தேடி வந்தருளும் திருமகள்!

"அம்மா நான் ஒரு வேலை நிமித்தமாக அடுத்த ஊருக்குச் செல்லவேண்டும் மாலை இருள் சூழ்ந்துவிட்டது; அதனால் இந்த ஒர் இரவு மட்டும் இங்கு வாசல் திண்ணையில் தங்கிவிட்டு நாளை விடிவதற்குள் கிளம்பி விடுகிறேன்;
 தேடி வந்தருளும் திருமகள்!

வரலட்சுமி விரதம் 9.8.2019
"அம்மா நான் ஒரு வேலை நிமித்தமாக அடுத்த ஊருக்குச் செல்லவேண்டும் மாலை இருள் சூழ்ந்துவிட்டது; அதனால் இந்த ஒர் இரவு மட்டும் இங்கு வாசல் திண்ணையில் தங்கிவிட்டு நாளை விடிவதற்குள் கிளம்பி விடுகிறேன்; இங்கு தங்க அனுமதிக்க முடியுமா?' என ஒரு பெண்மணி வாசலில் நின்று கொண்டு கேட்டதை; வாசற்பிறையில் விளக்கேற்ற வந்த அந்த வீட்டின் மாது குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள்.
 அழகே வடிவெடுத்த ஒரு பெண் உருவம் நிற்பதைப் பார்த்து "உள்ளே வாம்மா, எதற்கு வாசலில் நிற்கிறாய்?" எனப் பாசத்துடன் அழைத்தாள். வந்தவளோ புன்னகைத்து விட்டு "இல்லையம்மா வீட்டிற்கு விலக்கான மூன்றாம் நாள் இன்று; இந்த நிலையில் சந்தியாகாலத்தில் வெளியில் செல்வது அவ்வளவு சரியில்லை, அதனால் இப்படியே நான் தங்க அனுமதிக்க வேண்டுமென்றாள். உடனே வீட்டம்மாவோ, இதோ வருகிறேன் என்று உள்ளே சென்று ஒரு மனைப்பலகையை கொண்டு வாசல் ரேழியில் போட்டு இதில் அமர்ந்து கொள். இரவு நேரமாக உள்ளது; விருந்தாளி பட்டினியோடு படுத்துறங்கக் கூடாது; ஏதோ என்னால் முடிந்ததை சாப்பிடத் தருகிறேன்" என்று உள்ளே சென்றாள்.
 உள்ளே சென்றவள், தன் வீட்டின் நிலை என்ன என்பதை அறிவாள். அரிசிப் பானையில் 2 ஆழாக்கு தான் அரிசி இருந்தது. அஞ்சறைப்பெட்டியில் தேடினாள். கொஞ்சம் மிளகு, சீரகம் மற்றும் துவரம்பருப்பு இருந்தது; பொங்கல் செய்வதற்கான பயத்தம் பருப்பு சுத்தமாக இல்லை. தாயே இந்த ஏழை படும்பாடு உனக்குத் தெரியாதா; வந்தவளுக்கு பக்குவமாக செய்து போட இதைத்தவிர ஒன்றுமில்லையே! நீ தான் அருள வேண்டுமென வணங்கி இருந்ததை வைத்துக்கொண்டு பொங்கல் செய்து வீட்டிலுள்ள நல்ல நெய்யினை அப்படியே விட்டு ஒரு தட்டில் இலையைப் போட்டு வந்த பெண்ணிற்கு கொண்டு கொடுத்தாள். பின் "கொஞ்சம் இரு தொட்டுக்கொள்ள ஏதேனும் எடுத்து வருகிறேன்'"என உள்ளே சென்றாள். கையில் கிட்டியதோ வடாம் மட்டுமே. உடனே எண்ணெயை வைத்து வடாத்தை பொறித்து அதையும் கொண்டு வந்து வாஞ்சையுடன் கொடுத்தாள். வந்தவளோ தேவாமிர்தமாக இருப்பதாகக்கூறி உண்டு மகிழ்ந்தாள். பின், "நான் நாளை விடியற்காலை கிளம்பி விடுவேன்; ஆதலால் நீங்கள் அனைவரும் உண்டு உறங்குங்கள்'"எனக் கூறினாள்.
 இல்லத்தரசி காலையில் எழுந்து, வந்த பெண்ணைத் தேடியபோது அவளைக் காணவில்லை, சென்றுவிட்டாள். பின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் செல்வச்செழிப்போடு தன தானியங்கள் நிறைந்திருந்ததைப் பார்த்து பிரமித்தாள். நம் சிரமத்தைப் போக்க வந்தவள் மகாலட்சுமியே என்பதை உணர்ந்தாள். அவளே அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதியான வரலட்சுமி ஆவாள். அந்த நாளே வரலட்சுமி விரதம் தொடங்கிய நாளாகும்.
 இந்த வெள்ளிக்கிழமை விரதத்தை மேற்கொள்வோர், முதல் நாள் வியாழனன்று மாலை ஒரு மனைப்பலகையில் கோலமிட்டு, செப்புச்சொம்பில் அரிசியை நிரப்பி அந்த சொம்பில் வரலட்சுமி அம்மனை வரைந்து, மேலே மாவிலை மற்றும் ஒரு தேங்காயை வைத்து அம்மனை வரணம் செய்து பின் துவரம்பருப்பினால் செய்த பொங்கலை படைத்து உண்டு உறங்கி, பின் மறுநாள் காலை வெல்லக் கொழுக்கட்டை, உப்புக் கொழுக்கட்டை, இட்லி, சூயன், சுண்டல், வெல்லப்பாயசம் ஆகியவை செய்து "பூவும் பொட்டோடும் தீர்க்க சுமங்கலியாய் வாழ வாழ்த்தம்மா' என வணங்கி பூஜித்து பின், மஞ்சள் கயிற்றினை (சரடு) தான் கட்டிக்கொண்டு வீட்டிலுள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டுவார்கள்.
 சிராவண மாதத்தின் கடைசி வெள்ளியில் அதாவது, ஆடிப்பெளர்ணமிக்கு முதல் வெள்ளியன்று இந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இது சில வருடங்களில் ஆவணி மாதமும் வருகிறது.
 மற்றொரு செய்தியும் உலா வருகிறது. மகத நாட்டை சேர்ந்த பெண் சாருமதி தன் மாமனார், மாமியாரை இறைவனாகக்கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது பக்தியை மெச்சி மகாலட்சுமியே அவள் கனவில் தோன்றி "வரலட்சுமியாக என்னை ஆராதிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தருவேன்' எனக்கூறி தன்னை பூஜிக்கும் முறையையும் தந்தருளியதாக புராணம் சொல்கிறது.
 இந்த வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு இன்று (9.8.2019) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. வணங்கி மகிழ்வோம் - அஷ்ட ஐஸ்வர்களையும் பெறுவோம்!
 - எஸ். எஸ். சீதாராமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com