காளமேகக் கவிபாடல் வலஞ்சுழி விநாயகர்!

தஞ்சைமாவட்டம்- கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுவாமி மலைக்கு அண்மையில் திருவலஞ்சுழி எனும் திருத்தலம் உள்ளது.
காளமேகக் கவிபாடல் வலஞ்சுழி விநாயகர்!

தஞ்சைமாவட்டம்- கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுவாமி மலைக்கு அண்மையில் திருவலஞ்சுழி எனும் திருத்தலம் உள்ளது. காவிரி வலமாகச் சுழித்து ஓடியதால் இத்தலத்திற்கு வலஞ்சுழி என்று பெயர். இங்கே கோயில் கொண்டுள்ள திருவலஞ்சுழிநாதர் தேவாரப்பாடல்களால் போற்றப் பெற்றவர். இத்திருக்கோயிலில் அருள்பாலிப்பவரே "சுவேதவிநாயகர்' எனும் "வெள்ளைப்பிள்ளையார்' ஆவார்.
இத்தலத்திற்கு திருவலஞ்சுழி என்று பெயர் ஏற்பட பிரம்மாண்ட புராணம்-பாபநாசத் தல மான்மியத்தில் புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. ஒருசமயம், இத்திருத்தலத்தில் காவிரி தென்புறம் திரும்பி வலமாகச்சுழல அச்சுழற்சியால் பெரும்பள்ளம் ஏற்பட்டு அதன்வழியாக, கீழைத்திசையில் ஆறு ஓடாமல் தடைப்பட்டு பாதாளம் சென்றுவிடுகிறது. காவிரி வலமாகச்சுழித்த இடம் திருவலஞ்சுழி என அழைக்கப்படுகின்றது. தண்ணீருக்கு வழியின்றி பயிர்வளம் குன்றியது. ஜீவராசிகள் அழிந்தன.
இச்செய்தி பாபநாசத்தில் அரசாட்சிபுரியும் பிரதாபவீரனிடம் தெரிவிக்கப்பட்டது. பிரதாப வீரன் தன்னுடைய படையோடு திருவலஞ்சுழிக்கு வந்து அங்கே அருள்பாலித்துவரும் சிவபெருமானையும் சுவேத (வெள்ளை) விநாயகரையும் வணங்கி, வலஞ்சுழியில் ஏற்பட்ட பெரும்பள்ளத்தினை மூட முயற்சித்தான். மூன்றுஆண்டுகள் கடந்தும் அதனை மூடமுடியாது வருந்தினான். முடிவில் அவ்வூரில் சற்றுத் தொலைவில் வசித்துவரும் ஏரண்ட முனிவரைச் சரண் புகுந்தான். ஏரண்டம் என்றால் ஆமணக்கு என்று பொருள். அந்த முனிவர் வசித்து வந்த பகுதி (ஆமணக்கு) "கொட்டையூர்' எனப் பெயர்பெற்றது.
ஏரண்டமுனிவரும் அதற்கு ஒரு வழி கூறினார். "காவிரியில் ஏற்பட்ட சுழற் பள்ளத்தை அடைக்க எனக்கு அல்லது உனக்கு நிகரான ஒருவர் அதில் இறங்க வேண்டும். அப்போதுதான் அந்த பள்ளம் அடைபடும்' என்றார் முனிவர். உலக நன்மையின்பொருட்டு நானே அதில் வீழ்கின்றேன்' என்று கூறி சிவபஞ்சாக்ஷரம் ஜபித்தவாறே சுழற்பள்ளத்தில் குதித்து காவிரியினை மேலெழப் பாய்ந்து கீழைத் திசையில் ஓடச்செய்தார்.
அதனால் மன்னன் பிரதாபவீரனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திலிருந்து விடுபடுவதற்காக கொட்டையூருக்கு தென்மேற்கிலமைந்த பாபநாசத் தலத்தின் மேற்கில் 108 சிவாலயத்தை நிறுவி பிரம்மஹத்திதோஷம் நீங்கப்பெற்றான்.
இத்திருத்தல விநாயகரை கடல் நுரையினாலான சுயம்புமூர்த்தி என்றும் கூறுவர்.
இந்திரனால் இவ்வூரில் நிறுவப்பட்ட பெருமைமிகு பிள்ளையாரை காளமேகக் கவிராயர் தன் பாடலால் "பிறவாத ஆம்பல்' என வலஞ்சுழி மேவிய விநாயகர் மீது கவி பாடினார். "பறக்காத வண்டு, தீக்கனலில் கருகாத கரி, பன்முறை பண்ணிற்காக பயன்படுத்தப்பட்ட போதிலும் ஒன்றோடொன்று ஒட்டிவிடாத வீணையின் தந்தி, நெருப்பிலும் உருக்குலையாத பெருந்தங்கம், முழுதும் வெண்மையாய் விளங்கும் மண்டலத்தில் ஒரு சிந்தூரப்பொட்டு, பூசுதற்கு பயன்படாத சாந்து, பெருஞ் சுனையில் முளைக்காத ஆம்பல்' என்று அமைகின்றது கவி காளமேகப்புலவரின் சொற்றொடர்கள்.
- முனைவர் ஆ. வீரராகவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com