புவனேஸ்வரிக்கு பூச்சொரிதல்!

புவனேஸ்வரிக்கு பூச்சொரிதல்!

தேவக்கோட்டையின் மேற்குப் பகுதியில் புளியமரத்தடி ஸ்டாப் (நிறுத்தம்) என்ற இடத்தில் காமன் பண்டிகை வெகுநாளாக கொண்டாடப்பெற்று வந்தது. இந்தப் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடை அமைத்து

தேவக்கோட்டையின் மேற்குப் பகுதியில் புளியமரத்தடி ஸ்டாப் (நிறுத்தம்) என்ற இடத்தில் காமன் பண்டிகை வெகுநாளாக கொண்டாடப்பெற்று வந்தது. இந்தப் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடை அமைத்து சூலாயுதத்தை வைத்து வெற்றிவேல் முனீஸ்வரராக வழிபாடு செய்து வந்தனர்.
 பின்னர், அந்தப் பகுதியில் இருந்த வடிவேல் ஆசாரி என்பவர் தனது நண்பனான சிற்பியிடம் புவனேஸ்வரி சிலை ஒன்றை செய்யச்செய்து தனது மர அறுவை மில்லில் வைத்திருந்தார். நாளடைவில் அனைவரும் கூடி வெற்றிவேல் முனீஸ்வரர் மேடையை விரிவுபடுத்தி ஸ்ரீ சுந்தரவிநாயகர், ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ வெற்றிவேல் முனீஸ்வரர், ஸ்ரீ சங்கிலிக்கருப்பர் ஆகிய தெய்வமூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தனர். பின்னர் ஒரு சிறிய ஆலயமாக அமைத்து கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்து ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளி காப்புக்கட்டி, ஆவணி முதல் வெள்ளியில் காலையில் பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து இரவில் பூச் சொரிதல் விழாவினை நடத்தி வருகின்றனர்.
 மேற்கு நோக்கிய சிறிய ஆலயம், அம்பிகை புவனேஸ்வரி மந்தகாசப் புன்னகையுடன் அபயவரத ஹஸ்தமாக மேலிரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கி இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டு தாமரை மலரின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பொழிகின்றார்.
 காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த ஆலயத்திற்கு எழுந்தருளிய ஒரு தருணத்தில் தமது அருளுரையில் இங்கே பொருளுக்கு மட்டுமல்ல அருளுக்கும் புவனேஸ்வரி என்று ஆசி வழங்கினார்கள். ஜகத்குரு பதரீ சங்கராச்சாரியார் ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள், காஞ்சி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தவத்திரு குன்றக்குடி அடிகளார், மானாமதுரை ஸ்ரீ ஞானசேகர சுவாமிகள், ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்தா மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துத் துறவிகள் என ஏராளமான தவசீலர்கள் ஆலயத்திற்கு விஜயம் செய்து அருள்பாலித்துள்ளார்கள்.
 இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 23 வரை எட்டு நாள்கள் திருவிழா சிறப்புற நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 23 -ஆம் தேதி காலை பால்குடம் எடுத்தலும், இரவு பூச்சொரிதலும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. விழா நாள்களில் அம்மனுக்கு தினசரி விசேஷ அலங்காரங்களும், இரவு தீப ஆராதனைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
 தொடர்புக்கு: 94869 65655.
 - இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com