பொருநை போற்றுதும்! 52 - டாக்டர் சுதா சேஷய்யன்

மூலவரின் திருநாமத்தைக் கொண்டு வேத நாராயணபுரம் என்னும் பெயரும், ராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், ராஜேந்திர விண்ணகரம் என்னும் பெயரும் உண்டு.
பொருநை போற்றுதும்! 52 - டாக்டர் சுதா சேஷய்யன்

மூலவரின் திருநாமத்தைக் கொண்டு வேத நாராயணபுரம் என்னும் பெயரும், ராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், ராஜேந்திர விண்ணகரம் என்னும் பெயரும் உண்டு.
 இவ்வாறு, மூன்று திருக்கோலங்களில் பெருமாள் இங்கு சேவை சாதிப்பதற்கு என்ன / யார் காரணம்? பெருமாளை மூன்று திருக்கோலங்களிலும் கண்ணாரக் கண்டு தரிசிக்கவேண்டும் என்கிற ஆசை, பிருகு முனிவருக்கும் மார்க்கண்டேய முனிவருக்கும் ஏற்பட்டது. இருவரும் பெருமாளைப் பிரார்த்தித்துத் தவம் செய்ய, பொருநை கடனா படுகையின் வேதபுரிக்குச் செல்லும்படி பணித்தார் பெருமாள். அதன்படியே இருவரும் வேதபுரியை அடைந்து தவம் செய்தனர்.
 தவத்திற்குக் கட்டுப்பட்ட ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ வேத நாராயணராகக் காட்சி கொடுத்து, முனிவர்களின் ஆசைகளைத் தீர்த்து வைத்தார். தாங்கள் கண்ட கோலங்களில் சுதைச் சிற்பங்கள் செய்து, மூலிகை வர்ணங்களைத் தீட்டிய முனிவர்கள், அவற்றுக்குள் எம்பெருமானை எழுந்தருளும்படி வேண்ட, எக்காலத்துக்கும் அருள் வழங்க ஏதுவாய் எம்பெருமானும் அவ்வாறே செய்தார். பெருமாள் கருவறையில், முனிவர்கள் இருவரும் காட்சி தருகின்றனர். வேதவல்லித் தாயாரும் புவனவல்லித் தாயாரும் தனிக்கோயில் நாச்சிமார்கள்.
 சிறந்த பிரார்த்தனைத் தலம் இது. வேதத்தையும் வேத நெறியையும் உலகிற்குத் தந்தவர் வேதநாராயணர் என்றே கருதுவதால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதற்கும், தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கும், இந்தப் பெருமாளிடம் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். தவிர, மூலவர் சந்நிதிக்கு அருகில் "பிள்ளைத் தொண்டு பாதை’ என்று ஒன்றுள்ளது. குறுகலான பாதை. பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள், பிள்ளை வரம் வேண்டி, இந்தப் பாதையில் நுழைந்து வெளிவந்து பெருமாளை யாசித்தால், கருவறைப் பாதையில் பிள்ளை வரும் என்பது நம்பிக்கை. உற்சவர் சந்நிதியில் பட்சிராஜனான கருடாழ்வாரும் உடனுறைவது, ஸ்ரீ வில்லிப்புத்தூரை நினைவுபடுத்துகிறது.
 இவற்றையெல்லாம் விட, மன்னார் கோவில் என்னும் இத்தலம், வரலாற்றுப் பெருமைக்குரியது. ஆழ்வார்களில் நடுநாயகப் பெருமைக்குரியவர் குலசேகரப் பெருமான். கடவுளைப் "பெருமாள்' என்று அழைக்கிறோம், இல்லையா? ஸ்ரீ வைணவத்தில், "பெருமாள்' என்னும் அடைமொழிக்குக் கடவுளரில் ராமபிரானுக்கும், மஹான்களில் குலசேகர ஆழ்வாருக்கும் உரியது. இவருடைய பாசுரங்கள், "பெருமாள் திருமொழி' என்றே போற்றப்படுகின்றன. மாசி மாதப் புனர்பூச நட்சத்திரத்தில் உதித்த இவருக்கு, அதே புனர்பூசத் திருவவதாரமான ராமபிரான்மீது அளவற்ற பிரேமை. ராமபிரான் ராவணனோடு போருக்குப் புறப்படுகிறார் என்றாலும், ராமபத்தினி சீதையை ராவணன் கபடவேடத்தில் கடத்துகிறான் என்றாலும், இத்தகவல்களை உபன்யாசத்தில் கேட்டால்கூட, வரிந்துகட்டிக்கொண்டு தாமே போருக்குப் புறப்பட்டுவிடுவார். "மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே' என்று ராமனுக்குத் தாலாட்டு பாடிய இவர், சேரகுல அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.
 இருப்பினும், ஆண்டவன்மீது கொண்ட அளப்பரிய காதல்கொண்ட இந்தப் பெருமகனார், அரச போகத்தைத் துறந்து, தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். யாத்திரையின் நிறைவாக வேதபுரி என்னும் மன்னார்கோவிலை அடைந்தவர், இங்கேயே தம் வாழ்வின் அந்திம காலத்தைக் கழிக்க முடிவு கொண்டார். இத்தலத்திலேயே தங்கினார். இங்கேயே திருநாடு அலங்கரித்தார் (திருநாடு அலங்கரித்தல் என்பது பூமி வாழ்க்கையை நீத்து ஆன்மாவானது இறைவனுடைய இருப்பிடமான திருநாட்டை அடைதல்; அதாவது உடலினின்று உயிர் நீங்குதல்). இவருடைய பூதவுடல் பள்ளிப்படுத்தப்பட்ட இடம், திருவரசுக் கோயிலாக, கொடிமரச் சந்நிதியாக உள்ளது. ராமபிரான்மீது காதல் கொண்டவரல்லவா? சீதா ராம லக்ஷ்மண விக்ரஹங்களுக்கு நாள்தோறும் பூஜை செய்து வந்தார். அவை, இன்றளவும் கோயில் பூஜையில் உள்ளன. குலசேகரரின் தெய்வீகத் தொடர்பால், ராஜகோபால குலசேகரப் பெருமாள் கோயில் என்றே பலரும் அழைக்கிறார்கள்.
 மன்னார்கோவிலில் மற்றுமொரு வைணவத் தமிழ்ப் பெரியாரும் தோன்றினார். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு பன்னீராயிரப்படி உரை கண்ட வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் பெருமானே இவர் ஆவார். வைணவப் பாசுரங்களுக்கு எழுதப்பெற்ற உரைகள், எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் (மெய்யெழுத்து நீங்கலாக) 32 சேர்த்து, ஒரு படி என்று கணக்கு. இவ்வகையில், 12,000 படிகள் கொண்டதுதான் பன்னீராயிரப்படி வியாக்கியானம். ஸ்ரீ மத் பாகவதம் 12000 கிரந்தங்களைக் கொண்டது என்பதால், அதன் வழியொட்டி, 12000 படிகளில் இவ்வுரையைச் செய்தார் அழகிய மணவாள ஜீயர் பெருமான்.
 குலசேகரப் பெருமானையும் அவர்தம் ஆராதனை ராம பிரானையும் அழகிய மணவாள ஜீயரையும் ராஜமன்னாரையும் வணங்கிப் புறப்பட்டால், ஆழ்வார்குறிச்சி அழைக்கிறது.
 அம்பாசமுத்திரத்திற்குச் சுமார் 12 கி.மீ. வடமேற்கிலும், தென்காசிக்குச் சுமார் 23 கி.மீ. தென்கிழக்கிலும், விக்கிரமசிங்கபுரத்திற்குச் சுமார் 11 கி.மீ. வடக்கிலும் உள்ளது ஆழ்வார்குறிச்சி. "குறிச்சி' என்றால் மலைப்பாங்கான பகுதி அல்லது ஊர். அருகில்தான் குலசேகர ஆழ்வார் வாழ்ந்தார் என்பதை வைத்து, ஆழ்வார்குறிச்சி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும்.
 மேற்கு-வடமேற்கில் ராம நதியையும் (அல்லது வராஹ நதி) கிழக்கு-தென்கிழக்கில் கடனா நதியையும் கொண்டுள்ள ஆழ்வார்குறிச்சியின் அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், வெகு பிரபலமானது.
 அது துவாபர யுகம். அக்னியால் மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் ஆபத்து வரக்கூடாது என்று எண்ணிய சப்தரிஷிகள், அதற்கான யாகம் ஒன்றை, பொதிகையின் குளிர்ச்சி கோலாகலம் செய்யும் இப்பகுதியில் நடத்தினர். தன்னுடைய வலிமை இதனால் குன்றிவிடும் என்று அஞ்சிய அக்னிதேவன், யாகத்தில் ஒளிராமல், சுடர் விடாமல், வேண்டுமென்றே மங்கலாக எரிந்தான். யாகத்தின் அவிர்பாகத்தைப் பெற்றுக்கொண்டு விண்ணோக்கிப் பாய வேண்டியவன், குன்றிநின்று யாகத்தைக் குறைவுபடுத்தினான். இதனால் வருத்தமடைந்த சப்தரிஷிகள், அவன் நிரந்தரமாக ஒளி குன்றிவிட வேண்டுமென்று சாபமிட்டனர்.
 சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மீனாக மாறி, அருகில் ஓடிய ஆற்றில் தன்னை மறைத்துக் கொண்டான். இருப்பினும், ரிஷிகளின் சாபம் தன்னைச் சீண்டுவதையும், தன்னுடைய வலிமையும் உயிர்ப்பும் குறைவதையும் உணர்ந்தான். தவறைப் புரிந்துகொண்டு, அருகிலிருந்த சுதாம மஹரிஷியின் ஆசிரமம் அடைந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். தாமிரவருணிச் சமவெளியாகவும், கருணையாற்றின் கரையாகவும் இருக்கும் அவ்விடத்திலேயே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும், பாவத்தைப் போக்கிக்கொண்டு சாப விமோசனம் பெறும்படியும் சுதாமர் வழிகாட்டினார்.
 - தொடரும் ...
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com