ஜாதிக்காய் எல்லாம் கடுக்காய்களாக மாறின..!

ஜாதிக்காய் எல்லாம் கடுக்காய்களாக மாறின..!

விநாயகப்பெருமானை ஞானக்கூத்தர் என்ற தெய்வப்புலவர், ஆழ்ந்து அகன்ற நுண்ணிய பொருளாய் உள்ள பிள்ளையார் செல்வமும் கல்வியும் தழைக்கச் செய்வார். தீயவற்றை அழிப்பார்

விநாயகப்பெருமானை ஞானக்கூத்தர் என்ற தெய்வப்புலவர், ஆழ்ந்து அகன்ற நுண்ணிய பொருளாய் உள்ள பிள்ளையார் செல்வமும் கல்வியும் தழைக்கச் செய்வார். தீயவற்றை அழிப்பார். நமது உள்ளத்தினைப் பழுக்க வைப்பார் என்று பாடுகிறார்.
 மனம் பழுத்தவர்க்கே முக்தி நிலை கிட்டும். பக்குவமானவர்கள் தன்னைப் படியாவிடினும், கள்ள விநாயகர் அவர்களுக்கு நற்கதியை அளித்திடுவார் என்பது கருத்து.
 இப்படிப்பட்ட விநாயகர் ஒரு சமயம் தனது தும்பிக்கையால் விபூதியைத் தொட்ட மாத்திரத்தில் அருள் அவ்விபூதியில் புகுந்தது. ஒரு குஷ்டரோகி ஒருவர் தனது நோய் தீர முருகனிடம் சென்று சரணடைந்தார். அப்போது முருகன் அந்த தொழுநோயாளியின் கையில் விபூதியைக் கொடுத்து, "இதை விரல்களால் இறுகி மூடியபடியே விநாயகரிடம் செல்' என்றார். அவனும் அவ்வாறே செய்தான். அப்போது விநாயகர் தனது துதிக்கையை நீட்டி, அந்த விபூதியைத் தொட்டுத் தடவிக் கொடுத்தார். விநாயகர் தொட்ட விபூதியை அந்த தொழுநோயாளி அனுதினமும் பூசிவர அவன் நோய் குணமானது.
 இவ்வளவு சிறப்புப்பெற்ற விநாயகருக்கு திருக்காரவாசல் என்ற திருத்தலத்தில் ஒரு கோயில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்து தடத்தில் இத்தலம் உள்ளது. ஒரு காலத்தில் இத்தலம் அமைந்துள்ள இடத்தில் "காரகில்' என்று சொல்லக்கூடிய மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதனால் இந்த ஊர் திருக்காரகில் என்று அழைக்கப்பட்டது. பின்நாளில் இதுவே மருவி இப்போது திருக்காரவாசல் என்ற பெயரில் சிறப்புப் பெற்று விளங்குகிறது.
 ஒரு சமயம், வணிகன் ஒருவன், ஜாதிக்காய் மூட்டைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்யச் சென்றான். அவ்வழியே செல்லும்போது அங்கே உள்ள விநாயகருக்கு சுங்கம் கேட் இருந்தது. சுங்கவரி கட்டிச் செல்ல வேண்டிய வணிகன், தனது வண்டியில் உள்ள மூட்டைகள் ஜாதிக்காய் மூட்டை என்றால் அதற்கு வரி அதிகம் விதித்து விடுவார்கள் என்று கருதி, அவை கடுக்காய் மூட்டைகள் என்று பொய் சொல்லி குறைந்த வட்டி செலுத்திச் சென்றான்.
 வணிகன் விநாயகரை ஏமாற்றினான். விநாயகர் விடுவாரா? வணிகனின் ஜாதிக்காய் மூட்டைகளை கடுக்காய் மூட்டைகளாக மாற்றிவிட்டார். மூட்டைகளைப் பிரித்து பார்த்து ஏமாந்த வணிகன், தவறை உணர்ந்து "வரிவிநாயகரை' வழிபட கடுக்காய் மூட்டைகள் ஜாதிக்காய் மூட்டைகளாக மாறின. இதனால் இப்பிள்ளைகளுக்கு கடுக்காய் பிள்ளையார் என்று பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
 தேவாரத் திருத்தலங்களில் இது 182- ஆவது தலமாகும். சம்பந்தரால் போற்றப்பட்ட காவேரித் தென்கரைத் தலம் இது.
 இக்கோயில் பிரகாரத்தில் விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி, பைரவர் சந்நிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் திருமேனிகள் அமைதுள்ளன. இங்கு மூலவரின் திருப்பெயர் அருள்மிகு கண்ணாயிர நாதேஸ்வரர். மூலவர் லிங்கத் திருமேனியுடனும் அம்பாள் அருள்மிகு கயிலைநாயகி நின்ற திருக்கோலத்திலும் அமைந்து அருள்கின்றனர்.
 இவ்வாலய பிரம்ம குளத்தின் வடகரையில் கடுக்காய் பிள்ளையார் அமர்ந்த திருக்கோலத்தில் அமைதியாய் சேவை சாதிக்கிறார். இந்த விநாயகரை தரிசிப்பதால் தீராத நோய்கள் தீருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
 இக்கோயிலில் தரப்படும் முக்கூட்டு மூலிகைத் தைலத்தை தலையில் தேய்த்து சேஷ தீர்த்தத்தில் நீராடி, பிறகு பிரசாதமாகத் தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், கண்நோய்கள் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்!
 விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி போன்ற நாள்கள் இங்கு விசேஷம்.
 - ராமசுப்பு
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com