கண்ணியம் தருபவன் அல்லாஹ்

எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவன்
கண்ணியம் தருபவன் அல்லாஹ்

எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவன். நன்றாக தெரிந்தவன் என்று தெளிவாக தெரிவிக்கிறது ஒளிரும் குர்ஆனின் 49-13 ஆவது வசனம். ""மனிதன் பெற்ற கண்ணியம் கௌரவம் பெருமை சிறப்பு அனைத்தும் இறைவனின் அருள்கொடை என்பதை உணர்ந்து இறையச்சத்துடன் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவோரே இறைவனின் கண்ணியத்திற்கு உடையவர்கள்'' என்று இவ்வசனத்திற்கு இறுதிதூதர் நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி.
 தூய்மையான அல்லாஹ் ஒவ்வொரு மனிதனையும் கண்ணியமாகவே வைத்திருக்கிறான். அவர்களைச் சங்கைப்படுத்தி உள்ளான். மனிதர்கள் மீது கருணையை பொழிகிறான். இதனை, இறைமறை குர்ஆனின் 17-70 ஆவது வசனம் கூறுகிறது "" ஆதாமின் சந்ததியை நாம் நிச்சயமாக கண்ணியப் படுத்தினோம். கரையில் கடலில் நாம்தான் அவர்களைச் சுமந்து செல்கிறோம். அவர்களுக்கு நல்ல உணவை அளிக்கிறோம். நாம் படைத்த உயிரினங்களில் மனிதனை உயர்வாக்கி இருக்கிறோம்''.
 உயிரினங்களில் மனிதன் மட்டுமே உணவைக் கைகளில் எடுத்து உண்கிறான். பிற பிராணிகள் வாயினால் கவ்வி விழுங்குகின்றன; அல்லது அசை போடுகின்றன. மனிதன் எழுத பேச, உணர, நன்மை தீமை அறிந்து நல்லன செய்ய, தீமையைத் தாண்டாது விலகி, ஆட்சிபுரிய, புதியன காண, அவற்றைப் பயன்படுத்தி நயமாய், நாகரிகமாய் வாழ மனிதனால் மட்டுமே முடியும். கண்டதை உண்ணும் பிற உயிரினங்கள் தூயது, தூய்மை அற்றது அனைத்தையும் தின்னும். ஆனால் மனிதன் அவனின் சுவைக்கும் சூழ்நிலைக்கும், தேவைக்கும் ஏற்ப பக்குவமாய் சமைத்து சாப்பிடுகிறான். இது மனிதனுக்கு அல்லாஹ் தந்த கண்ணியம்.
 தொழுபவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துகிறான். அவர்கள் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு நடந்து அவனின் திருப்தியே பொருத்தமென்று வாழ்பவர்கள். மனிதர்களில் அல்லாஹ்வின் மிக கண்ணியத்திற்குரியவர் யார்? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்விற்கு அதிகமாக அஞ்சுபவர் என்று பதிலுரைத்தார்கள் பாச நபி (ஸல்) அவர்கள். நூல்- புகாரி. இறையச்சத்தோடு வாழ்வது இவ்வுலகில் கண்ணியத்தைத் தந்து தாரளமான வாழ்வாதாரங்களை வழங்கி ஆயுளையும் நீடிக்கும். மறுமையில் மன்னிப்பையும் மகத்தான நற்பேற்றையும் நல்கும். இவற்றைத் தரும் இறைவன் கண்ணியமும் தாராள தன்மையும் தருபவன்.
 நல்ல நூல்களைத் தொடர்ந்து படிப்பவர்களையும் நல்ல நோக்கத்தோடு நற்கல்வி பயில்பவர்களையும் அல்லாஹ் கண்ணியப் படுத்துகிறான். இதனை, 96-3 ஆவது வசனம் நீங்கள் ஓதுங்கள். உங்கள் அல்லாஹ் மாபெரும் கொடையாளி. அவர்களின் பெருமையை உயர்த்துகிறான். அவர்களின் மதிப்பைக் கூட்டுகிறான். அவர்களின் நன்மைகளை பன்மடங்காக பெருக்கி நற்கூலி வழங்குகிறான் என்று கூறுகிறது.
 இவ்வுலகில் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களை மறுமையில் இறைவன் கண்ணியப்படுத்துகிறான் என்று 70- 35 ஆவது வசனம் கூறுகிறது. இந்த வசனம் கூறும் மறுமையில் கண்ணியம் பெறுபவர்கள் எவர் என்பதை 70- 22 முதல் 34 வரை உள்ள வசனங்கள் விவரிக்கின்றன. நிரந்தரமாக பேணுதலோடு தொழுபவர்கள், யாசிப்போருக்கும், யாசிக்க வெட்கமுற்று துன்பத்தை வெளிகாட்டாது ஒதுங்கி இருப்போருக்கும் உரிய பொருளை உரிய நேரத்தில் கொடுத்து உதவுபவர்கள், இறைவனை அஞ்சி வரம்பு மாறாது வகையறைக்குப்பட்டு உறுப்புகளைப் பேணி வாழ்பவர்கள், ஒப்படைக்கப்பட்ட பொருள்களை பாதுகாத்து ஒழுங்காக திருப்பி ஒப்படைப்பவர்கள், வாக்குறுதி மீறாதவர்கள், இவர்களே உள்ளும் புறமும் அல்லாஹ்விற்கு அஞ்சி அருஞ்செயல் புரிபவர்கள். இவர்களை இவ்வுலகிலும் இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டு, கவினுற வாழ்ந்து, புவி வாழ்வை முடித்த பின்னும் மறுமையிலும் இறைவனால் கண்ணியப் படுத்தப் படுபவர்கள்.
 இவர்களுக்குச் சொர்க்கத்தில் சுவையான கனிகள் கொடுக்கப்படும். ஒருவர் மற்றவரைப் பார்த்து பஞ்சணையில் அமர்ந்து மனம் மகிழ உரையாடுவார்கள் என்று உரைக்கிறது 37- 41 முதல் 44 வரை உள்ள வசனங்கள்.
 நாமும் இறைமறை இயம்பும் தயவும் நயமும் பாராட்டி ஒல்லும் வாயெல்லாம் ஓவாது நல்லன செய்து அல்லன அகற்றி அகிலத்திலும் அல்லாஹ்வின் அருளால் கண்ணியத்தோடு வாழ்ந்து மறுமையிலும் மாறாத கண்ணியம் பெறுவோம்.
 - மு.அ.அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com