மலேசியா மகாமாரியம்மன் கோயில்

ஈப்போ நகரில் அமைந்துள்ள முக்கியத் திருக்கோயில் இது. தமிழர்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய அழகிய ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்டது,
மலேசியா மகாமாரியம்மன் கோயில்

ஈப்போ நகரில் அமைந்துள்ள முக்கியத் திருக்கோயில் இது. தமிழர்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய அழகிய ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்டது, மலேசியா நாட்டுப் பேராக் மாநிலத் தலைநகரான, ஈப்போ நகரில் அமைந்த, மகாமாரியம்மன் திருக்கோயில்.
 தலவரலாறு: இன்றைய ஈப்போ நகரம், கி.பி. 1902 -ஆம் ஆண்டில் சுண்ணாம்புக்காரக் கம்பம், வேட்டியப்ப தேவர் கம்பம், வங்காளி கம்பம் என்ற மூன்று பகுதிகளில் அமைந்திருந்தது. இங்கு இந்துக்கள் அதிகம் வசித்து வந்தனர்.
 வேட்டியப்ப தேவர்: அப்போது வேட்டியப்பதேவர் அரசாங்க ஒப்பந்தக்காராகவும், ஏராளமான மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகளின், உரிமையாளராகவும், செல்வந்தராகவும் விளங்கினார். மக்களிடம் செல்வாக்கு பெற்ற இவர், தெய்வபக்தி நிறைந்தவராகவும் பொதுநலன் பேணுபவராகவும் விளங்கினார். இன்றைய நியூ டவுன் பகுதியில், தமிழர்கள் வழிபாட்டுக்கென ஒரு சிறிய அம்மன் கோயில் அமைத்தார். இக்கோயில் அப்பகுதியில் கிடைத்த சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டது.
 இந்நிலையில், இவரைப் போன்ற தெய்வபக்தி மிக்கவரான வி.செங்கல்வராய மேசனார் என்ற குத்தகைதாரரும் தன் சொந்த இடமான சேத்துக்கம்பம் எனும் ஜெல்ப் ரோட்டில் இடம் தந்து உதவினார். இந்நிலையில் கி.பி. 1914 -இல் நகரின் வளர்ச்சி காரணமாக, மாரியம்மன் கோயில் வேறொரு விசாலமான சுங்கைப்பாரி வீதியில், மாற்ற முடிவு செய்யப்பட்டது. கி.பி. 1915- இல் புதிய மகாமாரியம்மன் கோயில் அமைக்கப்பட்டது. பழைய கோயில் சிலைகள் அனைத்தும் இங்கே கொண்டு வந்து நிறுவப்பட்டு, குடமுழுக்கும் நடந்தது.
 திருப்பணிகள்: கோயிலை விரிவுபடுத்தும் நோக்கில் கி.பி. 1922 -இல் இந்தியாவில் இருந்து வந்த சட்டி சாமியார் என்பவரால் கருவறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கி.பி. 1929 மற்றும் கி.பி. 1935 -இல் திருப்பணிகள் நடைபெற்றன. பல்வேறு தடைகளைத் தாண்டி நீண்ட காலத்திற்குப் பின் 1937 -இல் குடமுழுக்கு விழா, இனிதே நடந்தேறியது. 1963 - இல் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. மீண்டும் சில திருப்பணிகள் நடந்து முடிந்து ,1979 -இல் மூன்றாம் முறையாக குடமுழுக்கு விழா நடந்தது.
 தேரோட்டம்: தைப்பூசத்தன்று மகாமாரியம்மன்கோயிலில் இருந்து, ஈப்போ குனோங் சீரோ, கல்லுமலை முருகன் கோயில் வரை தேரோட்டம் நடைபெறும். இத்தேர் தமிழகத்தில் செய்யப்பட்ட கலை நயம் மிக்க மரத்தேர் ஆகும்.
 ஆலய அமைப்பு: இவ்வாலயத்தில் நடுநாயகமாக மகாமாரியம்மன் எழிலாக அமர்ந்துள்ளார். விநாயகர், முருகன், பள்ளி கொண்ட நாராயணன், நவக்கிரக சந்நிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. ஆலயத்தின் வளாகத்தில் முனீஸ்வரர் சந்நிதி உள்ளது. விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, தைப்பூசம் , கிருத்திகை என அனைத்து விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத்தன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றது.
 அமைவிடம்: ஈப்போ நகரில் சுங்கைப்பாரி வீதியில், கம்பீரமாக மூன்று நிலை ராஜகோபுரத்தில் கண்கவர் வண்ண மயமாக, இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
 ஈப்போ
 ஈப்போ, உலகிலேயே மிகப்பெரிய வெள்ளீயம் கொண்ட பகுதி. சுண்ணாம்பு மலைகள் நிறைந்த பூமியும் இதுவே. மலேசி நாட்டின், பதின்மூன்று மாநிலங்களில் பேராக் ஒன்றாகும். இதன் தலைநகரம் ஈப்போ. இங்கு பாய்ந்தோடும் கிந்தா நதி ஈப்போ நகரை இரண்டாகப் பிரிக்கின்றது. 19- ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நகரான கோப்பேங் இருந்து வந்தது. ஆனால், வெள்ளீயம் அதிகம் கிடைக்கும் பகுதியாக ஈப்போ திகழ்ந்ததால், இங்கு, குஜராத் உள்ளிட்ட இந்தியர்கள், சீனர்கள் குடியேறினர். ஈப்போவை வடிவமைத்தவர், சர் பிராங்க் சுவெட்டன்ஹாம் என்ற ஆங்கிலேயர். இவரே, மேற்கு மலேசியாவையும் வடிவமைத்தவர். ஸ்ரீநிவாசகம் தர்ம ராஜா என்பவரும் இதில் முக்கிய பங்கு வகித்தார். இங்கு அதிக அளவில் நகரத்தார் வட்டித் தொழில் செய்வதற்காக ஈப்போவில் குடியேறினர். லிட்டில் இண்டியா என்ற பகுதியும் ஈப்போவில் உள்ளது.
 
 - பனையபுரம் அதியமான்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com