பழம் ஒன்றை வைத்துவிட்டுப் பாடச் சொன்னாராம் திருவிதாங்கூர் அரசர் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா. கச்சேரி முழுமையும் பழம் அப்படியே உட்கார்ந்திருந்ததாம். மகாராஜா, இதற்காகவே சிறப்புப் பரிசுகள் தந்தாராம்.  களக்காடு சுப்பையா பாகவதரின் பிரதம சிஷ்யர்களில் ஒருவர், பிரபல நாகஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம். களக்காடு ஸ்ரீநிவாசன், களக்காடு தியாகராஜன், களக்காடு சீதாலட்சுமி என்று இந்த வம்சாவளி, இசை மேன்மைக்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறது. 

  - தொடரும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai