ஆரூரே மூலம்! அஜபாவே யோகம்!

உலகெங்கும் நிறைந்திருக்கும் இறை பரம்பொருள், பூவுலகில் சுயம்புவாக, புற்றுவடிவில் கோயில் கொண்ட முதல் தலமாக, மூலாதார தலமாக, திருமூலட்டானமாகக் குறிப்பிடப்படும் திருத்தலம் திருஆரூர் எனப்படும்

உலகெங்கும் நிறைந்திருக்கும் இறை பரம்பொருள், பூவுலகில் சுயம்புவாக, புற்றுவடிவில் கோயில் கொண்ட முதல் தலமாக, மூலாதார தலமாக, திருமூலட்டானமாகக் குறிப்பிடப்படும் திருத்தலம் திருஆரூர் எனப்படும் திருவாரூர்.
 திருவாரூர் குறித்து "இசை திருவாரூர்' என்கிற ஆராய்ச்சி நூலை எழுதிய பி.பஞ்சாபகேசன் நூலைப்பற்றி கூறுகிறார்:
 ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ?
 எனத் தொடங்கும் பதிகத்தில்,
 ஓர் உருவே மூன்றுருவாக ஆன நாளோ?
 காலனை வதைத்த நாளோ?
 காமனை எரித்த நாளோ?
 மண்ணுலகையும், விண்ணுலகையும் படைத்த நாளோ?
 மான்மறி எந்தி, திருமகளை ஓர் பாகம் கொண்டதற்கு
 முன்னோ? பின்னோ?
 திருஆரூர் கோயிலாகக் கொண்ட நாளே!
 - என திருநாவுக்கரசர் வியந்து பாடியிருப்பதே இத்தலத்தின் தொன்மைக்குச் சான்று.
 பக்தனின் வேண்டுகோளுக்காக, அறநெறி தவறியவர்களைத் தண்டிப்பதற்காக, மக்களின் அன்புக்காக இறைவன் ஓர் இடத்தில் கோயில் கொண்டதாகவும், இறைவன் எழுந்தருளிய இடத்தை அலங்கரிக்க மன்னர்கள், மக்கள் நகர்களை நிர்மாணித்ததாகவும் பல புராணங்கள் உண்டு. ஆனால், இறைவன் தானே விரும்பி, தனக்காக ஒரு நகரை நிர்மாணித்து கோயில் கொண்டார் என்றால் அது திருவாரூர் திருத்தலம் மட்டுமாகவே இருக்கும்.
 திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவால் ஆத்மார்த்த மூர்த்தியாக வழிபடப்பட்டு, திருவாரூரில் அருளும் ஸ்ரீ தியாகராஜப் பெருமான், விஸ்வகர்மாவைக் கொண்டு 8 கி.மீ. அகலமும், 16 கி.மீ. நீளமும் கொண்டதாக திருவாரூர் திருத்தலத்தை நிர்மாணித்து, கோயில், குளம், யாகசாலை அமையும் இடங்கள் என அனைத்தையும் தானே நிர்மாணித்தார் என்பது அவரது இரண்டாவது லீலையான நகர் நிர்மாண லீலையாகக் குறிப்பிடப்பட்டிருப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பு!
 ஒரு திருத்தலத்தில் இறைவன் ஓரிரு லீலைகளை நிகழ்த்தியிருப்பதாகக் குறிப்பிடப்படும் நிலையில், ஸ்ரீ தியாகராஜப் பெருமான் 400 லீலைகளை நிகழ்த்திய ஒரே தலம் திருவாரூர் மட்டுமே ஆகும்.
 நான்கு யுகங்களைக் கடந்தது, மூன்று சகஸ்ரநாமாவளிகளைக் கொண்டது, அதிக தேவாரப் பதிகங்களைக் கொண்டது, பஞ்ச பிரம்மத்தலம், சர்வதோஷ நிவர்த்தித் தலம், நந்தியம்பெருமான் நின்ற கோலத்தில் அருளும் தலம், கிரஹண காலத்தில் அபிஷேகம் நடைபெறும் ஒரே தலம், நித்ய பிரதோஷ தலம், 7 இயந்திரங்களின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டு கடன் நிவர்த்தி அருளும் ருணவிமோசனர் காட்சி தரும் தலம், ஆகமத்துக்கு முந்தைய தலம் என ஆயிரமாயிரம் அதிசயங்களும், அளவிட முடியாத ரகசியங்களும் நிறைந்த ஆரூர் திருத்தலமே இசைக்கும், யோகத்துக்கும் மூலாதாரம் என்பது அறிதலுக்கு அரிய சிறப்பு.
 இசையும் திருவாரூரும்: தியாகராஜப் பெருமான் பூவுலகிற்கு எழுந்தருளியபோதே 18 விதமான இசைக் கருவிகளும் பூலோகம் வந்தன என தியாகராஜப் பெருமானின் லீலைகளில் குறிப்பிடப்பட்டிருப்பது, 4 யுகங்களுக்கு முன்பே இசை பரவியிருந்த திருத்தலம் திருவாரூர் என்பதற்குச் சான்று.
 தியாகராஜப் பெருமானுடன் பூவுலகுக்கு வந்த வாத்யங்களில், நாகசுரம், சுத்த மத்தளம், பஞ்சமுக வாத்யம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. இதில், பஞ்சமுக வாத்யம் சிவபெருமான் திருநடனம் புரிய திருமால் வாசித்த தாள வாத்யமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வாத்யத்தில் உள்ள பஞ்ச முகங்கள், ஸத்யோஜாதம், தத்புருஷம், வாமனம், ஈசானம், அகோரம் ஆகிய சிவபெருமானின் 5 முகங்களை, குணங்களைச் சுட்டுவதாகக் குறிப்பிடப்படுகிறது. பஞ்சமுக வாத்யத்திலிருந்து எழும் ஒலி ரி, க, ம, த, நி என்ற 5 சுவரங்களுடன் ஒத்ததாக இருப்பது தனிச் சிறப்பு.
 பஞ்சமுக வாத்யத்தின் ஒவ்வொரு முகத்திலிருந்தும் 7 தாளங்கள் வீதம் 35 தாளங்கள் உருவாகியதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில், சத்யோஜாதத்திலிருந்து நாக பந்தனம், பவணம், ஏகம், ஏக சரம், திவிசரம், சஞ்சாரம், விசேயம் ஆகிய தாளங்களும், வாமதேவத்திலிருந்து ஸ்வஸ்திகம், சலஹேரஹலம், புல்ல விஷேபம், சஞ்சாரவிலகி, குண்டலி விஷேபம், பூர்வம், கண்டநாக பந்தம் ஆகிய தாளங்களும் உருவாகியுள்ளன.
 அகோரத்திலிருந்து அலக்னம், உத்சாரம், விச்ராமம், விஷமாலி, ஸ்புரணகம், சரிஸ்புரி, ஸ்புரிதம் ஆகிய தாளங்களும், ஈசானத்திலிருந்து சமஸ்கலிதம், விகடம், சத்ருசம், கலி, அடகலி, அனுத்புல்லம், குத்தம் ஆகிய தாளங்களும், தத்புருஷத்திலிருந்து சுத்தம், ஸ்வரஸ்புரணம், உத்தளி, அஞ்சலிபுலிதம், அர்த்தகடம், தகராக்யம், மாணிக்கவல்லி ஆகிய தாளங்களும் உருவாகியுள்ளன.
 இறைவனுடன் இசை தோன்றிய ஆரூரின் இறை வழிபாட்டில் இசைக்கென தனியிடம் என்றென்றும் உண்டு. தினமும் மாலை வேளையில் தியாகராஜப் பெருமானுக்கு பணி எனும் மாலை (பாம்பு) சாற்றப்படும் போது பஞ்சமுக வாத்யத்தில் வாசிக்கப்பட வேண்டிய தாளம் நாகபந்தனம். நாகசுரத்தில் வாசிக்க வேண்டிய ராகம் சங்கராபரணம். இதே போல, திருவாரூர் ஆழித்தேர் புறப்பாட்டுக்கும், வீதியுலாவின் போது ஒவ்வொரு வீதியிலும் வாசிக்கப்பட வேண்டிய ராகங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் தன் குலமரபுப்படி திருவாரூர் கோயில் முன்பாக நின்று யாழ் மீட்டி இசை பாடியபோது, அவரது இசைக்கு மயங்கிய தியாகராஜப் பெருமான், யாழ்ப்பாணருக்கு தரிசனம் அளிப்பதற்காக கோயிலின் வடபுறத்தில் ஒரு வாயிலை ஏற்படுத்தி, சன்னிதானத்திலிருந்து வடக்கு வாசல் அருகே (ஒட்டு தியாகர்) எழுந்தருளினார் என்ற ஐதீகம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் பக்தியை மெச்சவும், இசையின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும் தியாகராஜர் நிகழ்த்திய லீலைகளில் ஒன்று.
 மச்ச புராணக் குறிப்புகள்படி, புராண காலங்களில் இசைக் கருவிகள் 18 பிரிவுகளாக இருந்ததாகவும், அவை 4 விதமாக நரம்பு வாத்யங்கள், துளையுள்ள வாத்யங்கள், தோல் வாத்யங்கள், உலோக வாத்யங்கள் எனவும் பிரிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த 18 வகையான வாத்யங்களும் முதன்முதலில் பூலோகம் வந்த இடம், திருவாரூர் என தியாகராஜப் பெருமான் லீலையில் குறிப்பிடப்பட்டிருப்பது, இறை உறை இடத்துக்கு மட்டுமல்ல, இசைக்கும் மூலாதார தலம் திருவாரூரே.
 (அடுத்த இதழில்)
 - எம். சங்கர்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com