அபய பயணத்தில் ஆரம்பம்

இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி 1441 -ஆம் ஆண்டு 1.9.2019 - இல் பிறக்கிறது. ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாற்றை ஆய்வோம்.
அபய பயணத்தில் ஆரம்பம்

இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி 1441 -ஆம் ஆண்டு 1.9.2019 - இல் பிறக்கிறது. ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாற்றை ஆய்வோம்.
 இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறை கட்டளையை ஏற்று உறுதியாக மதீனாவிற்குச் சென்றதைச் செப்புகிறது செம்மறை குர்ஆனின் 8-30 ஆவது வசனம். ஏக இறை கொள்கையை ஏற்காத மோக வேகத்தில் தாகம் தீர்க்க மது அருந்தும் மமதையில் வாழ்ந்த மகா கொடிய குறைஷிகளின் கொலை திட்ட முற்றுகையை முறியடித்து முதலில் நபித்துவத்தை ஏற்ற மூத்த தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் யத்ரிப் (அக்கால பெயர்) நகருக்கு ஹிஜ்ரத் புறப்பட்டார்கள். நபித்துவம் பெற்ற 13- ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 26, 27 - இல் 9.9.622 ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.
 கொடிய குறைஷியர்கள் விடிந்ததும் வீசும் வாளால் தலையை கொய்வார்கள் என்று அறிந்தும் அலி (ரலி) அவர்கள் தன்னுயிரைத் தியாகம் செய்து அண்ணல் நபி (ஸல்) அவர்களின் படுக்கையில் படுத்தார்கள். முற்றுகையிட்ட மூடர்கள் முத்து நபி (ஸல்) அவர்கள் தப்பியது தெரிந்ததும் தேடி ஓடினார்கள். அலி (ரலி) அவர்களும் பிழைத்தார்கள்.
 ஹிஜ்ரத்தில் நபி (ஸல்) அவர்களும் உடன் சென்ற தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களும் தௌர் குகையில் மூன்று நாள்கள் தங்கினர். பயண உணவுகளைத் தயாரித்து ஆயிஷா (ரலி) அவர்கள் தோல் பையில் வைத்து சகோதரி அஸ்மா (ரலி) அவர்களிடம் கொடுத்து அனுப்புவார்கள். கர்ப்பவதியான அஸ்மா (ரலி) மலை மீது ஏறி உணவைக் கொண்டு சென்று கொடுத்தார்கள்.
 முஸ் அப் பின் உமைர் (ரலி) முன்னரே மதீனாவிற்குச் சென்று மதீனாவில் வாழ்ந்தவர்களுக்கு வள்ளல் நபி (ஸல்) போதித்த வாழும் வழிகாட்டி நெறிகளைக் கற்று கொடுத்து மேன்மை ஆக்கினார்கள். அந்த மேன்மை தன்மையினால் மதீனா மக்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு அவர்களின் தேவைகளைத் துறந்து வந்தவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை தந்து பொருள்களை அள்ளி வழங்கினர். பள்ளிவாசல் கட்டுவதையும் பராமரிப்பதையும் மக்களுக்கு மத்தியில் இரக்கம் காட்டி அபயம் தேடுவோருக்கு ஆதரவு அளிக்கவும் கற்றுத் தருகிறது ஹிஜ்ரத்.
 ஹிஜ்ரி 8 -ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 22- இல் (12.1.630) மாநபி (ஸல்) அவர்கள் குறைஷியரிடமிருந்து மக்காவை வென்றார்கள். அதன்பின் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வது முடிந்தது.
 ஆண்டு கணக்கு ஆதிகாலம் தொட்டே இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகளின் அடிப்படையில் காலம்தோறும் கணக்கிடப்பட்டன. முதல் மனிதர் ஆதம் நபி பூமியில் இறங்கிய நாளை ஆரம்பமாக கொண்டு ஆண்டைக் கணக்கிட்டனர். பின்னர், நூஹ் நபி காலத்து வெள்ளப்பிரளயம், இப்ராஹீம் நபி வருகை, மூசா நபி நைல் நதியைக் கடந்தது, ஈசா நபி பிறப்பு (கி.பி. ஆண்டு).
 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பிற்கு முன் யேமன் அரசன் அப்ரஹா யானைப் படையுடன் கஃபாவைத் தாக்க வந்து அபாபீல் பறவைகள் எறிந்த சிறு கற்களால் அழிந்ததை நினைவு கூறும் ஆமுல்- பீல்- யானை ஆண்டு நடைமுறையில் இருந்தது.
 இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் நான்கு ஆண்டுகள் வரை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபி பட்டம் பெற்ற நாளிலிருந்து ஆண்டு கணக்கிடப்பட்டது. நூல்- உம்தத்துல் காரி. யேமனின் ஆளுநர் அபூமூஸா அஷ் அரி (ரலி) மடலில் ஆண்டு மட்டும் குறிப்பிடுவது குழப்பத்தை உண்டாக்குகிறது. அரசு ஆணைகளில் முந்தியது எது? பிந்தியது எது என்பதைப் புரிந்து கொள்ள தேதி, மாதம் குறிப்பிட வேண்டிய அவசியத்தை ஆராய ஆலோசனை கூறினார். உமர் (ரலி) அனைவரிடமும் ஆலோசனை கேட்டார்கள். நடைமுறையில் கடைபிடிக்கப்படும் நபி பட்டம் பெற்ற நாளையே ஆண்டின் ஆரம்பமாக தொடர அறிவுரை பகர்ந்தார்கள் தல்ஹா (ரலி). மாநபி (ஸல்) அவர்களின் மரண நாளில் இருந்து ஆண்டைக் கணக்கிட ஆலோசனை கூறினார்கள் ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வரலாற்று திருப்புமுனையான ஹிஜ்ரத்திலிருந்து ஆண்டைத் துவங்க அறிவுறுத்தினார்கள் அலி (ரலி). அறிவிப்பவர்- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்- உம்தத்துல் காரி.
 ஹிஜ்ரத் துவங்கியது ஸபர் பிறை 26-27. மா நபி (ஸல்) அவர்கள் மதீனாவை அடைந்தது ரபியுல் அவ்வல் பிறை 12 (24.9.622) ஸு அய்ப் நபி இளைஞர் மூசா நபியை நபித்துவம் பெறுவதற்கு எட்டு ஹஜ் காலம் பணி செய்ய பணித்தார்கள். மூசா நபி காலத்திற்கு முன்னிருந்தே முஹர்ரம் ஆண்டின் முதல் மாதமாக இருந்ததையும் இறுதி மாதமாக துல்ஹஜ்ஜும் இருந்ததை இந்த நிகழ்ச்சி இயம்புகிறது. இதனை ஒட்டியே ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரத்தில் துவங்கி இறுதி மாதம் துல்ஹஜ் மாதம் உள்ளது.
 ஹிஜ்ரி 15- ஆம் நூற்றாண்டின் துவக்கம் குறித்த இந்திய அஞ்சல் தலையை 3.11.1980 அன்று தில்லியில் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார்.
 அபய பயணத்தில் ஆரம்பமான ஹிஜ்ரி சகாப்தத்தின் 1441- ஆம் ஆண்டில் அகிலம் முழுவதும் அமைதி நிலவ ஆக்க பணிகளில் ஊக்கம் ஊட்டி உலகம் உய்ய உறுதி பூணுவோம்.
 - மு.அ.அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com