பொருநை போற்றுதும்! 54 டாக்டர் சுதா சேஷய்யன்

திருநெல்வேலிப் பகுதியின் பஞ்சக் குரோசத் தலங்களில் ஆழ்வார்குறிச்சியும் ஒன்று.
பொருநை போற்றுதும்! 54 டாக்டர் சுதா சேஷய்யன்

திருநெல்வேலிப் பகுதியின் பஞ்சக் குரோசத் தலங்களில் ஆழ்வார்குறிச்சியும் ஒன்று.
 இந்தியாவில், நான்குப் பிரதேசங்களில் இவ்வாறான பஞ்சக் குரோசத் தலங்கள் உள்ளன. காசி (வாராணசி), உஜ்ஜயினி, கும்பகோணம், திருநெல்வேலி ஆகியவை இந்நான்குப் பிரதேசங்கள்.
 குரோசம் என்னும் சொல்லுக்குப் பற்பல பொருள்கள் உண்டு. மிக முக்கியமான பொருள் "ஒலி', "ஓசை', "கூப்பாடு' என்பனவற்றைக் குறிப்பதாகும். பின்னாட்களில், நீள அளவைக் குறிப்பதற்கும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இதன்படி, "யோஜனை' என்னும் தொலைவின் (சுமார் 7 முதல் 10.5 மைல் தொலைவு) நான்கில் ஒரு பங்கு, குரோசமாகும். சுமார் 1.5 முதல் 2 மைல் தொலைவு எனச் சொல்லலாம். அதாவது, "கூப்பிடு தொலைவு' என்பதற்கு இப்படிப் பெயர் வைத்திருக்கக்கூடும்.
 பஞ்சக் குரோசங்களின் தொலைவில் (ஒன்றுக்கொன்று ஐந்து குரோசங்களுக்குள்ளாக) அமைந்துள்ள சிவத் தலங்கள், பஞ்சக் குரோசத் தலங்கள் என்றழைக்கப்படுகின்றன. இத்தலங்களில் உள்ள அனைத்து வஸ்துக்களிலும், உயிருள்ள, உயிரற்ற என்ற பேதமின்றி அனைத்திலும் சிவபெருமான் உறைகிறார் என்பதாகக் கணக்கு. பஞ்சக் குரோசத் தலங்களில் வசித்தால், பாவம் செய்கிற எண்ணம் தலைப்படாது என்பார்கள்.
 பாவநாசம் பாவநாசநாதர் திருக்கோயில், சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி வன்னீச்வரர் திருக்கோயில், பாப்பான்குளம் ராமேச்வரர் திருக்கோயில், திருவாலீச்வரம் வாலீச்வரநாதர் திருக்கோயில் ஆகியவை இப்பகுதியின் பஞ்சக் குரோசத் தலங்கள் ஆகும். இவற்றில், பாப்பான்குளத்தையும் திருவாலீச்வரத்தையும் அகற்றிவிட்டு, கடையம் வில்வவனநாதர் திருக்கோயிலையும் திருப்புடைமருதூர் நாறும்பூநாதரையும் சிலர் சேர்க்கிறார்கள். எப்படியாயினும், ஆழ்வார்குறிச்சியின் மண்ணும் நீரும் தூசும் துகளும்கூட மகத்தானவை.
 அருள்மிகு அக்னீச்வரரின் அருள் எல்லோரையும் புனிதப்படுத்திவிடும் என்பதைக் காட்டுவதுபோல், இத்தலத்திலுள்ள நாயன்மார்களும் பிற ஊர்களின் நாயன்மார்களிலிருந்து வேறுபடுகிறார்கள். 63-வரும் என்னென்ன நிகழ்வுகளால் நாயன்மார் என்னும் அந்தஸ்து பெற்றார்களோ, அந்தந்த நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் விதமாகவே இவர்களின் சிலாரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 அக்னிதீர்த்தத்தில் மண்டபம் ஒன்றிருக்கிறது. சிவலிங்க மண்டபம். அக்னிதீர்த்தத்தில் நீர்வரத்து அதிகமாகி, மண்டபத்தை மூழ்கடித்தால், வெள்ளம் பெருகி விளைச்சலும் வேளாண்மையும் கூடுமாம்.
 "தென்னிந்தியாவின் ஹென்றி ஃபோர்ட்' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்ற தொழிலுலக மேதை எஸ். அனந்தராமகிருஷ்ணன் ஆழ்வார்குறிச்சிக்காரர். இவருடைய இரண்டு மகன்கள் ஏ.சிவசைலம் மற்றும் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழியாகவும் இவர்களின் வழித்தோன்றல்கள் வழியாகவும் தமிழ்நாட்டின் தொழில் துறையை ஆழ்வார்குறிச்சி ஆண்டு கொண்டிருக்கிறது.
 ஆழ்வார்குறிச்சியிலிருந்து கிழக்காகப் பயணித்து, மீண்டும் திருப்புடைமருதூர் பகுதியை அடைந்து, பொருநையாளின் கரைகளைத் தொட்டுவிடுகிறோம். நதி நல்லாளையே துணைகொண்டு, இவளின் கரைகளிலேயே பயணிப்போமா?
 பொருநையின் வடகரையில், அரியநாயகிபுரம், கோடகநல்லூர், பழுவூர், சுத்தமல்லி, நரசிங்கநல்லூர் போன்ற ஊர்கள்; தென் கரையில் சேரன்மாதேவி, பத்தமடை, கரிசூழ்ந்தமங்கலம்,மேலச்செவல், தேசமாணிக்கம், கோபாலசமுத்திரம், தருவை, முன்னீர்பள்ளம் போன்ற ஊர்கள்.
 அரியநாயகிபுரம் அருள்மிகு அரியநாயகி அம்பாள் உடனாய அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கொண்டுள்ள ஊர். இந்த ஊருக்கு அருகிலேயே அரியநாயகிபுரம் அணைக்கட்டும் அமைந்துள்ளது.
 (நினைவின் செம்மைக்காக: ஆங்கிலேய ஆட்சிக்கு முன்பாக நெல்லைச் சீமையை ஆண்ட பல்வேறு ஆட்சியாளர்கள், தாமிரவருணியின் தண்ணீரை வேளாண்மைக்குப் பயன்படுத்தும் நோக்கத்தோடு, அணைக்கட்டுகளைக் கட்டியிருந்தனர் என்பதனை முன்னரே கண்டோம். பொருநையின் தலைப்பகுதியிலிருந்து தொடங்கினால், தலை அணை, நதியுண்ணி அணை, கன்னடியன் அணை என்று இவை தொடரும். இந்த வரிசையில் நாலாவதாக அமைந்திருப்பதுதான் அரியநாயகிபுரம் அணைக்கட்டு).
 என்ன காரணம் பற்றியோ, பழம்பெரும் வரலாற்றாசிரியர்கள், இந்த ஊரை "அரியநாயகபுரம்' என்றே குறிப்பிடுகிறார்கள். அருகிலுள்ள அணைக்கட்டு யாரால் கட்டப்பட்டது என்று தெரியவில்லை. தளவாய் அரியநாத முதலியார் என்பது பிற்காலத்தவரின் ஊகம். இருந்தாலும், அவருடைய காலத்துக்கும் முன்பாகவே இந்த அணை இருந்ததாகத் தெரிகிறது.
 இந்த அணைக்கட்டிலிருந்து, ஆற்றின் இடது கரையில், அதாவது, வடபுறத்தில், கோடகன் கால்வாய் பாய்கிறது. சுமார் 29 கி.மீ. தொலைவுக்கு, கல்லூர், கோடகநல்லூர், பேட்டை, தச்சநல்லூர், திருநெல்வேலி டவுன் பகுதிகள் வழியாகச் செல்கிறது. இக்கால்வாய் (கோடகநல்லூர் வழியாகச் செல்வதால் இப்பெயர் என்கிறார்கள்). வழியில் பற்பல குளங்களும், இக்கால்வாய் நீரால் நிரம்புகின்றன. 3000 ஏக்கர் அளவிலான குளத்துப் பாசனம் உட்பட, சுமார் 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவு பாசனத்திற்கு உதவக்கூடியது கோடகன் கால்வாய். 1970-களிலேயே, பேட்டை மற்றும் நெல்லை டவுன் பகுதிகளில், கழிவுநீர் இக்கால்வாயில் கலப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சமீபகாலங்களில், கோடகன் கால்வாய் கழிவுநீர் கலப்புப் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
 - தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com