அரனுக்கு அரசு அமைத்த அரண்!

சோழர்கால வரலாற்றோடு தொடர்புடைய சிறப்புமிக்க ஊர்களில் ஒன்றாகத் திகழ்கின்றது செம்பியவேளூர். செம்பியன் என்ற சொல் சோழ அரசர்களைக் குறிக்கும். சீரும், சிறப்புமாய்த் திகழ்ந்த
அரனுக்கு அரசு அமைத்த அரண்!

சோழர்கால வரலாற்றோடு தொடர்புடைய சிறப்புமிக்க ஊர்களில் ஒன்றாகத் திகழ்கின்றது செம்பியவேளூர். செம்பியன் என்ற சொல் சோழ அரசர்களைக் குறிக்கும். சீரும், சிறப்புமாய்த் திகழ்ந்த இவ்வூர் சிவன் கோயில், பல ஆண்டுகளுக்கு முன் வழிபாடு இன்றியும், தக்க பராமரிப்பு இன்றியும் சிதில நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. ஆலயத்தை ஆக்கிரமித்த தாவர இனங்கள் முக்கியமாக அரசமரங்கள் (அரசு) ஒரு தருணத்தில் ஆலயத்தை அழித்தது போதும் என்ற பச்சாதாப உணர்வு மேலீட, அவைகளே தகுந்த அரணாக இருந்துகொண்டு கோயில் கருவறையில் உள்ள லிங்கத் திருமேனியை மட்டும் பாதுகாத்து வந்திருக்கின்றது.
 இடிபாடுகளில் தப்பியவை சிவன், அம்பாள், விநாயகர், சண்டிகேசுவரர், நந்தி, பைரவர், பெருமாள் கற்திருமேனிகள் மட்டுமே. கிராம பதிவேடுகள் மூலம் இவ்வூர் ஈசன் காளகஸ்தீஸ்வரர் என்றும், அம்பிகை மங்களாம்பிகை என்றும் திருநாமங்கள் கொண்டு விளங்கி வந்திருக்கின்றனர் என்று அறிய முடிகிறது.
 ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் "திருக்காளத்தி' என்ற தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது. காளம் என்றால் பாம்பு, அத்தி என்றால் யானை. அவைகள் இத்தல ஈசனை வழிபட்ட பெருமையுடையது. சிறந்த ராகு - கேது பரிகாரத்தலம். அதே பெயருடன் செம்பியவேளூர் ஈசனும் விளங்குவது சிறப்பு. இடிபாடுகளிடையே இருந்தாலும் அருள்புரியும் இயல்பில் இம்மியளவும் குறையவில்லை. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் தரிசித்த வண்ணம் உள்ளனர். அம்பிகை பெயருக்கு ஏற்றார் போல் எப்பொழுதும் மங்களத்தை அருள்பவளாக புன்னகை ததும்பும் வதனத்துடன் எப்படியும் ஆலயம் நல்ல நிலைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் காட்சியளிக்கின்றாள். தலமரமாக கொன்றைமரம் உள்ளது.
 பலமுறை திருப்பணிக்கு முயற்சித்து இயலாமல் போக கடந்த 2016 -ஆம் ஆண்டு கிராமவாசிகள் மற்றும் அடியார் திருக்கூட்டத்தினர் இணைந்து உழவாரப்பணி செய்து சிறப்பு பிரார்த்தனைகளுடன் பாலாலயம் செய்து திருப்பணி வேலைகளை துவக்கியுள்ளனர். திருப்பணி வேலைகள் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் வேறுவழி இல்லாமல் அரசமரங்களை அகற்றும் போது அவைகள் பல ஆண்டுகள் வரை லிங்கத்திற்கு பாதுகாப்பாய் இருந்ததை எண்ணி ஊரே கண்ணீர் விட்டது. புதியதாக முருகன், ஐயப்பன், நவக்கிரகங்கள், சிலைகள் செய்ய வேண்டும். இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளாக மகாமண்டபம் அமைத்தல், தரை தளம் போடுதல், வாசலில் கோபுரம் அமைத்தல், மதில் சுவர் கட்டுதல், ஆலய குளத்தை சீர் செய்தல் போன்றவைகள் உள்ளன. முக்கியமான சில வாகனங்கள் செய்ய வேண்டும். பக்தர்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளது. தகுந்த நபர்களைக்கொண்டு திறம்பட திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றது.
 இந்த ஆலயத்தின் கடைசி குடமுழுக்கு எந்த நூற்றாண்டில் நடந்தது என்று ஊரில் மிக வயதானவர்களாலேயே கூறமுடியவில்லை. பழந்திருக்கோயில்கள், புண்ணிய தீர்த்தங்களைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது நமது கடமை, இதை கருத்தில் கொண்டு இந்த சிவ புண்ணிய கைங்கர்யத்திற்கு நமது பங்களிப்பையும் அளிப்போமாக.
 நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை- எட்டுக்குடி- நீர்முலை வழித்தடத்தில் உள்ளது செம்பிய வேளூர்.
 தொடர்புக்கு: 97861 56465 / 94441 72918.
 - எஸ். வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com