மன மாசு அகற்றும் மந்திரம்!

குஷா வம்சத்து மன்னர் காதி அனைத்து பொறுப்புகளையும் தன் ஒரே மகனான கெளசிகனிடம் ஒப்படைத்துவிட்டு வானபிரத்ராஸ்ரமம் சென்றுவிட்டார்.
மன மாசு அகற்றும் மந்திரம்!

குஷா வம்சத்து மன்னர் காதி அனைத்து பொறுப்புகளையும் தன் ஒரே மகனான கெளசிகனிடம் ஒப்படைத்துவிட்டு வானபிரத்ராஸ்ரமம் சென்றுவிட்டார். பொறுப்பை ஏற்ற மன்னர் கெளசிகன் நல்லாட்சி செய்து வந்தார். ஒருமுறை மன்னர் நாட்டைவிட்டு தன் பரிவாரங்களுடன் கிளம்பி காட்டிற்கு சென்று வேட்டையாடிய களைப்பில் சிறிது ஓய்வெடுக்க இடம் தேடியபோது, அந்த அடர்ந்த கானகத்தில் ஆஸ்ரமம் ஒன்று இருப்பதைப் பார்த்தனர். மன்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வசிஷ்ட மாமுனிவர் இருப்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டு அவரை வணங்கி மகிழ்ந்தார்.
கெளசிகனை வரவேற்ற வசிஷ்டர் இந்தக் குடிசையில் அனைவரும் உணவருந்த வேண்டுமென விண்ணப்பித்தார். கெளசிகனோ "எங்கள் பெரிய கூட்டத்திற்கு உங்களால் எப்படி உணவளிக்க முடியும் அந்த சிரமம் வேண்டாம்' என்றார். முனிவரோ, "சற்று பொருங்கள்' என அவரது ஆஸ்ரமத்திலிருந்த பசு மாட்டிடம் (காமதேனு) சென்று காதில் ஏதோ கூறினார். நொடிப் பொழுதில் அனைவருக்கும் அருமையான உணவு உடனே கிடைத்தது. அதிர்ந்த கெளசிகன்; இப்படிப்பட்ட பசு எனக்கு வேண்டுமென்றார். வசிஷ்டர் "அவளை தருவதற்கில்லை' என கூறிவிட்டார்.
கெளசிகரோ; இது வசிஷ்டரின் தவ வலிமையினால் மட்டுமே கிட்டியுள்ளது. அப்படிப்பட்ட தவத்தை நாம் மேற்கொண்டு அனைத்தையும் நாம் அடைய வேண்டுமென நாட்டைத் துறந்து கானகம் சென்று பிரம்மனை நோக்கி பலமுறை கடுந்தவம் மேற்கொண்டார். பிரம்மன் அவரது தவத்தினை மெச்சி கெளசிகருக்கு பலவற்றை தந்து அத்துடன் "பிரம்ம ரிஷி" என்ற பட்டத்தையும் தந்தார். பின் நான் கொடுத்தது போதாது; வசிஷ்டர், "உன்னை போற்றி அவர் வாயால் "பிரம்ம ரிஷி" என்று அழைக்க உன் தகுதியை தயார் செய்துக்கொள்' என்றார்.
வேறு வழியின்றி கெளசிகர், வசிஷ்டரிடம் சென்றார். தான் வருவதைக்கூட கண்டு கொள்ளாமல்; தன் மனைவி அருந்ததியுடன் வசிஷ்டர் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து கோபம் கொண்ட கெளசிகர், வசிஷ்டரின் தலையில் அடிக்க கையை ஓங்கினார்; ஆனால் விலகிய வசிஷ்டரின் காலடியில் தடுமாறி விழுந்த கெளசிகரை, வசிஷ்டர் தன் கையால் கீழே விழாமல் பிடித்தார். தன் மீது வசிஷ்டரின் கைபட்டவுடன் ஏதோ ஓர் ஈர்ப்புசக்தி ஏற்பட்டு சமாதி நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்தார். அப்போது அவரது ஆதார ஸ்தானமான ஆழ்மனதிற்குள் ஒர் மந்திர ஒலி ஒலித்தது. அதுவே காயத்ரி மந்திரமாகும். இப்படி வெளிவந்தவள்தான் காயத்ரி தேவியாவாள்! காயத்ரி தேவியின் அருள் கிட்டிய கெளசிகரை; "விஸ்வாமித்ர பிரம்ம ரிஷி" என வசிஷ்டர் தன் வாயால் ஆமோதித்தார். அதுமுதல் விஸ்வாமித்ர மகரிஷி என்ற பெயர் அமலுக்கு வந்தது.
ஷத்திரியகுல விஸ்வாமித்திரருக்கு காயத்ரி தேவியே நேரடியாக இந்த மந்திரத்தை உபதேசித்தாலும் காலப்போக்கில் ஒரு சாரார் இந்த மந்திரத்தின் மேன்மையை உணர்ந்து இதனை தீவிரமாக ஓதி, தாங்களும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு, பிறருக்கும் ஓதுவித்து பலரும் பயனுறும் வண்ணம் கொண்டு சென்றனர். இது அனைத்து பிரிவினருக்கும் பொதுவான மறை ஆகும். சரியான ஒலி ஏற்ற இறக்கத்துடன் பற்றுடன் யார் வேண்டுமானாலும் இந்த காயத்ரி மந்திரத்தை குருமுகமாக செய்யலாம்.
ஓம் பூர்: புவ: ஸுவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்!!
இதன் பொருள்: "நம்முடைய புத்தியை, ஒளிமிக்கதாகத் தூண்டும், இந்த உலகினை காக்கும் சக்தியை தருகின்ற சூரிய பகவானே உன்னை தியானிக்கிறோம்" என்பதாகும். மொத்தம் 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். ஒம் என்பது ப்ரணவம். புஹூ; புவஹா; சுவஹா;" என்பது வியாஹ்ருதீ மந்திரம் ஆகும். "ஓம் தத் சவிதுர் வரேண்யம்" என்பது ருக் வேத மந்திரம், "பர்கோ தேவஸ்ய தீமஹி' என்பது யஜுர் வேத மந்திரம், "தியோ: யோந: ப்ரசோதயாத்" என்பது சாம வேத மந்திரமாக இணைத்துக் கூறுகின்றனர். காயத்ரி என்பதற்கு தன்னை ஜெபிப்பவனை காப்பவள் என்று பொருள். காயத்ரி "மாதா' என்பதால்; தாய் வடிவாக அவளை உபாசிக்க வேண்டும்; அன்பின் உருவமே தாய் என்பதால் அவள் நமக்கு நன்மை மட்டுமே செய்வாள் என்று வேதம் கூறுகிறது. காயத்ரி மந்திரத்தை சொல்வதால் நம் சிந்தை ஒருநிலைப்பட்டு; சித்தம் சுத்தியடையும்; அதன் தொடர்ச்சியாக நம் எண்ண அலைகள் தெளிவாகி, மாசற்ற புத்துணர்வு அடைவதால் நமக்கு நல்வழி கிட்டி அவ்வழியில் நம்மை செல்லத் தூண்டுகிறது.
ஸ்ரீ யோகீச்வர யாக்ஞவல்கிய மகரிஷிக்கு நேரில் காட்சி கொடுத்து அவரை சூரியபகவானிடம் வேதம் கற்றுக்கொள்ளுமாறு அனுக்ரஹித்தது மாதா காயத்ரி தேவியே. மேலும் காயத்ரி மந்திரம், வேதத்தின் சாரம் என்றும், சித்த சாந்திக்கு காரணமாக உள்ளது என்றும் இதுபற்றி மகாசுவாமிகள் தனது அருளாசி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சிராவண மாதத்தில் அதாவது தமிழ் ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் அநேகமாக பெளர்ணமியன்று "ஆவணி அவிட்டம்" என்று விமரிசையாக கொண்டாடப்பட்டு ஹோமங்கள் செய்து பூணூல் மாற்றப்படும். மறுநாள் "காயத்ரி ஜபம்" சங்கல்பத்துடன் 1008 முறை செய்ய வேண்டுமென்பது மரபு. தெலுங்கு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இதனை "காயத்ரி பத்யாமி', "காயத்ரி ப்ரதிபாடா' என்பர். இவ்வருடம் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி ஆவணி அவிட்டமும், 16 -ஆம் தேதி (இன்று) காயத்ரி ஜபமும் அமைகிறது.
- எஸ். எஸ். சீதாராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com