துறப்பதில் துவங்கிய ஆண்டு!

ஹிஜ்ரத் என்னும் அரபி சொல்லுக்குத் துறப்பது என்றுபொருள். பொருளை மனைவியை மக்களை வீட்டை நாட்டைத் துறப்பது ஹிஜ்ரத்
துறப்பதில் துவங்கிய ஆண்டு!

ஹிஜ்ரத் என்னும் அரபி சொல்லுக்குத் துறப்பது என்றுபொருள். பொருளை மனைவியை மக்களை வீட்டை நாட்டைத் துறப்பது ஹிஜ்ரத். முதல் மனிதன் ஆதிநபி ஆதம் அவர்களிடம் இருந்தே முதல் ஹிஜ்ரத் துவங்கியது. ஆதம் நபியும் அவர்களின் மனைவி அன்னை ஹவ்வா அவர்களும் பிரிக்கப்பட்டு வானிலிருந்து பூமிக்கு இறக்கப்பட்டதே முதல் ஹிஜ்ரத். அந்த ஹிஜ்ரத் தின்ன தடுக்கப்பட்ட பழத்தைத் தின்றதால் இறைவன் தந்த தண்டனை ஆயினும் வான மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலமாகிய பூமிக்கு வந்தது ஹிஜ்ரத்.
 இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், பல நபிமார்கள் ஏக இறை கொள்கையை ஏற்க மறுத்து தீர்க்கமாக மூர்க்கமாக நபிமார்களுக்கும் அவர்களின் கொள்கையை ஏற்றவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளையும் துன்பங்களையும் இழைத்தபொழுது இறைவன் கட்டளையை ஏற்று வாழ்ந்த நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்றதும் ஹிஜ்ரத்.
 இறைவனின் கட்டளையை விட்டெறிந்து இணை வைத்து வணங்கும் நம்ரூதின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து உறவினரை உதறிவிட்டு அல்லாஹ்வின் ஆணையை ஏற்று தாய் நாடாம் ஈராக்கை விட்டு எகிப்து ஷாம் நாடுகளின் வழியே பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள் இப்ராஹீம் நபி. கூபாவுக்குப் பக்கத்தில் உள்ள கவ்தி என்ற ஊரிலிருந்து ஹான் என்ற ஊருக்குச் சென்றார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவி சாராவும் லூத் நபியும் சென்றதை இன்னும் அவரையும் லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத் செய்திருக்கும் ஒரு பூமியில் (பாலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தஸ்) ஈடேற்றம் பெற செய்தோம் என்று எழில்மறை குர்ஆனின் 21-71 ஆவது வசனம் குறிப்பிடுகிறது. இவ்வசனத்தில் வரும் அவரையும் என்பது இப்ராஹீம் நபியைக் குறிக்கிறது.
 சாலிஹ் நபி அவர்களின் நான்காயிரம் விசுவாசிகளுடன் ஹிஜ்ரு என்ற நகரிலிருந்து ஹிஜாஸýக்கு தென்கிழக்கில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹலரமவ்த் என்ற இடத்திற்கு ஏக இறை கொள்கையை எடுத்துரைக்க ஹிஜ்ரத் செய்தார்கள்.
 இப்படி பயண வரலாறுகள் பல உண்டு. ஆனால் வரலாறு படைத்த பயணம் நயமுடைய நந்நபி (ஸல்) அவர்கள் ஏக இறை கொள்கையை ஏற்காத குறைஷிகளின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி தொல்லைபட்ட ஏக இறை கொள்கையை ஏற்றவர்களைக் காப்பாற்ற மக்காவைத் துறந்து மதீனா சென்று ஏற்ற கொள்கையில் மாற்றம் இன்றி வெற்றியுற்று நல்லாட்சி நடத்தி ஏழு ஆண்டுகளுக்குப்பின் மக்காவை வென்று மாபாதக குறைஷிகளை மன்னித்து மக்களாட்சி அமைத்ததே.
 இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் இந்த வரலாற்று சிறப்புடைய ஹிஜ்ரத்தைக் குறிப்பிடும் ஹிஜ்ரி ஆண்டைத் துவக்கினார்கள். இரவையும் பகலையும் இரு சான்றுகளாக ஆக்கி இரவாகிய சான்றை இருளாக்கி பகலாகிய சான்றைப் பார்க்கும்படி ஆக்கினோம். ஆண்டுகளின் கணக்கையும் எண்ணிக்கையையும் நீங்கள் அறிவதற்காக என்று 17-12 ஆம் வசனம் கூறுகிறது. 10-5 ஆவது வசனமும் இதை உறுதிப்படுத்துகிறது. 9-36 ஆவது வசனம் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்து அல்லாஹ்வின் விதிப்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று பகர்கிறது. பன்னிரண்டு மாதங்களின் மொத்த நாள்கள் 355. இது சந்திர கணக்கு. சூரிய கணக்கில் பன்னிரண்டு மாதங்களின் மொத்த நாள்கள் 365 1/4. சுப்ஹை (வைகறையை) வெளிப்படுத்துபவன் இரவை ஓய்வானதாகவும் சந்திரனையும் சூரியனையும் கணக்காக ஆக்கினான். இது மிக்க அறிந்தவனின் தக்க ஏற்பாடு என்று உரைக்கிறகு 6-96 ஆவது வசனம்.
 ஹிஜ்ரி ஆண்டு துவங்குவதற்கு முன்னரே அரேபியாவில் பன்னிரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்தன. அவற்றில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தைப் புனித மாதமாக கருதிய அரேபியர்கள் இம்மாதத்தில் போர்புரிய மாட்டார்கள். இதே முஹர்ரம் மாதம்தான் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகவும் விளங்குகிறது.
 ஹிஜ்ரி 1440 ஆம் ஆண்டு, 12.09.2018 -இல் பிறக்கிறது. இஸ்லாமிய புத்தாண்டில் இந்தியாவில் ஒருமைப்பாடு ஓங்கி ஒளிர நல்லிணக்கத்தைப் பேணி நாடு உயர உழைக்க உறுதி பூணுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com