பகர பகரும் பக்ரீத்

இஸ்லாத்தின் இறுதி கடமையாம் ஹஜ்ஜை மக்காவில் உள்ள அரபா, மினாவில் ஹஜ் செய்வோர் நிறைவேற்றுவர்.
பகர பகரும் பக்ரீத்

இஸ்லாத்தின் இறுதி கடமையாம் ஹஜ்ஜை மக்காவில் உள்ள அரபா, மினாவில் ஹஜ் செய்வோர் நிறைவேற்றுவர். உலகில் உள்ள இஸ்லாமியர்கள் அவரவர் ஊர்களில் ஹஜ் பெருநாள் கொண்டாடுவர். இவ்வாண்டு, இந்தியாவில் ஹஜ் பெருநாள் 12.08.2019 -இல் கொண்டாடப்படுகிறது.
 இறைவனின் கட்டளையை ஏற்று இப்ராஹீம் நபி அவர்களின் மகன் இஸ்மாயில் நபியைப் பலி கொடுக்க முனைந்த பொழுது இறைவன் ஓர் ஆட்டினைத் தோன்ற வைத்து பலியிட செய்தான். இந்நிகழ்ச்சியை ஒட்டியே இப்பெருநாளைக்குப் பக்ரீத் என்ற பெயரும் உண்டு. பக்ரீத் என்ற உருது சொல்லுக்குக் குர்பானி, பலியிடுதல் என்று பெயர்.
 "உங்களின் அல்லாஹ்விற்காக தொழுவீராக! குர்பானியும் கொடுப்பீராக!'' என்ற எழில்மறை குர்ஆனின் 108 - 2 ஆவது வசனப்படி பெருநாள் தொழுகை தொழுத பின்னரே குர்பானியைக் கொடுக்க வேண்டும். இந்த பெருநாளுக்குக் குர்பானி ஈத் என்ற பெயரும் உண்டு. துருக்கியில் இப்பெருநாளுக்கு ஈத் பைராம் என்று பெயர்.
 மதீனாவில் வாழ்ந்த பத்து ஆண்டுகளும் மாநபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததை எடுத்துரைக்கிறார் இப்னு உமர் (ரலி) நூல்- திர்மிதீ, மிஸ்காத். கருணை நபி அவர்கள் கருப்பும் வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுத்ததாக கூறுகிறார் அனஸ் (ரலி) நூல் - புகாரி.
 குர்பானி கறியை மூன்று பங்கிட்டு ஒரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ஒரு பங்கை குர்பானி கொடுப்பவர் அவருக்காகவும் அவரின் குடும்பத்திற்காகவும் எடுத்துக் கொள்ளலாம். குர்பானி கறி முழுவதையும் ஏழைகளுக்குக் கொடுப்பதே ஏற்றமானது. அவ்வாறு பகர பகர்கிறது பக்ரீத்.
 சவூதி அரபியாவில் ஹஜ்ஜில் பலியிடப்படும் ஆடு, மாடு, ஒட்டக கறி வறுமையில் வாடும் நாடுகளில் வாழும் ஏழைகளுக்குக் கொடுப்பதற்காக பக்குவப் படுத்தப்பட்டு எச்செலவும் அந்த வறிய நாடுகளுக்கு ஏற்படாமல் இலவசமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 குர்பானி கறியை ஏழைகளுக்குக் கொடுப்பதோடு ஏராளமாய் தாராளமாய் தானம் வழங்கி இல்லாமையை இல்லாமல் ஆக்கி சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி பூணுவோம். ஒருமைப் பாட்டில் ஒழுகும் நம் இந்தியாவில் அனைத்து சமய சகோதர சகோதரிகளோடும் நல்வாழ்த்துகளைப் பரிமாறி நாட்டில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவோம்.
 - மு.அ.அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com