எத்தனை எத்தனை கணபதிகள்!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கிழக்குக்கோட்டைக்கு அருகில் உள்ளது "பழவாங்கடி விநாயகர் கோயில்!
எத்தனை எத்தனை கணபதிகள்!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கிழக்குக்கோட்டைக்கு அருகில் உள்ளது "பழவாங்கடி விநாயகர் கோயில்! இக்கோயிலுக்கு அருகில்தான் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
 புராணங்களில் கூறியுள்ளபடி கணபதிக்கு எத்தனை விதமான திருவுருவங்கள் உண்டோ ஏறக்குறைய அத்தனை திருவுருவங்களையும் இந்த பழவாங்கடி விநாயகர் கோயிலில் காணலாம். இக்கோயில், ராணுவ வீரர்களால் உருவாக்கப்பட்டு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது.
 திருக்கோயிலின் நுழைவாயிலின் முகப்பில் "ஓம் ஸ்ரீ கணபதயே நமஹ' என்று எழுதப்பட்ட பெயர் பலகைக்கு மேலே ஒரு மாடத்தில் கணபதி நின்ற திருக்கோலத்தில் சாலையில் செல்வோருக்கு அருள்காட்சி தருகிறார். இவருக்கு பின்புறமாக மூன்று நிலை ராஜ கோபுரம். அக்கோபுரத்தின் முன்பாக மூன்று கணபதிகள் வெவ்வேறு கோலத்தில் காட்சி தருகின்றனர். நுழைவாயிலுக்கு அருகிலேயே சிதறு தேங்காய் உடைக்கும் இடம் உள்ளது. அதன் மேற்புற கூரையில் நவக்கிரக நாயகர்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் வித்தியாசமாக, சனீஸ்வரபகவானுக்கு பதிலாக ஐயப்பன் காட்சி தருகிறார்.
 இங்கே மூலவராக விளங்கும் கணபதியின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. சிறிய மண்டபம், மேலே கூம்பு வடிவில் செப்புத் தகடு வேயப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்களும் கல்லில் செதுக்கப்பட்ட சற்றுப் பெரிய அளவிலான மூஞ்சுறுகளும் கழுத்தில் பெரிய மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்றன.
 இங்குள்ள மண்டபத்தைச் சுற்றி கண்ணையும் கருத்தையும் கவரும் கணபதியின் பலவிதமான திருவுருவங்கள் சுவர்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
 கருவறைக்கு அடுத்து, கோயில் மண்டபத்தின் மேல் சுவரில் சிறு சிறு மாடங்கள் அமைத்து ஏராளமான கணபதிகளின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். எல்லாவித கணபதி மூர்த்தங்களும் அழகழகாக வடிக்கப்பட்டுள்ளன.
 இத்திருக்கோயில் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். மேலும் இங்கு, காலையிலும் மாலையிலும் அரைமணி நேர இடைவெளியில் சில குறிப்பிட்ட நேரங்களிலேயே அர்ச்சனை செய்கிறார்கள். உரிய கட்டணம் செலுத்தினால் அவர்களே தேங்காய், பழம், பூ வைத்து அர்ச்சனை செய்து கொடுக்கிறார்கள்.
 இங்கு விடியற்காலை 5.30 மணிக்கும் மாலையில் 6.50 மணிக்கும் அபிஷேக, தீபாராதனைகள் நடைபெறும். அச்சமயத்தில் கேரள மாநிலத்தின் பாரம்பரிய இசைக்கருவிகளான செண்டை, திமிலை தாளம் ஒலிக்க, கொம்பும் நாயனமும் சேர்ந்திசைக்க, கருவறையைச் சுற்றி நான்கு புறமும் உள்ள தொங்கும் மணிகளை பக்தர்கள் அடிக்க, அங்கே தெய்வ சாந்நித்யம் பெருகி ஓடும்.
 கணபதியின் கருவறையை சுற்றி வந்தால் முதலில் சாஸ்தா வீற்றிருப்பதைக் காணலாம். அவருக்கு எதிரில் உள்ள நீண்ட செவ்வக தட்டுகளில் ஏராளமான அரைமூடித் தேங்காய்கள் வைக்கப்பட்டு அதில் தீபங்கள் ஏற்றி வைத்திருப்பதைக் காணலாம். இதனை, "நீராஞ்சனம்' என்கிறார்கள். சனிக்கிழமைகளில் காலை மாலை இருவேளைகளிலும் உண்டு. மற்ற நாள்களில் மாலை நேரத்தில் மட்டும் நீராஞ்சனம் உண்டு.
 பிரகாரத்தின் மற்றொரு மூலையில் துர்க்கா தேவி வெள்ளிக்கவசம் அணிந்து காட்சி தருகிறார். அருகில் உள்ள சுவரில் திருமுருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் அமைந்துள்ளார்.
 இங்கே கணபதி ஹோமம் தினசரி நடக்கிறது. சந்தனத்துடன் கணபதி ஹோமம் பிரசாதம் பக்தர்களுக்கு தரப்படுகிறது.
 இக்கோயிலில் பக்தர்களின் பிரார்த்தனைக்கேற்ப சகஸ்ரநாம அர்ச்சனை, அஷ்டோத்திர அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. கணபதிக்கு நிவேதனமாக, அப்பம், மோதகம், வடை, நெய் பாயசம், பால் பாயசம் படைக்கப்படுகின்றன. பிரசித்திப் பெற்ற இப்பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. கம்ப விளக்கு ஏற்றுவதாகவும் தீபாஞ்சலி செய்வதாகவும் பல பிரார்த்தனைகள் உண்டு.
 - டி.எம். இரத்தினவேல்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com