சங்க காலத்தில் கார்த்திகை திருநாள்!

அடைமழைக் காலமான ஐப்பசித் திங்கள் கழிந்து அடுத்தபடியாக வருகின்ற மாதம் கார்த்திகை மாதமாகும்.
சங்க காலத்தில் கார்த்திகை திருநாள்!

அடைமழைக் காலமான ஐப்பசித் திங்கள் கழிந்து அடுத்தபடியாக வருகின்ற மாதம் கார்த்திகை மாதமாகும். தொடர்ந்து பெய்த மழையினால் பூமியும் வானமும் குளிர்ந்து சில்லென்று காற்று வீசும் காலத்தில் ஒளியும் வெப்பமும் தேவை என்பதை அழகாகவும் மங்கலமாகவும் வெளிப்படுத்தும் திருநாளே கார்த்திகைத் திருநாளாகும்.

இருளிலும் குளிரிலும் அல்லல்படும் உயிர்களுக்கு ஒளியும் வெப்பமும் தந்து வழி காட்டும் பொருட்டே, நம் பண்டைத் தமிழகத்தில் கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலையிலும் மாலையிலும் வீடுகளின் முன்பாக வரிசையாக விளக்கேற்றி வைக்கும் வழக்கம் இருந்தது. அகநானூறு, நற்றிணை, களவழி நாற்பது ஆகிய சங்க இலக்கியங்களில் அறுமீன் என்று அழைக்கப்பட்ட கார்த்திகை நட்சத்திரமும் முழுநிலவு நாளும் ஒன்று சேரும் நாளைக் கார்த்திகைத் திருநாளாகக் கொண்டாடும் வழக்கம் சங்ககாலத்து மக்களிடையே இருந்ததை சங்கப் பாடல்களில் காணலாம்.
 ஒத்த அன்புடைய ஓர் இளம் பெண்ணும் இளைஞனும் தங்கள் ஊரையும் சுற்றத்தாரையும் விட்டு சுட்டெரிக்கும் வெயிலில் வெம்மை மிகுந்த கானகத்தின் வழியே செல்கின்றனர். அப்போது அவர்கள் காணும் காட்சி:
 நீரற்ற காட்டாற்றின் கரையோரம் இருந்த மரங்களின் கிளைகள் தாழ்ந்திருக்க, அவற்றின் நிழலில் சற்று உயர்ந்த மணல் மேடுகள் திட்டுத் திட்டாக ஆங்காங்கு காணப்படுகின்றன. அங்கு நீண்டு வரிசையாக நின்ற இலவ மரங்களின் கிளைகளில் உள்ள எல்லா அரும்புகளும் செவேலென்று அழகாகப் பூத்திருக்கின்றன. இம்மரங்கள் பூக்களைச் சுமந்தவாறு நின்ற காட்சி, இளம் பெண்கள் கூடி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏற்றி வைத்த கார்த்திகை விளக்குகளின் நெடிய வரிசை போலக் காட்சியளித்ததாக, அகநானூறு பாடலில் ஒளவையார் கார்த்திகை திருநாள் காட்சியாக காட்டுகிறார் (அகம் - 11).
 இதே நூலில் நக்கீரர் பாடியுள்ள ஒரு பாட்டில் வாழை மரங்களும் மா மரங்களும் சூழ வயலையொட்டி இருந்த வீட்டில் கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட்ட விதம்:
 அது, அண்மையில் திருமணம் நடந்து முடிந்திருந்த திருமண வீடு. திருமண வீட்டிற்கே உரிய மலர்கள், சந்தனம், பழங்கள், இன்சுவைப் பண்டங்கள் இவற்றின் மணம் இன்னும் வீட்டை விட்டு நீங்கவில்லை. திருமணம் முடிந்து அந்த வீட்டிற்கு வந்திருக்கும் புதுமணப் பெண் நறுமணத் தைலம் பூசித் தலை முழுகிக் குளித்ததால் மணம் கமழும் உலர்ந்த கூந்தல் முதுகில் பரவிக் கிடக்க, தன் தோழியரான சிறுமிகளுடன் பசிய சோலை வழியாக வயல்வெளிக்குச் செல்கிறாள். அங்கு, நன்கு விளைந்து முற்றித் தாள் சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்களை முறித்துக் கட்டாகக் கட்டி வீட்டிற்குக் கொண்டு வருகிறாள். கதிர்களை அடித்து அந்த நெல்லை உரலில் கொட்டி உலக்கையால் குற்றி அவல் தயாரிக்கிறாள். பிறகு, படை படையாக மண்ணைக் குழைத்து வைத்து செய்யப்பட்ட பெரிய அடுப்பில் ஒரு பானையை வைத்து அதில் பாலை ஊற்றி உலையாக வைத்து அவள் தயாரித்த அவலைக் கொட்டி இனிமையான பொங்கல் தயாரித்து கார்த்திகை திருநாள் அன்று, தான் தயாரித்த பொங்கலை எல்லோருக்கும் வழங்குகிறாள்.

இவ்வாறு, புதரில் மறைந்திருக்கும் குறுமுயலும் நன்றாகப் புலப்படும்படியான பால்ஒளி வீசும் முழுநிலவு நாளும் கார்த்திகை நட்சத்திரமும் ஒன்று சேரும் கார்த்திகைத் திருநாளில் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டாடி மகிழும் பொருட்டு, தன்னைப் பிரிந்து சென்ற கணவன் விரைவில் வீடு திரும்பி வருவார் என்று தன் தோழியிடம் கூறுகிறாள் ஓர் இளம் பெண் (அகம் - 141).
 மேலும், மலைச் சிகரங்களின் மீது கார்த்திகை விழாவிற்கு ஏற்றி வைக்கப்படும் விளக்குகளைப் போன்று அரும்பற மலர்ந்த இலவ மரங்கள் நிறைந்த மலைகள் குறித்தும் பாடப்பெற்ற அகநானூறு (அகம் - 185) பாடலிலும் நற்றிணை (202) பாடல்களிலும் கார்த்திகை விளக்கு மலைமீது ஏற்றி வைக்கப்பட்டதைக் குறித்து கூறப்பட்டுள்ளது.
 சங்க காலத்துத் தமிழின மக்கள் மலைகளின் சிகரங்கள் மீதும், தெருவிளக்கு கம்பங்கள் மீதும், வீடுகளின் முன்பாகவும் கார்த்திகைத் திருநாளன்று வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து, அவல் பொங்கல் பொங்கிக் கொண்டாடும் வழக்கம் நிலவியதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிந்து மகிழ்கிறோம்.
 - இரா. மலர்விழி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com