ஆடிப்பூரத்தில் அருள்புரியும் அன்னை அபிராமி!

சென்னையின் திருக்கடவூர் என்றே அறியப்படுகிறது சேலையூர் அன்னை அபிராமியின் திருக்கோயில்.
ஆடிப்பூரத்தில் அருள்புரியும் அன்னை அபிராமி!

சென்னையின் திருக்கடவூர் என்றே அறியப்படுகிறது சேலையூர் அன்னை அபிராமியின் திருக்கோயில். இத்திருக்கோயில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சேலையூர் கேம்ப் ரோடு, ஈஸ்வரன் தெருவில் அமைந்துள்ளது. மிகவும் புராதனமான இத் திருக்கோயில் முன்பு மணல் மேடாக இருந்தது. 1970-இல் காஞ்சி மகா பெரியவர் சென்னை விஜயம் செய்தபோது, இங்கு கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்க, மண்மேட்டை அகற்றும்போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகிலுள்ள முத்தாலம்மன் கோயில் அருகிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் "சிலையூர்' என வழங்கப்பட்டு வந்த இந்த ஊர் நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது.
 பழங்காலத் தமிழ் மன்னர்களான பல்லவர் காலத்தில், திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலைப் போலவே பெரிய அளவில் கட்டப்பட்ட இந்தக் கோயில், பல்வேறு காரணங்களினால் கவனிப்பாரின்றி மண்மேடாக மாறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தல விருட்சமாக அரச மரமும் தல தீர்த்தமாக அமிர்த புஷ்கரணியும் விளங்குகிறது.
 1972-ஆம் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் சந்நிதியும், அமிர்தகடேஸ்வரர் சந்நிதியும் புதுப்பிக்கப்பட்டது. 1975 - இல் உஜ்ஜயினி ஓம்காளி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீராமநாதஸ்வாமிகளால் விநாயகர், முருகன், ஸ்வாமி, அம்பாள் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காஞ்சி மஹாப்பெரியவர் நல்லாசியுடன் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1994 - முதல் பிரதோஷ பூஜை நடைபெற்று வருகிறது. அவ்வாண்டிலேயே கோயில் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1996-இல் பதினாறு கால் மண்டபம் கட்டப்பட்டது. 1998-99 -இல் நடராஜர் சிலை அமைக்கப்பட்டு வருடத்தில் ஆறுமுறை அவருக்கு அபிஷேகம் நடக்கிறது. வருடந்தோறும் பங்குனி உத்திரத்தன்று அபிராமி அமிர்தகடேஸ்வரரின் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது.
 ராஜ கோபுரம் 2009-இல் கட்டப்பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்பிறகு சுற்றுப்புற மதில் சுவர் எழுப்பப்பட்டது. திருக்கடையூர் போல் இங்கும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் முதலியவைகள் நடைபெறுகின்றன. இதற்காக தனியாக ஒரு மண்டபம் திருக்கோயில் வளாகத்திலேயே கட்டப்பட்டுள்ளது.
 அமிர்த புஷ்கரிணியை (திருக்குளம்) 2004- இல் அமைக்கப்பெற்றது. திருக்குளத்தைச் சுற்றிவர நடைபாதை அமைத்து, சுற்றுச்சுவர்களில் வடக்கே கங்கை முதல் தெற்கே காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த சிலைகளிலிருந்து நீர் கொட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வருடந்தோறும் மாசி மகத்தன்று இந்த நதிகளுக்கு விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 மேற்கு பார்த்த திருக்கோயில்! இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு விநாயகர் அருள்பாலிக்கிறார். அவருக்கருகில் சமயக் குரவர் நால்வரும் இடம் பெற்றுள்ளனர். அடுத்து கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் லிங்க ரூபமாக வீற்றிருக்க எதிரில் நந்திகேஸ்வரர் காட்சி தருகிறார். அடுத்த சந்நிதியில் சர்வாலங்கார பூஷிதையாக அபிராமி அன்னை வடக்கு நோக்கி காட்சி தர, அம்பிகை எதிரிலும் நந்திகேஸ்வரரே அமைந்துள்ளார். முக்கண்ணியான அம்பிகையின் மூன்றாவது கண்ணை பாலாபிúக்ஷகத்தின் போது ஆனந்தமாகத் தரிசிக்கலாம். சிவன் சந்நிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் வள்ளி, தேவயானியுடன் சுப்ரமண்யர், அலர்மேலு மங்கை தாயாருடன் வெங்கடாஜலபதி, கருடன், நவகிரகங்கள், காலபைரவர், சந்திரன், சூரியன், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோர் தனிச் சந்நிதி கொண்டுள்ளனர். தல மரமான அரச மரத்தடியில் நாகர்கள் இடம் பெற்றுள்ளனர்.
 இத்திருக்கோயிலில் பல்வேறு உற்சவங்கள் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அதில் ஆடிப்பூர உற்சவமும் ஒன்று. ஆடியில் பூரத்தன்று அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் செய்து, பல்வேறு மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து, அம்பிகை மட்டுமின்றி, அவளுடைய கர்ப்பகிரகம் முழுவதும் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். அன்று சந்தான பிராப்திக்காக மடிகட்டும் பிரார்த்தனை இவ்வாலயத்தில் விசேஷமாக நடைபெறுகிறது. இவ்வாண்டு, இவ்வுற்சவம், ஆகஸ்டு மாதம் 3 -ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் திருநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 இத்திருக்கோயிலில் சித்திரை மாதம் பெளர்ணமியன்று திருவிளக்கு பூஜை, வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு பால்குட அபிஷேகம், பிரகாரத்தில் திருத்தேர் உலா, ஆனியில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம், தேர் உலா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி விழா குறிப்பிடத்தக்கவை. புரட்டாசி நவராத்திரியில் அம்பிகைக்கு விசேஷ அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறும்.
 ஐப்பசியில் கந்த ஷஷ்டி, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகையில் ஒவ்வொரு சோமவாரமும் விசேஷமே!கடைசி சோமவாரத்தன்று சங்காபிஷேகம் நடைபெறும். மார்கழியில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஐபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் உண்டு. தை அமாவாசை அம்பிகைக்கு உகந்தது. அன்று மாலை அபிராமி அந்தாதி வைபவம் நடைபெறும். இந்நிகழ்ச்சி திருக்கடையூர் தலத்தில் சிறப்பாக நடைபெறுவது போலவே இத்தலத்திலும் நடைபெறும்.
 தை அமாவாசையன்று அம்பிகையின் சந்நிதி புஷ்ப பந்தலாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்படும். அன்று மாலை 5 மணி அளவில் அபிராமி அந்தாதி பாட துவங்குவர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். 79 -ஆவது பாடலான "விழிக்கே அருளுண்டு' என்ற பாடல் பாடப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறும். அப்பாடல் முடிந்ததும் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு, அம்பிகைக்கு பெரிய தீபாராதனை காண்பிக்கப்படும். இதைக் காணும் பக்தர்கள் தாங்களும் அபிராமி பட்டருடன் இருப்பதாகக் கருதி பக்தி வெள்ளத்தில் மூழ்குவர். அபிராமி அந்தாதி பாராயண நிறைவில் அம்மனுக்கு 9 வகையான பிரசாதங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
 பக்தர்கள் திருமண பாக்கியம் வேண்டியும், புத்திரபேறு வேண்டியும், கிரஹபிராப்தி வேண்டியும் பலரும் ஒன்பது பெளர்ணமி தினங்களில் ஒன்பது முறை சந்நிதியைச் சுற்றி வந்து வழிபடுவர்.
 தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்; மாலை 5 மணி முதல் 8 மணிவரையும் ஆலயம் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
 - ரஞ்சனா பாலசுப்ரமணியன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com