அளவற்ற பெருமைகள் கொண்ட திருப்பைஞ்ஞீலி நாதன்!

தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை வதம் செய்ததால், பூமியில் உள்ள உயிர்களுக்கும் இறப்பு இல்லாமல் போனது. நால்வகை வருணத்தாரும் தங்கள் கடமைகளை மறந்தனர்.
அளவற்ற பெருமைகள் கொண்ட திருப்பைஞ்ஞீலி நாதன்!

தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை வதம் செய்ததால், பூமியில் உள்ள உயிர்களுக்கும் இறப்பு இல்லாமல் போனது. நால்வகை வருணத்தாரும் தங்கள் கடமைகளை மறந்தனர். ஆனால் திருப்பைஞ்ஞீலி தலத்தில் மட்டும் அனைத்தும் சிறப்புடன் நடந்து வந்தன. இதனை அறிந்த மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், பூதேவி என அனைவரும் திருப்பைஞ்ஞீலி வந்து, எமதர்மனை உயிர்ப்பித்துத் தர வேண்டினார். அதற்குச் செவிமடுத்த சிவபெருமான், பிலாத்துவாரத்தின் வழியே எமதர்மனை வரவழைத்துத் தொழில் அதிகாரத்தை வழங்கினர். இந்த ஐதீகம் தைப்பூசத்தன்று விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 
தொன்மைச்சிறப்பு: புராண கால தலமாக உள்ளது மட்டுமன்றி, ஏழாம் நூற்றாண்டில் இருந்தே புகழ்பெற்று விளங்கியது. இவ்வாலயக் கல்வெட்டுகள் மூலம் பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்ததை அறியமுடிகிறது. அர்த்தமண்டபச் சுவரில் உள்ள கல்வெட்டு முதலாம் ராசேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் திருப்பணிகள் பற்றி குறிப்பிடுகிறது. துறையூர் ஜமீன் எண்ணற்ற திருப்பணிகள் செய்துள்ளார். அவரின் செப்புப் பட்டயப்படி 5417 ஏக்கர் நிலம் தேவதானமாக விடப்பட்டிருந்து. இதில் அரசு பெரும்பகுதி நிலத்தை எடுத்துக் கொண்டது. பணியாளர்களுக்கு சுமார் 306 ஏக்கர் மானியம் தரப்பட்டுள்ளது. அனைத்தும் போக, தற்போது குறைந்த அளவில் மட்டுமே நிலங்கள் உள்ளன. 
இரட்டை அம்மன்கள்: இவ்வாலயத்தில் நீள்நெடுங்கண் நாயகி எனும், விசாலாட்சி அம்மன் என்ற ஒரே பெயரில் இரண்டு அம்மன் சந்நிதிகள், மேல் அம்பாள், கீழ் அம்பாள் என அமைந்துள்ளன. பழைய அம்மன் பின்னப்பட்டதால் புதிய சிலா வடிவம் துறையூர் ஜமீனால் உருவாக்கப்பட்டது. 
கட்டமுது கொடுத்தது: காவிரி வடகரைத் தலங்களான திருச்சிராப்பள்ளி, திருவானைக்கோயில், திருவெறும்பூர், திருக்கற்குடி, திருப்பராய்த்துறை தலங்களைத் தரிசித்துவிட்டு திருப்பைஞ்ஞீலி தலம் நோக்கி நடந்தார், திருநாவுக்கரசர். பசியும் தாகமும் வாட்டியெடுக்க, களைப்பிலேயே பயணம் செய்தர். அடியாரின் மெய்வருத்தம் தீர்க்க விரும்பிய பைஞ்ஞீலிநாதன் அவருக்கு ஒரு நீர்நிலை, நிழல் தரும் சோலையை உருவாக்கி, அந்தணராக எதிர்கொண்டு அழைத்தார். தன்னிடம் இருந்த கட்டமுது தந்து பசியாற்றினார். பைஞ்ஞீலி வரை அழைத்து வந்து, அங்கே மறைந்தருளினார். இது தனிச் சந்நிதியாக உள்ளது. இறைவன் பெயர் சோற்றுடையீசர் ஆகும். இந்த ஐதீகம் சித்திரை அவிட்டம் தினத்தன்று கட்டமுது விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தடாகமும், தோட்டமும் கோயிலின் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது. 
நவக்கிரக படிகள்: மூன்றாம் பிரகாரத்தில் இருந்து மூன்று நிலை ராவண கோபுரம் தரிசனம் செய்து நுழையும் போது ஒன்பது படிகள் கடக்க வேண்டும். இவையே நவக்கிரக படிகளாகும். இங்கே நவக்கிரக சந்நிதிகளுக்கு பதிலாக இவையே நவக்கிரகங்களாக அமைந்துள்ளன. இதேபோன்று நந்திதேவருக்கு முன்பு ஒன்பது குழிகள், நவக்கிரக குழிகளாக வழங்கப்படுகின்றன. இதில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
ஆலய அமைப்பு: ஐந்து பிரகாரங்கள் கொண்ட பிரம்மாண்ட கோயில் இது. ஐந்தாவது பிரகாரம் இன்று குடியிருப்பாகி விட்டது. முற்றுப்பெறாத ராஜகோபுரம், சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. இதில் உள்ள கல்வெட்டுகளில் கோபுரத் திருப்பணிக்கு நிலதானம் வழங்கிய செய்தி காணப்படுகின்றது.
இதனைக் கடந்து உள்ளே சோறுடை ஈஸ்வர் சந்நிதி, காசி விஸ்வநாதர் சந்நிதி, நூற்றுக்கால் மண்டபம், மூன்றாம் பிரகாரம், அதிகார வல்லவர் சந்நிதி, ராவணன் திருவாயில் கோபுரம், நவக்கிரக படிகள், கொடிமரம், நவக்கிரக குழிகள், திருக்கார்த்திகை திருவாயில், மூலவர் சந்நிதி, ரத்தின சபை, முதலாம் பிரகாரம், விஷ்ணுதுர்க்கை தலமரமான கல்வாழை, சொந்தமரைக் கண்ணன் சந்நிதி, மேல்அம்பாள், கீழ் அம்பாள் சந்நிதி, விசாலாட்சி தீர்த்தம் அமைந்துள்ளன.
ஞீலிவனேஸ்வரர்: இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். மூலவரான ஞீலிவனேஸ்வரரை மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேடன், வாயு, அக்னி, ராமபிரான், வஷிட்டர், சூதமகா முனிவர், வியாக்கிரசூரர், பதுமகர்ப்பன், சூதர்மன், அங்கமித்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். 
சின்னாண்டார், பெரியாண்டார்: ஒரு சமயம் கொள்ளிட ஆற்றில் தீர்த்தம் கொண்டுவர சென்ற போது, இரண்டு பெட்டிகள் கிடைத்தன. அதில் போர் ஆயுதங்கள் நிறைந்திருந்தன. இவற்றைக் கோயில் வீடு என்ற இடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர். இதுபற்றி குறி கேட்டபோது பெரியாண்டவரும், சின்னாண்டவரும் இக்கோயிலில் குடியேற விரும்புவதாக கூறினர். அதன்படி சின்னாண்டவர் சுவாமி கொடிமரத்திலும், பெரியாண்டவர் அம்பாள் கொடிமரத்திலும் வாழ்வதாக எண்ணி வழிபாடு செய்து வருகின்றனர்.
சுற்று வட்டாரத்தில் மாடு கன்று போட்டதும் , இவ்விருவருக்கும் அபிஷேகம் செய்வது மரபாக மாறியுள்ளது. 
திருக்கோயில் கார்த்திகை தீபத்தன்று திருவாயிலில், தீபம் ஏற்றுவதால் இப்பெயர் ஏற்பட்டது. வாயிலின் இருபுறமும் தென்கயிலாயம், வட கயிலாயம் என சந்நிதிகள் அமைந்துள்ளன.
ரத்தின சபை: வழிபட்ட முனிவருக்கென அர்த்தமண்டபத்தில் நடன தரிசனம் தந்ததால், இது ரத்தினசபை என்றும், மேலைச்சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நடராஜப் பெருமான் திருவடிகள் மட்டும் கலைநயத்தோடு காட்சியளிக்கின்றன . 
கல்வாழை: கல்வாழையைத் தலமரமாகக் கொண்ட ஒரே ஆலயமாக திருப்பைஞ்ஞீலி அமைந்துள்ளது. சிவயோகத்தில் அமர விரும்பிய அன்னை பார்வதி பணிவிடைப் பெண்களை, நிழல் தரும் மரங்களாக மாறி நிழல் தருமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின் தேவகன்னிகள் வாழை மரங்களாகி நிழல் தந்தனர். இம்மரத்தை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி பரிகாரம் செய்து வணங்கினால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக அமைந்துள்ளது. இதில் விளையும் எந்தப் பொருளையும் இதன் புனிதம் கருதி எவரும் பயன்படுத்துவதில்லை.
இலக்கியம்: இத்தலம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தவிர, சேக்கிழார் பெரியபுராணத்திலும், வடலூர் ராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவிலும் புகழ்ந்துள்ளனர். மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களும் தன் பாடல்களில் புகழ்ந்துள்ளார். 
தலமரம், தீர்த்தம்: தலமரம் கல்வாழை. தீர்த்தங்களாக விசாலாட்சி தீர்த்தம், அப்பர் தீர்த்தம், எம தீர்த்தம், கல்யாண தீர்த்தம், தேவகுளம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
அமைவிடம்: திருச்சி , மண்ணச்சநல்லூர் வட்டத்தில், திருப்பைஞ்ஞீலி அமைந்துள்ளது. 
- பனையபுரம் அதியமான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com