சுடச்சுட

  
  sudha

  ரிஷிகளின் சினத்தையும் பரம்பொருளான சிவனாரின் சினத்தையும் குளிர்வித்தால்தான், தான் நிரந்தரமாகக் குளிர்ந்துவிடாமல் ஒளிர முடியும் என்பதைப் புரிந்துகொண்ட அக்னிதேவன், அதன்படியே, தீர்த்தம் ஒன்றைத் தோற்றுவித்து, அந்தத் தீர்த்தத்திலேயே லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
   அவன் வழிபட்டுத் தவம் செய்த இடத்திலும் நதி ஒன்று பாய்ந்து கொண்டிருந்தது; கருணையாற்றோடு கலந்திருந்தது. முன்னர் ஒருமுறை, சீதையாகக் காட்சி தந்த தாயார், தன்னில் இறங்கியதையும், அவளை ஏந்திக்கொண்டு தான் மேல் வந்தபோது, ராமனாக நின்ற பரம்பொருள் தனக்கு அருள் வழங்கியதையும் (அதுதான், ராமாவதார காலத்தில்) நினைவு கூர்ந்தான். அவனுக்கு அருள்வழங்கி அவனுடைய வலிமையையும் ஒளியையும் மீட்டுக்கொடுத்த சிவனார், திறன் என்பது அடுத்தவர்களை அழிப்பதல்ல என்றும், மாறாகப் பிறரின் திறமையை மேலும் பிரகாசிக்க உதவுவதே ஆகும் என்றும் உபதேசித்தார்.
   சீதையின் திறத்தை மேலும் பிரகாசிக்கச் செய்ததாலேயே அக்னிக்குச் சிறப்பு கூடியது என்பதையும் நினைவுபடுத்திவிட்டு, இப்போதைய வழிபாட்டின்போதும் ராமனையும் சீதையையும் அக்னிதேவன் எண்ணி நின்றதால், கருணையாற்றோடு கலக்கும் சிறிய நதிக்கு, "இனிமேல் ராம நதி என்னும் பெயர் நிலைக்கும்' என்றும் உரைத்தார். ரிஷிகளின் சினம் தணிந்தது; சுவாமி குளிர்ந்தார் அக்னி ஒளிர்ந்தான்.
   அக்னிதேவன் வழிபட்டதால், சுவாமிக்கு அக்னீச்வரர் என்றும் வன்னீச்வரர் என்றும் திருநாமங்கள். தலமரமும், வன்னியே ஆகும். "வன்னி' என்னும் சொல்லுக்கு "நெருப்பு' என்று பொருள். இதனாலேயே, முருகப்பெருமானுக்கு "வன்னிகர்ப்பர்' (நெருப்பில் தோன்றியவர்) என்றும், வாயுதேவனுக்கு "வன்னிமித்ரன்' (நெருப்பின் நண்பன்) என்றும் பெயர்கள் உள்ளன.
   வன்னீச்வரர் என்னும் திருநாமம் தோன்றியதற்கு இன்னுமொரு காரணத்தையும் உள்ளூர்க்காரர்கள் கூறுகிறார்கள். அக்னியால் தீர்த்தம் ஏற்படுத்தப்பட்டு லிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த இடத்திற்கு அக்னி தீர்த்தம் என்றே பெயர்.
   அபிஷேகப்பிரியர் சிவனார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அக்னி தீர்த்தத்தில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். நதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, தீர்த்தத்திலும் வெள்ளம் பாய்ந்து, சிவலிங்கம் மூழ்கிப்போகும்.
   இதனைக் கண்டு கவலையுற்ற விஜயேந்திர பூபதி என்பவர், சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர், அக்னிதீர்த்தத்திற்கு உள்ளிருந்து சுவாமியை வெளியே எடுத்து, அருகிலிருந்த வன்னிமரக் காட்டுக்குள் பிரதிஷ்டை செய்து கோயிலும் கட்டிவிட்டார். வன்னிமரத்தடிக்குப் போனதால், சுவாமிக்கு வன்னீச்வரர் என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். பூபதி கட்டிய திருக்கோயிலைப் புதுப்பித்து விரிவாக்கினார் பராந்தகச் சோழப் பேரரசர். தொடர்ந்து சோழப் பேரரசர்கள் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தனர்.
   பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், அக்னிதேவனால் பூஜிக்கப்பட்டு பூபதியால் காட்டுக்குள் கொலுவைக்கப்பட்ட அக்னீச்வரரைக் கோயிலின் ஈசான மூலையில் அமர்த்திவிட்டுப் புதியதும் பெரியதுமான சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். இப்போது மூலவராகக் கருவறையில் காட்சி தருபவர், பாண்டியலிங்கனாரே ஆவார். இவருக்கே இப்போது அருள்மிகு வன்னீச்வரர் என்றும் வன்னியப்பர் என்றும் திருநாமங்கள் வழங்கப்பெறுகின்றன. சோழர்கள் நிர்மாணித்த பழைய நந்தி, மூலவருக்கு முன்பாக உள்ளது. பாண்டியர்களால் செய்விக்கப்பெற்ற புதிய நந்தி, எல்லையில்லா எழிலோடு, கொடிமரத்திற்கு அருகில் உள்ளது.
   பழைய அக்னீச்வரர், ஈசான மூலையில், அளப்பரிய அமைதியோடு வீற்றிருக்கிறார்.
   அருள்மிகு சிவகாமசுந்தரி என்னும் திருநாமத்தோடு அம்பிகை காட்சி கொடுக்கிற இத்தலத்தில் விசேஷங்கள் பல உள்ளன. அம்பாள் சந்நிதியும்கூட பாண்டியர்களின் அமைப்பே ஆகும்.
   இக்கோயிலின் மண்டபத் தூண் ஒன்றில், கருவுற்ற பெண்ணின் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. சாக்ஷôத் அம்பிகையே கர்ப்பவதி வடிவில் காட்சி தருகிறாள். அருள்மிகு கர்ப்பரக்ஷôம்பிகை என்றே இத்தூண் அம்பாளுக்குத் திருநாமம். மகப்பேறு வேண்டுபவர்கள், முதல் வாரம் வந்து, கர்ப்பரக்ஷôம்பிகையை வழிபட்டு, தங்கள் கைகளாலேயே அவளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். பின்னர் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அதே நாளில் வந்து, கோயில் சிவாசார்யரைக் கொண்டு அர்ச்சனை நடத்துவித்து ஆராதிக்கவேண்டும் (இந்த மூன்று வாரங்கள், நேரடியாக வரமுடியவில்லையானால், நெருங்கிய உறவினர்கள்கூட அர்ச்சனை செய்யலாம்). இப்படிச் செய்தால், கூடிய விரைவில் பிள்ளை வரம் கிட்டும். குழந்தை பிறந்தபின்னர், தம்பதியராகக் குழந்தையையும் அழைத்து வந்து நேர்த்தியை நிறைவேற்றி வழிபடவேண்டும்.
   இன்னொரு தூணில், மணப்பெண்ணின் அலங்கார கோலத்தில் அம்பிகை காட்சி தருகிறாள். இவளுக்குக் கல்யாணாம்பாள் என்று பெயர். திருமணத் தடை இருப்பவர்கள், கர்ப்பரக்ஷôம்பிகைக்குக் கூறியதைப் போலவே, முதல் வாரம் கல்யாணாம்பாளுக்கு அபிஷேகம் செய்துவிட்டுப் பின்னர் மூன்று வாரங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும். பெண்ணோ பிள்ளையோதாம் வரவேண்டும் என்பதில்லை. தாயாரோ தந்தையோகூட அபிஷேகம் செய்யலாம்; அர்ச்சனை செய்விக்கலாம். திருமணம் கூடியபின்னர், தம்பதியராக வந்து பற்பலரும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கல்யாணாம்பாளுக்கு மாலைகள் சூட்டி வணங்குகின்றனர்.
   முதல்முறை அபிஷேகம் செய்வதுகூட வெகு சுலபம். ராகுகாலம் தவிர்த்த எந்த நேரத்திலும் எந்த நாளிலும் செய்யலாம்.
   கோயில் தூண்கள் பலவற்றிலும், கருவுற்ற பெண்களின் வெவ்வேறு நிலையிலான தோற்றப் பிரதிமங்கள் காணப்படுகின்றன. பிரசவ காலமும் பக்கத்தில் உள்ள பெண் பிரசவத்திற்கு உதவுவது போன்றும் சிற்பங்கள் உள்ளன. கருவுற்ற பெண்கள் யோகாசனம் செய்வதுபோன்றும் சில சிற்பங்கள்.
   ஐந்து தலை நாகத்தின்மீது கிருஷ்ணன் நடனமாடுவதாக ஒரு சிற்பம்; ராகு தோஷக்காரர்கள், இந்தச் சிற்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடவேண்டும். படமெடுத்தாடும் நாகத்தின் கீழ் சிவலிங்கம் அமைந்ததாக ஒரு சிற்பம்; கேது தோஷக்காரர்கள், இந்தச் சிற்பத்திற்கு அபிஷேக வழிபாடு செய்யவேண்டும். ராகுவும் கேதுவும் இணைந்திருப்பதாக ஒரு சிற்பம்; காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள், இதற்கு அபிஷேகம் செய்யவேண்டும். அர்த்த மண்டபத்தின் வெளிப்பகுதிக் கூரையில், பின்னிப் பிணைனந்த பாம்புகளும், அவற்றைக் கட்டுப்படுத்தும் பாம்பாட்டிகளும், மேலே சிவலிங்கமுமாக ஓரு சிற்பத் தொகுப்பு. இதுவே காலசர்ப்ப யந்திரம். நாகதோஷங்களை நிவர்த்தி செய்யக்கூடிய யந்திரம்!
   - தொடரும்...
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai